கொரோனாவிற்குப் பின்பான பாடசாலைக் கல்வி
மருத்துவர் சி. யமுனாநந்தா
ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார நிறுவனம் என்பன கொரோனாத் தாக்கத்தினால் உலகளாவியரீதியில் மாணவரின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், இது ஒரு சந்ததியினரையே முழுமையாகப் பாதிக்கின்றது எனவும் எச்சரிக்கை செய்துள்ளனர். இந்த நிலையில் எமது பிரதேசத்தில் கற்றல் செயற்பாடுகளை மாணவர்களுக்கு நட்புரீதியில் வழங்குவது தொடர்பாக புதிய அணுகுமுறைகள் தேவை. பாடசாலை மாணவரின் இடைவிலகலை இல்லாது செய்தல் வேண்டும். கடந்த 6 மாதங்களாக மாணவர் இழந்த கல்வியை விரைவாக மீட்பதற்கு விரைவுகல்வி நெறியாழ்கை அவசியமாகும். இதன்போது ஒவ்வோர் மாணவர்களுக்கும் அவர்களுக்கு உரிய அடிப்படைக்கல்வி அறிவு போதிக்கப்படல் வேண்டும். கணித பாடத்திற்கான நேர ஒதுக்கீட்டினை இரட்டிப்பாக்கி கணிதபாடம் முழுமையாகக் கற்பிக்கப்படல் வேண்டும். வரலாறு, இலக்கியம், சமயம் போன்றவற்றின் பாடப்பரப்பினை 60% ஆகக் குறைக்கலாம். ஆங்கிலம், தொழில்நுட்பக்கல்வி, விஞ்ஞானம் என்பவற்றிற்கான பாடப்பரப்பினை 90% ஆக மாற்றலாம்.
மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக குழுச் செயற்பாடுகள் ஊக்குவிக்கப்படல் வேண்டும். ஒப்படைகள், மீட்டல்கள், ஒழுங்கமைக்கப்படல் வேண்டும்.
இணையவழிக்கல்வி வழிகாட்டல்கள் பின்னூட்டலுடன் அமைதல் நல்லது. இலகு பரீட்சைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். அடுத்து பாடசாலைக் கல்வியும், தனியார் கல்வி நிறுவனக்கல்வியும் இணைந்த கல்விச் செயற்பாடு (Public Private Partnership in Education) இன்றைய காலத்தில் இன்றியமையாதது. குறிப்பாக தரம் 11, 12, 13 மாணவர்களுக்கு இத்தகைய கல்விச் செயற்பாட்டை உடனடியாகச் செயற்படுத்துவது கொரோனாப் பாதிப்பிலிருந்து எமது இளம் சந்ததியின் கல்விப் பாதிப்பினை குறைப்பதற்கு இன்றியமையாததாகின்றது.




