செய்திகள்

ராஜபக்ஷக்களின் எழுச்சி கூறும் செய்தி?

யதீந்திரா

கோட்டபாய ஜனாதிபதியாக இருக்கின்ற சூழலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுமென்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை தொடுமளவிற்கான வெற்றியை அவர்களால் பெறமுடியுமென்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றல்ல. ஆனால் 146 ஆசனங்களை வெற்றிகொண்டு மிகவும் பலமானதொரு அரசாங்கத்தை ராஜபக்ஷக்கள் தங்கள் வசப்படுத்தியிருக்கின்றனர். அதே வேளை சிங்கள மக்கள் மத்தியில் பாரம்பரியமான செல்வாக்கை கொண்டிருந்த ஜக்கிய தேசியக் கட்சி, ஒரு ஆசனத்தைக் கூட தக்கவைக்க முடியாதளவிற்கு படுதோல்வியடைந்திருக்கின்றது. ஜக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற சஜித்பிரேமதாச தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தியும் குறிப்பிடத்தகு வெற்றியை பெறவில்லை. தற்போது எதிர்க்கட்சிகள், மிக பலவீனமாக இருக்கின்ற நிலையில்தான் ராஜபக்கஷக்கள் பலமானதொரு அரசாங்கத்தை அமைக்கவுள்ளனர். உண்மையில் இது எவ்வாறு சாத்தியப்பட்டது.

ராஜபக்ஷக்களை அரசியலிலிருந்து அகற்ற வேண்டுமென்னும் ஒற்றை இலக்கில்தான், 2015இற்கான தேர்தல் வியூகம் அமைந்திருந்தது. இதனை வெளியிலிருப்பவர்களால் மட்டும் செய்ய முடியாதென்னும் அடிப்படையில்தான் சிறிலங்கா சுமந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஒரு அணியை உடைத்தெடுத்து, மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான வியூகம் வகுப்பட்டது. பொதுபல சேனாவின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளால் ஏற்கனவே அதிருப்தியடைந்திருந்த முஸ்லிம் சமூகம் தன்னியல்பாகவே மகிந்த எதிர்ப்பு மனோநிலையிலிருந்தது. இதனுடன் தமிழ் மக்கள் மத்தியிலிருந்த மகிந்த எதிர்ப்புணர்வையும் மூலதனமாகக் கொண்டே, இந்த வியூகத்தில் வெற்றிபெறமுடிந்தது.

முக்கியமாக தமிழ் மக்களின் வாக்குகள் மகிந்தவை வீழத்துவதில் பிரதான பங்கை வகித்திருந்தது. ஒரு வேளை 2005 தேர்தலில் வாக்களிப்பை தவிர்த்தது போன்று, 2015இலும் தமிழ் மக்கள் வாக்களிப்பை தவிர்த்திருந்தால் மகிந்த ராஜபக்சவை தோற்கடித்திருக்க முடியாது. இந்த அர்த்தத்தில்தான் தமிழ் மக்களின் வாக்குகள் பிரதான பங்கை வகித்ததாக நான் குறிப்பிடுகின்றேன். ஆனால் 2015இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றமானது ஒரு முழுமையான ஆட்சிமாற்றமல்ல. உண்மையில் சிங்கள மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டதொரு ஆட்சி மாற்றமாகவே அது இருந்தது. இதனை பிறிதொரு வகையில் கூறுவதானால் அது ஒரு குறைப்பிரசவ குழந்தை போன்றது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அந்தக் குழந்தையை சரியாக பராமரித்து பாதுகாப்பதில் ரணில் – மைத்திரி அரசாங்கத்தினால் முடியவில்லை. ஆட்சி மாற்றத்தின் போது ராஜபக்கஷக்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன ஆனால் நல்லாட்சி அரசாங்கம், மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இது சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகங்கள் வலுவடைவதற்கான சூழலையே ஏற்படுத்தியது. மகிந்த ராஜபக்சவை தோற்கடித்தல் என்னும் ஒற்றை இலக்கை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஏற்படுத்தப்பட்ட மைத்திரி – ரணில் கூட்டுக்குள் அரசியல் ரீதியில் பரஷ்பர புரிந்துணர்வு இருந்திருக்கவில்லை. இது மெது, மெதுவாக வெளிப்படத் தொடங்கிய போது சிங்கள மக்கள் மத்தியில் மேலும் ஆட்சியாளர் மீதான அதிருப்திகள் அதிகரிக்கத் தொடங்கியது. இ;வாறானதொரு பின்னணியில்தான் 2018இல் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் பிரதான இரண்டு கட்சிகளையும் ராஜபக்சவின் பொதுஜன பெரமுன தேற்கடித்திருந்தது. இதன் மூலம் ராஜபக்ஷக்கள் தெற்கில் தொடர்ந்தும் பலமாகவே இருக்கின்றார்கள் என்னும் செய்தி வெளிப்பட்டது. உண்மையில் உள்ளூட்சித் தேர்தல் முடிவுகளுடன் ராஜபக்ஷக்களின் மீளெழுச்சி ஆரம்பமானது. உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளுடன் தென்னிலங்கையின் இரண்டு பாரம்பரிய கட்சிகளான சிறிலங்கா சுமந்திரக் கட்சி மற்றும் ஜக்கிய தேசியக் கட்சியின் மீதான நம்பிக்கை, அவற்றின் ஆதரவாளர்கள் மத்தியில் வீழச்சியடையத் தொடங்கியது. ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் தொடர்பிலான சந்தேகங்கள் கட்சியின் இரண்டாம்மட்ட தலைவர்கள் மத்தியில் வலுவடைந்தது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் ஜக்கிய தேசியக் கட்சிக்குள் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை எட்டிப்பார்க்கத் தொடங்கியது. சஜித் பிரேமதாசவின் எழுச்சி ஆரம்பமானது. ஆரம்பத்தில் சஜித்பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதை எதிர்த்திருந்த ரணில் விக்கிரமசிங்க பின்னர் தனது தலைமையை உறுதிப்படுத்திக் கொண்டு, வேண்டாவெறுப்பாக இணங்கினார். சஜித் பிரேமதாச எப்போது ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினாரோ அப்போதே ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் என்பது பரிகசிப்புக்குரிய ஒன்றாகிவிட்டது. விடுதலைப் புலிகளுக்கு பின்னரான இலங்கைத் தீவில் இடம்பெற்ற மூன்று ஜனாதிபதித் தேர்தல்களின் போதும், ரணில் விக்கிரமசிங்கவினால் வேட்பாளராக நிற்க முடியவில்லையென்பது அவரது தலைமைத்துவத்தின் பலவீனத்தையே காண்பிக்கின்றது.

_PKP3607

எதிர்தரப்புக்கள் மிகவும் பலவீனமாக இருந்த நிலையிலும், ரணில் – மைத்திரி அரசாங்கத்தின் வினைத்திறனற்ற ஆட்சியின் மீது சிங்கள மக்கள் கடுமையான அதிருப்தியுடன் இருந்த நிலையிலும்தான், ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ச போட்டியிட்டிருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னரேயே தனது வெற்றிக்கான வியூகங்களை வகுத்திருந்த கோட்டபாய ராஜபக்ச, சிங்கள மக்களின் வாக்குளில் வெற்றிபெற வேண்டுமென்பதிலும் உறுதியாக இருந்தார். உண்மையில் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. பெரும்பாண்மையான நாங்கள் சிறுபாண்மைகளின் தயவின்றி நிமிர்ந்து நிற்க வேண்டுமென்னும் ஒரு உளவியல் சிங்கள மக்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட்டது. ஏற்கனவே தமிழ் – முஸ்லிம் மக்களின் ஆதரவில் தங்கியிருந்த ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் மீதான அதிருப்திகளும் இந்த உளவியலை கட்டமைப்பதற்கு பெரிதும் உதவியது. அதே வேளை ஒரு பலமான அரசாங்கம் அமைய வேண்டுமென்னும் உளவியலும் சிங்கள மக்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்டது. இவ்வாறானதொரு உளவியலை கட்டமைப்பதற்கு விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியும் அதே வேளை, இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஈஸ்டர் தாக்குதலும் பெரிதும் உதவியது. முக்கியமாக, ஈஸ்டர் தாக்குதல் சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் குண்டுச் சத்தத்தின் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. நாடு பாதுகாப்பற்ற சூழலொன்றுக்குள் தள்ளப்படுகின்றதா என்னும் கேள்வி சிங்கள மக்கள் மத்தியில் எழுந்தது. இவையனைத்துக்குமான சர்வலோக நிவாரணியாகவே கோட்டபாய தெரிந்தார். கோட்டபாயவின் தனிச்சிங்கள வெற்றிக்கு பின்னால் இவ்வாறான பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தியிருந்தது.

உள்ளுராட்சித் தேர்தல் வெற்றி ராஜபக்ஷக்களின் எழுச்சிக்கான முதல் கட்டமென்றால் , கோட்டபாயவின் வெற்றி, ராஜபக்கஷக்களின் எழுச்சியின் இரண்டாவது கட்டமாகும். அந்த எழுச்சி அதன் இறுதி கட்டத்தை இப்போது அடைந்திருக்கின்றது. எண்ணிக்கையில் சிறுபாண்மையான சமூகங்களின் ஆதரவு தேவையில்லை என்னும் நிலையில் அவர்களது வெற்றி அமைந்திருக்கின்றது. இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம், ஆட்சி மாற்றம் உண்மையில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கின்றது. அதாவது, ராஜபக்ஷக்களை வீழ்த்துவதற்காக போடப்பட்ட வியூகம் அவர்களை முன்னரைவிடவும் பலமானவர்களாக ஆட்சியில் அமர்தியிருக்கின்றது. ஒரு வேளை 2015இல் ராஜபக்சவின் ஆட்சியை தொடரவிட்டிருந்தால் ஒரு வேளை அவர்களால் இந்தளவு செல்வாக்கை பெறமுடியாமல் போயிருக்கலாம். ஆனால் இடையில் அவர்களை ஆட்சியிலிருந்து அகற்றியதன் மூலம் அவர்கள்தான் இந்த நாட்டை சரியாக வழிநடத்தக் கூடிய தலைவர்களென்றவாறு, சிங்கள மக்களை சிந்திக்கத் தூண்டும் வேலையையே உண்மையில் ஆட்சி மாற்றம் செய்திருக்கின்றது.

ராஜபக்ஷக்களின் மீளெழுச்சி ஒரு தெளிவான செய்தியை கூறுகின்றது. அதாவது, சிங்களவர்கள் மத்தியில் ஒரு பவுத்த – சிங்கள எழுச்சி நிகழ்ந்திருக்கின்றது. அந்த எழுச்சியின் கதாநாயகர்களாக இப்போது ராஜபக்ஷக்கள் அரங்கில் தெரிகின்றனர். ராஜபக்ஷக்களின் முன்னைய ஆட்சி ஜனநாயக விழுமியங்களுக்கு பெரியளவில் இடம் கொடுக்கவில்லை. இந்த பின்புலத்தில் ராஜபக்ஷக்களின் இரண்டாவது ஆட்சிக் காலம் அவர்களது முன்னைய தவறுகளை சரிசெய்யும் வகையில் அமையுமா அல்லது வழமைபோல்தான் அவர்கள் நடந்துகொள்வார்களா என்பதுதான் இப்போது துருத்திக்கொண்டு மேலெழும் கேள்வியாக இருக்கின்றது. பொதுவாகவே அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிகின்ற போது அதிகாரம் ஒரு போதையாகிவிடுவதுண்டு. போதை அதகரிக்கும் போது போதைதான் ஒருவரை வழிநடத்துமே தவிர அவரது சுயசிந்தனைகளல்ல. அந்த வகையில் பார்த்தால், அதிகாரத்தை அதிகமாக பெற்றிருக்கும் ராஜபக்ஷக்கள் வரலாற்றிலிருந்து எதும் படிப்பினைகளை பெறுவார்களாக என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியிருக்கின்றது.