பிரபஞ்சத்தைத் தேடும் மனிதம்
மருத்துவர். சி. யமுனாநந்தா
மெஞ்ஞானம் என்பதில் ஒரு பகுதியே விஞ்ஞானம். சடத்திற்கும் உயிருக்கும் உள்ள வேறுபாட்டில் மனிதன் உயர்வடைவதற்குக் காரணம் ஞானம். ஞானம் என்பது மனிதனின் ஐம்புலன்களால் அறியப்படுவதும் அவற்றின் உய்த்துணர்வும் ஆகும். மெய்ஞானம் என்பது மனிதனின் உடம்பு முதல் பிரபஞ்சம் வரை உள்ள மனிதனின் புரிதல் ஆகும். ஆன்மா அகக்கருவிகள் நான்கைப்பற்றி நின்று உலகப்பொருளைச் சிறப்பாக உணர்ந்து கொள்கின்றது. அவை மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்பனவாகும். உயிருக்கு இயல்பாக உள்ளவை மூன்று அவையாவன : ஒன்றினை அறிதல் (ஞானாசக்தி), அதனை விரும்புதல் (இச்சாசக்தி), அதற்காக முயலுதல் (கிரியாசக்தி).
மனிதனின் சித்தத்தில் ஞானத்தைத் தேடுபவர்கள் சித்தர்கள், ஞானிகள் ஆவார்கள். பண்டைய காலத்தில் இத்தகைய சிந்தனைகளை தவஞானிகள் எமக்கு அருளின. ஆதிகாலத்தில் பிரபஞ்சத்தை உணரும் வழிகளாகத் தவமிருத்தல், தியானித்தல், வேள்வி செய்தல், மந்திரம் ஓதுதல், பறை ஒலி பண்ணுடனான பாடல்கள் விளக்கின. அட்டதிக்குகளுக்கு எனச் சிறப்பான பண்ணுடனான தேவாரங்கள், வேத மந்திர ஓசைகள் அமைந்திருந்தன. பிரபஞ்சத்தின் அட்டதிசைகளும் வெவ்வேறு பண்களுக்கு அமைந்திருந்தன எனவும் அந்த அந்த நிலைகளுக்குரிய அதிர்வுகளுக்குரிய மந்திரங்களும் உச்சரிக்கப்பட்டன. காலம், சடப்பொருள் அது தானே செயற்படாது. இறைவனின் சக்தியாலேயே தன் காரியத்தைச் செய்யும்.
இவற்றை இன்றைய விஞ்ஞானமும் உறுதிப்படுத்துகின்றது. அதாவது அது பிரபஞ்சத்தில் பல்வேறு அகிலங்கள் வெவ்வேறு அதிர்வுகளில் இயங்குகின்றது. அவ்வதிர்வுகளுக்கூடாகவே அவ்அவ் அகிலங்களை நோக்கலாம்.
இன்றும் சைவசமய உற்சவங்களில் தேவர்கள் அழைக்கப்படுவது யாகபூசையில் ஆகுதியில் ஓமம் வளர்க்கும் போதும், தீப ஆராதனையின் போதும், மந்திர, தேவார பாராயணத்தின் போதும் நாதஸ்வர சுரங்களின் போதும் ஆகும். இவை பூலோகத்தவர்கள் தேவலோகத்தவருடன் இணைக்கும் ஆன்மீக உள்ளுணர்வுக்கு உட்பட்ட வழிபாடாகும். இதன்போது ஆன்மாவினது குண்டலினிசக்தி மணிபூரகம் வழியாக இறையுடன் ஒன்றிக்கும். இது இப்பூவுலகின் ஆன்மாவின் பிரபஞ்சத் தேடலின் தவவழிபாடாகும்.
வேதங்களில் கோடானு கோடி அண்டவெளிகள் உள்ளதாகவும், அதில் பலபல உலகங்கள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. சமஸ்கிருதத்தில் மனனம் செய்யப்பட்டு வந்த வேதத்தின் உட்பொருளே திருமூல நாயனார் அருளிய திருமந்திரம் ஆகும்.
“பெறுபகிரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணல் அளவாகப்
பொறியொளி பொன்னனி யென்ன விளங்கிச்
செறியும் அண்டாசனத் தேவர் பிரானே.”
திருமந்திரம் 2297.
அண்டவெளியில் அகிலத்தின் அமைவு பற்றிய இயற்பியல் ஆய்வுகள் பல கருதுகோள்களை முன்வைத்து உள்ளது. பௌதீகக் கணியங்கள் ஊடு அவதானித்து நிறுவக்கூடியவை. விஞ்ஞானத்தில் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் பௌதீகக் கணியங்களின் சார்புகளின் எல்லைப் பெறுமானங்களுக்கு அப்பால் விஞ்ஞானத்தின் எல்லை முடிவுற கருதுகோள்கள் உருவாகின்றன. இயற்பியலின் விஞ்ஞானக் கருதுகோள் தத்துவங்களும் இறையியலின் இயற்பியல் கருதுகோள் தத்துவங்களும் மனிதனின் சித்தத்தில் அவனது தேடலுக்கு விடையினைக்கூற முனைகின்றன. இவ்வாறு அண்டங்கள் அடங்கிய பிரபஞ்சங்கள் எட்டுத்திக்கிலும் உள்ளன.
இப்பிரபஞ்சங்களை வேதம், பிரமன் என்றும் ஹிரண்யகர்பன் என்றும் கூறுகின்றது. மேலும் முழுமுதல் இறைவனின் கர்ப்பத்தில் இவை உள்ளன எனவும் கூறப்படுகின்றது. இவை கணக்கிட முடியாத அளவில் உள்ளன. இவை எப்போது ஆரம்பித்தன, எப்போது முடிவடையும் எனக் காலத்தினால் நியதி இட முடியாது. இவை ஆதியும், அந்தமும் இல்லாதவை. படைத்தல், காத்தல், அளித்தல், அருளல், மறைத்தல் என ஐந்தொழில்களும் இடைவிடாது நிகழ்ந்து கொண்டு உள்ளன. இதனை இன்றைய இயற்பியல் கருதுகோள்களின் உட்கிடக்கைகளிலும் அறியலாம்.
இயற்பியல் கருதுகோள்களே சைவசித்தாந்தத்தில் சிதம்பர இரகசியமாக கருதப்படுகின்றது. சிதம்பரநடராஜரின் ஆனந்தக்கூத்து அகில இயக்கத்தை விபரிப்பதாகவும், அகிலவெளி மாதிரியாகவும் உள்ளது. இன்றைய விஞ்ஞானக் கருதுகோள்கள் அகிலத்தை 5 அவத்தைகளாகப் பிரிக்கின்றது.
அவை:
1. ஆரம்ப அவத்தை – Primordial Era
2. தற்போதைய அவத்தை – Still ferrous Era
3. அழியும் அவத்தை – Degerate Era
4. கரும்துளைஅவத்தை – Black hole Era
5. இருள் அவத்தை – Dark Era
இவ்வைந்து அவத்தைகளும் நடராஜப் பெருமானின் ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்பனவற்றுக்கு முறையே உதாரணமாக அமைந்துள்ளன. அதுவே ஆத்மாவின் நடனமாகவும் உள்ளது. சிவலிங்கவடிவமும் அகிலத்தின் வடிவாக உள்ளது. அதுவே ஆன்மா மணிபூரகத்தில் சிவனுடன் சேரும் அமைவாகவும் உள்ளது. சிதம்பரசக்கரம் அகிலத்தை இரு பரிமாணங்களில் விளக்குகின்றது. மேலும் சிதம்பரசக்கர அமைப்பிலேயே ஆன்மா உடலில் ஐந்து நிலைகளில் பக்குவப்படுகின்றது.
அகிலமும் எல்லா உயிர்களும் இறையாட்டம் ஆடல் என்பதனை உணர்த்தும் திருமந்திரப் பாடல்.
“மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் மெய் தோற்றத்து
அவ்வாய அந்தக் கரணம் அகிலமும்
எல்லா உயிரும் இறையாட்ட ஆடலால்
கைவாய் இலாநிறை எங்கும் மெய்கண்டத்தே” திருமந்திரம் (2586)
வேதத்தில் “புருஷ சூக்தம் கூறுவது யாதெனில் இறைவனே படைத்து வியாபித்து இருந்தாலும் தோன்றியவை எல்லாம் அவருடைய கால்பங்கு மட்டுமே” அவரது முக்கால் பங்கு அழிவற்றதான விண்ணில் இருக்கின்றது. இதனைத் திருமந்திரத்தில் காணலாம்.
“ஆகாசமாம் உடல் அங்கார் முயலகன்
ஏகாசமாம் திசை எட்டும் திருக்கைகள்
மோகாய முக்கண்கள் மூன்று ஒளிதானாக
மாகாய மன்றுள் நிடம் செய்கின்றானே” திருமந்திரம் 2774
பரம்பொருளின் முக்கால பங்கு மேலே விளங்குகின்றது. எஞ்சிய கால் பங்கு மீண்டும் பிரபஞ்சமாகத் தோன்றியது என புருஷசூக்தம் 3ம், 4ம் சுலோகங்கள் கூறுகின்றன. பிரபஞ்சத்தின் வடிவினை இன்றைய விஞ்ஞானம் வுழிழடழபiஉயட ஆழனநட வெவ்வேறு பரிமாண மாதிரிகளில் ஆராய்கின்றது.
“வெளியை அறிந்து வெளியின் நடுவே
ஒளியை அறியின் உளி முறியாமே
தெளிவை அறிந்து செழுநந்தி யாலே
வெளியை அறிந்தனன் மேல் அறியேனே.” திருமந்திரம் – 839
இதுவரை காலமும் விஞ்ஞானத்தில் அகிலத்தின் எல்லையை ஒளியலைகளின் பண்பினை வைத்தே வரையறை செய்தனர். இதற்கு அல்பேட் ஐயன்ஸ்சனின் சார்ப்புக் கோட்பாடுகள் பயன்பட்டன. வில்லைகள் ஊடான காட்சிகள் ஒளியியில் மாயத் தோற்றத்தில் (Optical illusion) மனிதனை வைத்து இருந்தது.
தற்போது ஒளியலைகளுக்குச் சமானமாக ஈர்ப்பு அலைகள் (Gravitational Quantum) கண்டறியப்பட்டுள்ளன. இவ்வீர்ப்பு அலைகளின் துணையுடன் பலமில்லியன் கணக்கான நட்சத்திரத் தொகுதிகள் (Galaxies) மற்றும் கருந்துளைவான் பொருட்கள் (சூரிய ஆதித்தன்) ஞரயளயசள ஆராய்ந்தபோது அகிலத்தின் விரிவில் கருஞ்சக்திகளின் பங்கும், அகிலத்தின் பரிமாணம் ஒடுங்குவதும் (wrap up) அவதானிக்கப்பட்டுள்ளது.
தற்போது அகிலத்தினை வரையறை செய்ய ஈர்ப்பு அலைகளின் பௌதீகக் கணியமும் அதன் எல்லைவரை பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. இது மிக அண்மைக்கால விஞ்ஞான முன்னேற்றத்தின் பிரதிபலனாகும்.
கருந்துளைகள், கருஞ்சக்திக் கோட்பாடுகள் அகிலத்தின் அமைப்பை வரையறுப்பதில் தனது எல்லைவரை விளக்கத்தினைக் கொடுக்கின்றது. ஒளியலைகள் மூலமாக முப்பரிமாணத்தில் அகிலம் விரிவடைவது கருதுகோளாக்கப்பட்டது. போல் ஈர்ப்பு அலைமாயத் தோற்றத்Gravitational illusion) அகிலம் தளவடிவில் அமையலாம். இதனை மாணவர்களுக்கு எளிதில் விளக்குவதாயின் கொதிக்கும் எண்ணெய் தாழியில் பொரியும் “பப்படங்கள்” போன்றதே அண்டவெளியில் காணப்படும் அகிலங்கள். அகிலத்தின் வடிவு என்பது பௌதீககணிய மாயை ஆகும் ஆயின் காலம் எனும் கணியத்தின் வடிவம் அகிலத்தின் வடிவின் சார்பானதே ஆகும். அகிலத்தின் சார்பிற்கு அப்பால் காலம் என்பது நிலையானது ஆகும். அதாவது எமது சூரியமண்டலத்துக்கு வெகுதொலைவில் உள்ள யாதேனும் கருந்துளை வான்பொருளில் (Quasar) ஈர்ப்பலை சார்பாக எமது சூரியமண்டலத்தில் உள்ள அனைத்துப் புள்ளிகளும் ஒரே பெறுமதியில் இருக்கும். அவ் வான்பொருளின் சார்புப் பௌதீக கணியத்தில் எமது சூரியமண்டலத்தின் காலம் எப்பொழுதும் மாறாது காணப்படும். இதுவே காலத்தின் ஒடுக்கத்திற்கான விளக்கமாகும். தட்டையான பப்படம் கொதிக்கும் எண்ணெயில் எவ்வாறு வீங்கிப் பருமனடைவதுபோல் அகிலத்தின் விரிவும் வெவ்வேறு பௌதீக கணியங்களில் மாற்றமடையும். அதேபோல் அகிலத்தின் வடிவும் அவ்வவ் பௌதீக கணியங்களின் சார்பிலேயே கருதப்படும்.
அகிலத்தின் இயக்கங்கள் நாத அதிர்வுகள் போல் அமையும். இதனை நடராஜப்பெருமானின் உடுக்கை ஒலியின் நாதமாக சைவசித்தாந்தம் விளக்குகின்றது.
இதுகாறும் ஒளியலைகளின் சார்பிலேயே விரிவும், காலம் வெளித் தத்துவமும் அமைந்து இருந்தது. அண்மைய கண்டுபிடிப்புகள் குறிப்பாக ஈர்ப்பு அலைகள் மற்றும் கரும்துளைகள் தொடர்பான அவதானிப்புகள் காலம் வெளி ஒடுங்கும் புள்ளிகளை எடுத்துக் காட்டியுள்ளது. இவை அகிலம் தொடர்பான சார்புநிலைகளில் புதிய கோட்பாடுகளை உருவாக்க உறுதுணையாக உள்ளது. காலமும் வெளியும் சில ஆள்கூறுகளில் ஒரே நேர்கோட்டில் அமையலாம். அவ்வாள்கூற்றுக் கணிப்பில் வெளிமாறாது இருக்கலாம். இதனையே சைவசமயத்தில் ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெருஞ்சோதி என மணிவாகர் குறிப்பிடுகிறார்.
வேதத்தில் பிரபஞ்சத்திற்கு சக்கர வடிவ அமைப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. உபநிஷதத்தில் இந்தப் பிரபஞ்சம் பிரம்மச்சக்கரமாக உள்ளதாக கூறப்படுகின்றது. இச்சக்கரத்தில் கர்மம் என்ற பாசக்கயிற்றில் கட்டப்பட்டு ஆன்மா சுழன்று வருகின்றது. மீண்டும் மீண்டும் சுழலுகையில் பிரம்ம ஸ்வரூபத்தை புரிந்துகொண்டு இச்சக்கரத்தில் சுழலச் செய்யும் பிறவிப்பிணியில் இருந்து முடிவில் விடுபடுகின்றான். அதாவது சிவசித்தன் ஆகின்றான்.
“அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை
உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளிந்தது
கொண்ட குறியைக் குலைத்தது தானே.” திருமந்திரம் 2806
சுழலும் சக்கரவடிவுடைய பிரபஞ்சம் ஆதியும் அந்தமும் இல்லாத அமைப்பாகும். சக்கர அமைப்பில் எங்கு தோன்றி எங்கு முடியும் என்று கூறமுடியாது இருக்கும். இவ்வாறு கணக்கிட முடியாத சக்கரங்கள் இருக்கும். இவை ஒன்றை அடுத்து ஒன்றும், ஒன்றின்மேல் ஒன்றுமாக அமையும். இவற்றின் அதிர்வுகள், பண்கள் வெவ்வேறானவை. ஆலய உற்சவங்களில் அட்டதிக்கு பாலகர்களுக்கான மந்திரம், தேவாரங்களுக்குரிய பண்கள், இதனை எமக்கு மெய்யுணர்வில் உணர்த்துகின்றன.
காலநேமி என்ற உபநிஷச் சொல்லும் பிரபஞ்சத்தின் தோற்றம் என்றும் நிலையில் கால்பங்கு நிலையில் உள்ளன என்றும் முக்கால் பங்கு என்றும் தோன்றாமை எனக் குறிக்கின்றது. இந்த அமைப்பில் உலகங்கள் நுண்ணணுத் துகழ்களாகக் காணப்படும். வெளிப்பாடு இல்லாத முக்கால் பகுதியில் சுற்றிவரும் தோற்றம் இருக்கும். கால்பகுதியில் தெரியாத நிலையில் இருந்தும் தெரிநிலைக்கு மாறித் தோற்றம் அல்லது படைப்பு என்னும் பகுதிக்குள் விரையும்.
இதனை இன்றைய விஞ்ஞானத்தில் மீநுண்மின் அணுக்களின் பௌதீகம் (Quantum Physics) அகிலத்தின் சக்தித் துணிக்கைகளையும் சக்தியற்ற ஆராய்கின்றது. இது திருமந்திரத்தில் பிரணவப் பொருளாக ஓம் எனும் ஒலியில் குறிக்கப்படுகின்றது. மேலும் நாதவிந்து மண்டலமே அகிலமாகும்.
“நாதத்தில் விந்துவும் நாத விந்துகளில்
தீதற்று அகம் வந்த சிவசக்தி என்னவே
பேதித்து ஞானங்கிரியை பிறத்தலால்
வாதித்து இச்சையில் வந்தெழும் விந்துவே.” திருமந்திரம் 382.
பரம்பொருளின் சர்வ வியாபகம் உடலாய், உயிராக, அது உணரும் உணர்வாக உள் ஒளிரும் தீச்சுடராய் அண்டம் முழுவதுமாய் அருளுதலைத் திருமூலர் குறிப்பிடுகின்றார்.
“ஊனாய் உயிராய் உணர் அங்கியாய் முன்னம்
சேணாய் வான் ஓங்கித் திரு உருவாய் அண்டத்
தாணுவம் ஞாயிறும் தண்மதியுங் கடந்து
ஆள்முழுது அண்டமும் ஆகி நின்றானே.” திருமந்திரம் 374.
சிவநடனமான நடராஜர் உருவஅமைப்பு நாட்டியத்திலும், சிற்பக்கலையிலும் சில அளவுப் பிரமாணங்களை உடையது. இது ஒரு வட்டத்தினுள் இரு முக்கோணங்களை மேலும் கீழாக அடக்கிய அமைப்பாக உள்ளது. இதுவே சிதம்பரசக்கரம் ஆகும். பிரபஞ்சம் பற்றிய சிதம்பர இரகசியமும் இதுவே ஆகும்.
நடராஜரின் மேல் இரண்டு கைகளில் ஒன்றில் உடுக்கையும், மற்றொன்றில் அக்கினியும் உள்ளது. இவ்விரு கைகளையும் நடராஜ திருவுருவின் நாபியுடன் இணைத்துக் கோடுகளை நீட்டினால் அவை சக்கரத்தை 900 இல் நான்கு சமகூறுகளாகப் பிரிக்கும். வேதத்தில் கூறப்படும் பிரபஞ்சத்தின் அமைப்பு இதுவே ஆகும்.
வலதுகை உடுக்கையிலிருந்து இடதுகை அக்கினிவரை இருப்பது தோன்றும் பிரபஞ்சமாகும். அக்கினியில் இருந்து இடக்கைவரை வெளிப்படாத பிரபஞ்சமாகும். அதன் மையப்பகுதி அந்தக்காரம் எனும் ஆதி இருட்டு. இது முயலகன் எனும் அசுரனை மிதித்து அடக்குவதைக் காட்டப்படுகின்றது.
“பரமாண் டத்து ஊடே பராசக்தி பாதம்
பரமாண் டத்து ஊடே படர் ஒளி ஈசன்
பரமாண் டத்து ஊடே படர் தரு நாதம்
பரமாண் டத்து ஊடே பரன் நடமாடும்.” திருமந்திரம் 2734
நடராஜர் தன் இடதுகாலை வீசி உயர்த்திய வீச்சு காட்டுப்பகுதி முதல் தோற்றத்திற்குத் தயராகிற இன்னும் உருவம் கொள்ளாது பிரபஞ்சத் துகள்கள் இடித்தும், வெடித்தும் அழிவின்மூலம் ஆக்கம் நோக்கிப் பாயும் பிரபஞ்சப் பகுதியைக் குறிக்கும். அப்பகுதியில் மற்ற இரு கைகளின் முத்திரைகளும் விசை எதிர்விசைத் தத்துவங்களாக சிவம் பார்வதியாகக் காட்டுகின்றது.
உடுக்கை அடிக்கும் கைப்பகுதியை நெருங்க நெருங்க ஊர்த்துவ முகமான மேல்நோக்கிய கை செல்லும் பாதையைக் காட்டி ஓம்கார நாதத்திலிருந்து உலகங்கள் பிறக்கின்றன.
உடுக்கை முதல் மறுகையில் அக்கினிவரை இருக்கும் பகுதி சக்கரத்தின் கால்பகுதியாகும். இதுவே புருஷசூக்தம் என்றும் மீண்டும் மீண்டும் தோன்றிவரும் கால்பங்கு பிரபஞ்சம். உடுக்கைப்பகுதியில் படைப்புக் கடவுளான நான்முகப் பிரமனின் வேலை தொடங்குகின்றது. இங்கே சிவனுக்கு வேலை இல்லை. மேலும் கீழும் எல்லையில்லாத இந்தப்பகுதியில் பல பிரமன்கள் பல்வேறு பிரபஞ்சங்களின் படைப்புக்கு ஆதாரமாக விளங்கு-கின்றார்கள். இங்கே சிவனும் தென்படுவதில்லை. விஸ்ணுவும் தென்படுவதில்லை. படைப்புத் தொடங்கியவுடன் அது விஸ்ணுபதம் ஆகிறது. உடுக்கைப் பகுதி முதல் அக்கினிப் பகுதிவரை விஸ்ணுவின் காக்கும் பகுதியும் காலமும் ஆகும்.
இது பிரமனின் ஆயுளில் 100 வருடங்கள். அதாவது 31104000,00,00,000 மனித வருடங்கள் இன்று நாம் பிரமனின் 50 வருடங்கள் தாண்டி முதல் நாள் மத்தியானத்தில் உள்ளது. (காலத்தின் அளவு) அதாவது நடராஜரது தலை உச்சி காட்டும் பகுதியில் உள்ளோம். இன்னும் பாதிகாலம் சென்றால் இப் பிரபஞ்சம் அக்கினிப் பகுதியைச் சென்றடையும். படைத்துக் காத்த இந்தப் பிரபஞ்சம் முழு அழிவைச் சந்திக்கும் இடம் அது. அங்கு பிரமனுக்கும் வேலை இல்லை. விஸ்ணுவுக்கும் வேலை இல்லை.
“சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர்
புகலும் மலம் மூவகையும் புணர்ந்தோர்
நிமரில் மலரோன் மால் நீடுபல் தேவர்கள்
நிகழ்நரர் கீடம் அந்தமும் ஆமே.” திருமந்திரம் 2230
மேலும் கீழும் பார்த்தாலும், எல்லையில்லாத அக்கினிப் பிழம்பாகத் தோன்றும் அதுதான் மகாசிவராத்திரி. அடிமுடிகாண இயலாத அதிசயம் நிகழும் இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றத்தின் முடிவு நாள்.
தோற்றம் உள்ள பிரபஞ்சத்திலிருந்து தோன்றவியலாத முக்கால் பங்கு பிரபஞ்சத்திற்கு உலகங்கள் விரையும்போது சிவபெருமானின் பிரளய அக்கினியில் உலகங்கள் எல்லாம் அழிகின்றன. இந்தப்பகுதியில் குறுக்குவாட்டிலும், நெடுக்குவாட்டிலும் அக்கினிதான் உள்ளது. சிவபெருமான் அக்கினி ரூபத்தில் நிற்கிறார். அதுதான் அடிமுடிகாண இயலாத உருவம்.
“வன்னி யெழுத்தவை மாபலம் உள்ளன
வன்னி யெழுத்தவை வானுற ஓங்கின
வன்னி யெழுத்தவை மாபெருஞ் சக்கரம்
வன்னி யெழுத்திடு வாறது சொல்லுமே.” திருமந்திரம் 1256



