ஏப்ரல் 23 க்குப் பின்னர் அவசரமாக தேர்தலுக்குச் செல்ல வேண்டும்: ஐ.தே.க. தீர்மானம்
விகிதாசார தேர்தல் முறைமையின் அடிப்படையில் ஏப்ரல் 23 ஆம் திகதிக்கு பின்னர் அவசரமாக பாராளுமன்ற தேர்தலுக்கு செல்லவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் நேற்று மீளவும் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பாராளுமன்ற தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்தும் நேற்று விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன்போது அடுத்த தேர்தலில் வெற்றியை நிலைநாட்ட வேண்டுமாயின் அன்னம் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க செயற்குழு கூட்டத்தில் யோசனை முன்வைத்துள்ளார்.
எனினும் எந்த சின்னத்தில் போட்டியிடுவது குறித்தான தீர்மானம் அடுத்த செயற்குழுவிலேயே எடுக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று மாலை அக்கட்சியின் தேசிய தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் கூடியது.
இந்த செயற்குழுக் கூட்டத்தில் ஐ.தே.க பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் , தலைமைத்துவ சபைத்தலைவர் கரு ஜெயசூரிய உப தலைவர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட கட்சி செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
தற்போது பாராளுமன்ற தேர்தல் தொடர் பில் அரசியல் வட்டாரங்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐ.தே.கட்சியின் நேற்றைய செயற்குழுவிலும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பிலேயே பரவலாக ஆராயப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியானது ஏப்ரல் 23 ஆம் திகதிக்கு பிறகு விகிதாசார தேர்தல் முறைமையின் பிரகாரமே தேர்தலுக்கு செல்லவேண்டும் என்று கடந்த மாதம் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. புதிய தேர்தல் முறைமையை மாற்றுவதற்கான கால அவகாசம் போதாமைக்கான ் காரணத்தை அடிப்படையாக கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சிகளினால் பரவலாக எதிர்ப்பு வெளியிடப்பட்டு வந்தது.




