ஓர்மத்தின் ஓர்சான்றாய் நிலம் கிளர்தெழுந்த புலிமகளே!
ஓர்மத்தின் ஓர்சான்றாய் நிலம் கிளர்தெழுந்த புலிமகளே!
வேர்களில் ஒருத்தியாய் விடுதலைப் பயிருக்கு உரமூட்டியவளே!
தூரத்திலிருந்துன்னை தரிசிக்க முடிகிறதேயன்றி -நீ
ஆரத்தழுவிய சுடுகலன் களைந்து ஈமப்பேழையிலிட்டு
ஈரவிழிகளுடன் உனைச்சுமந்து விதைக்க முடியவில்லை !
யாரிடம் நோவோம் யார்கெடுத்துரைப்போம் தோழி !
குண்டு மழைக்குள்ளளே நின்று கொண்டு சதைத்
துண்டுகளாய் தாம் போவோமெனிலும் நெஞ்சகத்து
கொண்ட இலட்சிய கொள்கை மாறாதவர்களே!
உண்ட நஞ்சு உயிர் பறிக்கும் வேளையிலும் உறுதி
பூண்ட தமிழீழ மண்ணை எதிரிக்கு விட்டுக் கொடுக்காதோரே!
கண்டு உம்மை கலந்துரையாடியோர் கைகட்டி நிற்கின்றோம் !!
சாவுக்கு பயந்து இறுதியில் சாக்காடு போவோர் போலல்லாது
வாழ்வையும் சாவையும் ஒருங்கே வரவேற்றுக் கொண்டு…
வாழத் தெரிந்த மறத்தமிழ் வேங்கைகள் நீங்கள்!
வரலாறும் இலக்கியங்களும் எம் பூவையர்க்கு தந்த
வரைவிலக்கணத்தை மாற்றி வரலாறு படைத்து..
வரலாறாய்; வழிகாட்டிகளாய் வாழ்ந்து சென்றவர்கள் நீங்கள் !
உங்களைப் போற்றவும் ஒளிவிளக்கேற்றி ஒருமலரிடவும்
எங்கள் மண்ணிலே இன்று எங்களுக்கு உரிமையில்லை !
செங்களத்தில் பகைவிரட்ட செங்குருதியில் நனைந்தவரே!
தங்களின் தியாகங்களுக்கு தலை வணங்கி நிற்கின்றோம் !
இங்கொரு நாள்வரும் எம்மிருண்ட வானில் ஒளிவரும் – அம்
மங்கள வேளையில் எங்கள் தலைமுறை உங்களை கை தொழும் !
-கொற்றவை




