நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக பயணம்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் ரிலீசாக வெளிவரவுள்ள ‘தர்பார்’ படத்தில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு 10 நாட்கள் ஆன்மிக பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் வழக்கத்தினை அவர் சமீப காலங்களில் கடைப்பிடித்து வருகிறார். இதற்கு முன்பு காலா திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பும் இதேபோன்ற ஆன்மிக பயணத்தில் அவர் ஈடுபட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் ரிஷிகேஷில் பாபாஜி ஆசிரமம் ஒன்றை கட்டியுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் அதன் திறப்பு விழா நடந்தது. எனினும் தீவிர படப்பிடிப்பு பணிகளால் அதில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.
இதனிடையே, தர்பார் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், அவர் இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்கிறார்.இதற்காக இன்று காலை விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ள அவர் இமயமலையின் அடிவார பகுதியான உத்தரகாண்டின் டேராடூன் நகருக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து, கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய புனித ஸ்தலங்களுக்கு செல்கிறார். தொடர்ந்து பாபாஜி குகையில் தியானம் செய்யவும் திட்டமிட்டு உள்ளார்.இந்த பயணம் முடிந்தபின் தர்பார் பட டப்பிங் பணிகளில் ஈடுபடுகிறார். அதன்பின் சிறுத்தை சிவா இயக்கும் ரஜினிகாந்தின் 168வது படத்தில் நடிக்கும் பணிகளை தொடங்க இருக்கிறார்.(15)




