செய்திகள்

மைத்திரி – 2015 – 2018

யதீந்திரா
மைத்திரி ஏன் இவ்வாறு நடந்துகொள்கின்றார்? மைத்திரியின் அண்மைக்கால நடவடிக்கைகளை முன்னிறுத்தி சிந்திக்கும் ஒருவரிடம், இவ்வாறானதொரு கேள்வி எழுவது இயல்பே! அதிலும் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் இவ்வாறான கேள்வி சற்று ஆவேசமாகவே எழுகிறது. சில தினங்களுக்கு முன்னர் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கிழக்கு தமிழர்கள் மத்தியில் ஆங்காங்கே அதிருப்தி வெளிப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த காலங்களில் ஹிஸ்புல்லா தெரிவித்திருந்த சில அபிப்பிராயங்களை பலரும் முகநூலில் பதிவிட்டிருந்தனர். கூட்டமைப்பின் மீதுள்ள கோபத்தின் காரணமாகவே மைத்தரி இவ்வாறானதொரு நியமனத்தை செய்திருக்கிறார் என்பது கூட்டமைப்பைச் சேர்ந்த சிலரது அபிப்பிராயமாக இருக்கிறது. அது உண்மையாகவும் இருக்கலாம் ஏனெனில் அண்மையில் ஏற்பட்ட கொழுப்பு அதிகார நெருக்கடியின் போது, கூட்டமைப்பு மைத்திரிக்கு எதிராக செயற்பட்டிருந்தது. நீங்கள் இதில் விலகிநில்லுங்கள் என்று மைத்திரி மிகவும் வினயமாக கேட்டிருந்தார். ஆனால் அதற்கு கூட்டமைப்பு இணங்கவில்லை. மைத்திரி தொடர்பில் கூட்டமைப்பு கவலைப்படாத போது மைத்திரி ஏன் கூட்டமைப்பு தொடர்பில் கவலைப்பட வேண்டும்? மைத்திரி இதனை எதற்காக மேற்கொண்டார் என்பதற்கு அப்பால், கிழக்கில் முஸ்லிம் ஒருவரை ஆளுனராக நியமித்தமை தொடர்பில் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதானது எந்தளவு தூரம் சரியானது? இவ்வாறான நியமனங்களை சிங்களத் தரப்பு ஒரு தந்திரோபாயமாகக் கூட மேற்கொள்ளலாம். அதற்கு தமிழர்கள் பலியாவிடவும் கூடாது.

2015 ஜனவரி 8 இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் உங்களுக்கு நினைவிருக்கலாம். மைத்திரி தொடர்பில் அளவுக்கதிகமான நம்பிக்கைகள் ஊட்டப்பட்ட காலமது. 1994இல் சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட போதும் இவ்வாறானதொரு அரசியல் பரவசம் தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்டது. அதன் பின்னர் மைத்திரி விடயத்திலும் இந்த பரவசம் காண்பிக்கப்பட்டது. சந்திரிக்கா விடயத்தில் காண்பிக்கப்பட்ட அரசியல் பரவசம் அதிக காலம் நீடிக்கவில்லை. சந்திரிக்கா நம்பவைத்து ஏமாற்றிவிட்டார் என்றவாறான ஆத்திர வார்த்தைகளை பின்னர் கேட்கடமுடிந்தது. மைத்திரி விடயத்திலும் தற்போது அதே கோப வார்த்தைகளைத்தான் கேட்கமுடிகிறது. எங்கள் உப்பை தின்றுவிட்டு, எங்கள் முதுகில் நீ குத்திவிட்டாய் என்று சுமந்திரன் கூறுகிறார். சாதாரண மக்களை உணர்ச்சிவசப்படுத்துவதற்கு இவ்வாறான வாதங்கள் பயன்படலாம் ஆனால் அரசியல் ரீதியில் நோக்கினால் இது ஒரு சிறுபிள்ளைத்தனமான வாதம். உண்மையில் யாரும் யாரையும் ஏமாற்றவில்லை மாறாக அவரவர் தங்களின் அரசியலை செய்கின்றனர்.

Maithri-Ranil-Chandrika1

உண்மையில் அரசியலில் ஏமாற்றிவிட்டார்கள் என்னும் கூற்று சரியானதா? அரசியலில் அரிச்சந்திரன்கள் இருப்பதாக எவரேனும் நம்பினால் அது, அதனை நம்புபவர்களின் பிரச்சினைதானே! தமிழில் சுடுகுது மடியை பிடி – என்று ஒரு கூற்றுண்டு. சுடும் ஒன்றை ஏந்திவிட்டு, அது சுடுகிறது என்பதை உணர்ந்ததும் ஜயோ சுடுகிறதே என்று, சத்தம் போடுவதைத்தான் இவ்வாறு கூறுவார்கள். அரசியலில் ஒன்றை அல்லது ஒருவரை நம்பிவிட்டு பின்னர் நாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம், என்று சத்தம் போடுவதில் என்ன பொருள் இருக்கமுடியும்? அரசியலில் மோசடிகள், ஏமாற்றுக்கள் என்பதெல்லாம் அரசியலை கையாளுவதற்கான தந்திரங்களாகவே கருதப்படுகின்றன. அப்படியிருக்கின்ற போது, மற்றவர்கள் எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று ஆதங்கப்படுவதானது, ஒரு அரசியல் இயலாமையாகும்.

மகிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிடுவதற்கு எவருமே, துனியாதவொரு சூழலில்தான் மைத்திரிபால சிறிசேன அந்த எதிர்ப்பிற்கு தலைமை தாங்கினார். அப்போதும் ரணில் இருந்தார், சஜித்பிரேமதாச, கருஜெயசூரிய மற்றும் சம்பிக்கரணவக்க போன்றவர்கள் இருந்தனர். ஏன் அவர்களில் ஒருவர் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிடத் துணியவில்லை? ஏன் இவர்களுக்கு மைத்திரிபால தேவைப்பட்டார்? அவ்வாறாயின் மைத்திரிபாலவிடம் இவர்களைவிடவும் ஜனவசியமும் ஆளுமையும் இருந்திருக்கிறது என்பதுதானே பொருள். உண்மையில் அடித்தள மக்கள் மத்தியில் பெரும் ஜனவசியமுள்ள மகிந்த ராஜபக்சவை வீழ்த்துவதற்கு, அடித்தள மக்களால் தங்களுடைய ஆளென்று ஏற்றுக்கொள்ளக் கூடிய பிறிதொரு முகம் தேவைப்பட்டது. அந்த அடிப்படையில்தான், அப்பாவித்தனமான முகமுடைய, மிகவும் அடிமட்டத்திலிருந்து தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்த, எல்லோரையும் அரவணைத்துச் செல்லக்கூடியவருமான, மைத்திரிபால அடையாளம் காணப்பட்டார். ஆனாலும் எதிர்பார்த்தது போல் பெருமெடுப்பில் மகிந்தவை சிங்கள மக்களிடமிருந்து அன்னியப்படுத்த முடியாவிட்டாலும் கூட, மகிந்தவை அதிகாரத்திலிருந்து அகற்ற முடிந்தது. மகிந்தவை வீழ்த்துவதற்கு தேவைப்பட்ட அந்த அப்பாவியான முகத்தை, தொடர்ந்தும் ஒரு அப்பாவியாக கையாள முடியும் என்னும் மனோபாவம் ரணில் தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியின் உயர்குழாமினர் மத்தியில் ஏற்பட்ட போதுதான், கூட்டரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் கருக்கொள்ளத் தொடங்கின. இந்த முரண்பாட்டை கூட்டமைப்பு கூர்மையாக அவதானித்திருக்க வேண்டும். இந்த முரண்பாடுகளுக்குள் தேவையில்லாமல் அகப்பட்டுவிடக் கூடாது என்னும் முன்னெச்சரிக்கையுடன் நடந்திருக்க வேண்டும். கூட்டமைப்பு அப்படி நடந்ததா?

Maithripala-Sirisena6

மைத்திரி – ரணில் மோதலின் போது, கூட்டமைப்பு மிகவும் வெளிப்படையாகவே ரணிலின் பக்கமாக நின்றது. அதற்கும் ஒரு படி மேல் சென்று, சுமந்திரன் மைத்திரியின் நகர்வுகளை எவ்வாறாயினும் தோற்கடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இனி மைத்திரி தேவையில்லை என்னும் மனோபாவத்துடன்தான் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. தற்போது மைத்திரியும் தனக்கு கூட்டமைப்பு தேவையில்லை என்னும் அடிப்படையில்தான் செயற்படுகின்றார். அரசியலை பொறுத்தவரையில் அவர் அப்படித்தான் செயற்படவும் முடியும். பொதுவாக அரசியலில் நிரந்தர நண்பர்கள் – நிரந்தர எதிரிகள் என்று எவரும் இல்லை என்பார்கள். அது முற்றிலும் உண்மையான கூற்று. மைத்திரிக்கு ஒரு கட்டத்தில் எதிரியாக இருந்தவர்கள் அனைவரும் தற்போது நண்பர்களாகிவிட்டனர். இதிலுள்ள சுவார்சயம் என்னவென்றால், மைத்திரி முன்னர் மகிந்தவை முன்னிறுத்தி ரணிலுடன் நட்பானார். இப்போது ரணிலை முன்னிறுத்தி மீண்டும் மகிந்தவுடன் நட்பாகியிருக்கிறார். இந்த நட்பு மாற்ற அரசியல் சூதாட்டத்திற்குள், ஆடத் தெரியாமல் ஒரு அரசியல் தலைமை இருந்திருக்கிறது என்றால், அது கூட்டமைப்பு மட்டும்தான். அதன் விளைவைத்தான், தற்போது தமிழ் மக்கள் எதிர்கொண்டுவருகின்றனர்.

maithri and mahinda

மைத்திரி மட்டுமல்ல இனிவரப் போகும் எந்தவொரு சிங்கள தலைவரும் இவ்வாறுதான் நடந்து கொள்வார்கள். ஒரு கட்சி கொண்டுவருவதை ஏனைய கட்சி எதிர்க்கும் அரசியல் நடைமுறைக்கு பழக்கப்பட்டுப் போன, சிங்கள ஆட்சியாளர்கள் அனைவரும் இணைந்து, கருத்தொருமித்து தமிழ்மக்களுக்கு ஒரு தீர்வை தருவார்கள் என்று கூட்டமைப்பின் தலைவர்கள் எவரேனும் எண்ணினால், உண்மையில் அவர்கள் இருக்க வேண்டிய இடம் கூட்டமைப்பல்ல – மாறாக அங்கோடை. தமிழ் தலைமை என்று தங்களை அடையாளப்படுத்துபவர்கள் ஒரு தெளிவான முடிவுக்கு வர வேண்டும். ஒன்று சிறிலங்கா அரச கட்டமைப்புக்குள் ஒரு நீதியான அரசியல் தீர்வு இல்லை என்னும் முடிவுக்கு வர வேண்டும். பின்னர் அந்த முடிவிலிருந்து அடுத்த கட்டம் நோக்கி நகர்வது தொடர்பில் சிந்திக்க வேண்டும். அப்படியல்ல – சிறிலங்கா அரச கட்டமைப்புக்குள் ஒரு தீர்வு சாத்தியம் – அதனை எங்களால் கண்டடைய முடியும் என்றால், அதனை நோக்கி நகர வேண்டும். அவ்வாறானதொரு தீர்வை பெற வேண்டுமாயின், அதற்கு அனைத்து சிங்கள தரப்புக்களின் ஆதரவும் தேவை. முக்கியமாக ஆளும் தரப்பை கேள்விக்குள்ளாக்கவல்ல எதிர் அணியின் ஆதரவு தேவை. இன்றைய நிலையில் மகிந்தவின் ஆதரவு தேவை. ஆனால் கூட்டமைப்பின் நகர்வுகள் அவ்வாறு அமையவில்லை. அரசை எதிர்த்து போராடவும் கூட்டமைப்பால் முடியவில்லை அதே வேளை அரசாங்கத்தை கையாளவும் கூட்டமைப்பால் முடியவில்லை. இது மிகவும் மோசமானதொரு அரசியல் வங்குரோத்து நிலைமை. ஆரம்பத்தில் எந்த மைத்திரியை கூட்டமைப்பு உயர்வாக குறிப்பிட்டதோ அந்த மைத்திரியுடன் இன்று, உரையாட முடியாத கையறுநிலைக்கு கூட்டமைப்பின் அரசியல் கீழறங்கியிருக்கிறது. 2015 – 2018 வரையில் இருந்த மைத்திரி தற்போது இல்லையென்றால், இந்தக் காலத்தில் கூட்டமைப்பு மேற்கொண்ட அனைத்து அரசியல் நகர்வுகளும் தோல்வியில் முடிந்துவிட்டது, என்பதுதானே அதன் பொருள். மீண்டும், மீண்டும் ஏன் தமிழர் அரசியல் தோல்வியிலேயே முடிகிறது? ஏன் அதனால் அது முன்வைக்கும் அரசியல் இலக்கில் முன்னோக்கி பயணிக்க முடியவில்லை? ஒரு வேளை முன்னிறுத்தும் இலக்கே பிழையானதா? எங்கு பிழை நிகழ்கிறது? ஏன் தொடர்ந்தும் தோல்வி அனுபவமே கிடைக்கிறது? நிச்சயமாக இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இந்த பத்தியாளரிடம் இல்லை. ஏனெனில், ஒரு சமூகம் கூட்டாக கண்டடைய வேண்டிய பதில்களை, எவ்வாறு ஒரு பத்தியாளர் கண்டடைய முடியும்?