முருக வழிபாடும் தமிழும் – வேலில் தமிழ் கேடில்
மருத்துவர் சி. யமுனாநந்தா
சங்க இலக்கியங்களில் குறிஞ்சித் தெய்வமாக முருகவழிபாடு கூறப்பட்டுள்ளது. முருக வழிபாடு கௌமாரம் என சண்மதங்களில் கூறப்படுகின்றது. சனாதன தர்மம் சிவபெருமானின் உடுக்கையில் இருந்து தோன்றிய ஒலியே தமிழும் சமஸ்கிருதமும் என்கின்றது. சங்க இலக்கியங்களில் முதல் சங்கத்தின் தலைவர் சிவன் எனக் குறிப்பிடப்படுகின்றது. தமிழ்சங்கத்தின் பொறுப்பை ஏற்று தமிழை, தமிழ் மக்களை காத்து நிற்கும் தெய்வமாகவே முருகப்பெருமான் வழிபடப்படுகிறார்.
தமிழர்களின் தொன்மையான குமரிக்கண்டத்தில் முருக வழிபாடு விரகி இருந்தது. சுமார் 7000 வருடங்களுக்கு முற்பட்ட நடுகற்களில் வேல், சேவல், சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தமை முருக வழிபாட்டின் தொன்மையை எடுத்துக் காட்டுகின்றது. இன்று செல்லக்கதிர்காமம் எனப்படுவது குமரிக்கண்டத்தில் எல்லம் கதிர்காமம் என குறிஞ்சிக்குமர வழிபாட்டுத் தலமாகும்.
முருகப் பெருமானை சரவணன் என்று அழைப்பது. சரவணப் பொய்கையில் குழந்தையாக அவதரித்தார் என்பது மட்டுமல்ல சரம் என்றால் தமிழில் மூச்சு, வணம் என்றால் கட்டுப்படுத்துவது. அதாவது மூச்சைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவன் என்பதனால் சரவணன் என்பர். ஆன்மாவின் மூச்சைக் கட்டுப்படுத்தும் மூச்சு மாத்திரைகளே அட்டமாசித்திகள் கைவர ஏதுவாக்குகின்றது. அதாவது சித்தர்களுக்கு எல்லாம் சித்தராக சரவணன் எம்மை வழிப்படுத்துகின்றான். நல்லூரிலும் பல சித்தர்கள் வழிபட்டு முத்தி அடைந்து உள்ளனர். அவர்களில் செல்லத்துரைச் சுவாமிகள், யோகர் சுவாமிகள் அண்மைக் காலத்தவர்கள்.
முருகனின் திருவிளையாடல்கள் தமிழ்மண்ணில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே உள்ளன. அருணகிரிநாதரைச் சந்தக்கவிபாட “திகடசக்கர” என அடியெடுத்துக் கொடுத்தது முருகப் பெருமானே. கச்சியப்ப சிவாச்சாரியாரைக் கந்தபுராணம் பாடவைத்ததும் முருகப் பெருமானே. பிறப்பால் ஊமையாக இருந்த குமரகுருபரரை கந்தர்கலி வெண்பா பாட அருளியதும் முருகப் பெருமானே. ஒளவைப் பிராட்டியாருக்கும் காட்சி கொடுத்து அருளினார். வள்ளலார் பெருமானுக்கு காட்சி கொடுத்து அருளியதும் முருகப் பெருமானே. தேவராய சுவாமிகள் கந்தர்ச~;டி கவசம் பாட வைத்ததும் முருகப் பெருமானே. வேண்டினார்க்கு வேண்டியதை வழங்கும் முருகன் எனத் திருமுருகாற்றுப்படையில் கடைச்சங்கத் தலைமைப் புலவர் நக்கீரர் கூறுகிறார்.

வீரவேல், தாரைவேல், விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல், செவ்வேள் திருக்கைவேல், வாரி
குளித்தவேல், கொற்றவேல், சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை.
– திருமுருகாற்றுப்படை
முருகன் நம்மைக் காக்கும் தெய்வம் என்பதை விளக்கும் திருமுருகாற்றுப்படை முருகனைத் தமிழரின் வடிவமாகவும் பார்க்கின்றது. மொழியின் வடிவம் முருகன் என்றால் அவரது கையில் இருக்கும் வேல் அறிவின் குறியீடு. ஆழ்ந்து அகன்ற அறிவு என்பதே வேல். ஆழ்ந்து அகன்ற அறிவுடையவன் வெற்றியாளனாய் மட்டும் இருப்பதில்லை. தன்னைச் சார்ந்தோரையும் காத்து அருளும் வல்லமை கொண்டவனும் ஆவான். வேலில் ஒளியே பிரபாகரம் ஆகும். மகாகவி பாரதியும் “சுற்றி நில்லாதே போ பகையே! துள்ளி வருவது வேல்! என்று பாடியுள்ளார். தற்போதைய தீநுண்மி அச்சத்திலும் சரவணனே எம்மைக் காத்தருளுகின்றான். அடியவர்கள் யாவரும் மூச்சுக் கட்டுப்பாட்டில் முகக்கவசம் அணிந்து வேலனைப் பக்திப் பரவசத்துடன் கந்தச~;டி கவசம் பாடிக் கொடிய நோயிலிருந்து காக்க காக்க வேண்டி நிற்கின்றார்”.
ஞானத்தின் குறியீடு முருகன். அறிவுதான் காக்கும் என்பது தமிழரின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால்த்தான் தமிழ்க்கடவுள் என்று போற்றப்படும் முருகன் வேலாயுதன் என்கின்றார்கள் திருமுருகாற்றுப்படையில்,
‘நூலறிபுலவ’ என்றே நக்கீரர் முருகனை அழைக்கிறார். இடைச்சங்கத்தில் தமிழ்ச்சங்கத் தலைவராக இருந்து அறிவு வளர்த்த முருகன் தான் “தகப்பன் சாமி” என்று கொண்டாடப்படுகின்றார். இவரே தந்தைக்கு உபதேசம் செய்த குருபரன் ஆவார். ஊர் என்பது காலத்தின் பாச்சலைக் குறிக்கும். இடத்தையும் குறிக்கும் ஓர் ஊரூர் என்பது ஆத்மாவின் நிலையைக் குறிக்கும்.
“அல்லூர் ஓம் கல்லூர் ஓம் நில்லூர் ஓம்
இல்லூர் ஓம் சொல்லூர் ஓம் வில்லூர் ஓம்
உள்;ர் ஓம் தௌ;;ர் ஓம் ஓரூரூர் ஓம்
எல்லூர் ஓம் நல்லூர் ஓம் வேலூர் ஓம்”.
“நீறில் நுதலில் எல்லில்
கூறில் பாரில் நிம்மதியில்
ஆறில் யாழில் சந்நிதியில்
வேலில் தமிழ் கேடில்”.
தமிழால் முருகனை வழிபட்டு தமிழை வணங்குவோம்.




