நவீன சமூக மூலதனம்
மருத்துவர். சி. யமுனாநந்தா
சமூக மூலதனம் என்பது பொருளாதாரரீதியில் அறிஞர் கார்ல் மாக்ஸ் என்பவரால் சிறப்பாக விபரிக்கப்பட்டது. உழைப்புச் சுரண்டல், தொழிலாளி வர்க்கம், விடுதலை என்பன பற்றிய கருத்துக்கள் சமூக மூலதனம் என்ற நூலில் கார்ல் மாக்ஸ் அவர்கள் கூறி உள்ளார். 19ம் நூற்றாண்டில் புரட்சிகர சிந்தனைகள் உருவாவதற்கும், பல புரட்சிகள் ஏற்படவும் சமூக மூலதனம் பற்றிய கருத்துக்கள் உதவின. இன்றைய காலகட்டத்திலும் சமூக மூலதனத்தை அழிப்பதனால் போராடும் இனங்களை அழிக்கலாம் என்ற கோட்பாடு படுகச்சிதமாக பல நாடுகளால் கடைப்பிடிக்கப்படுகின்றது. இதனால் ஈழத்தமிழரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமூக மூலதனமே சமூகத்தைக் கட்டுப்படுத்தும், சமூக மூலதனமே சமூக மாற்றத்தை ஏற்படுத்தும், சமூக மூலதனமே சமூக முரண்பாடுகளை ஏற்படுத்தும். சமூக மூலதனத்தின் பரம்பல் உலகில் மனிதரிடையே ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். இன்னும் 50 வருடங்களில் நவீன சமூக மூலதனம் எவ்வாறு இருக்கும் என ஆராய்ந்து அதற்கு ஏற்றாற்போல் எமது இளைய தலைமுறையினருக்கு கல்வியூட்டினாலேயே தமிழ்ச்சமூகம் தன்னைத்தானே காத்துக் கொள்ளும்.
நவீன சமூக மூலதனம் பின்வரும் ஐந்து துறைகளைச் சார்ந்ததாக அமையும்.
(1) மீநுண்துமி மின் கணணித் தொழிற்துறை ( Quantum Computing Technology))
(2) மீநுண்மத் தொழிற்துறை (Nanotechnology)
(3) ஈர்ப்பு அலைச்சக்தித் தொழிற்துறை (Gravitational Wave Energy Technology)
(4) உயிரியல் தொழில்நுட்பத்துறை ((Biotechnology)
(5) சமூக வாழ்வுத் தொழிற்துறை ( Social Lifestyle Technology)
இவ்வைந்து தொழிற்துறைகளை நோக்கிய கற்கைகள் எதிர்காலத்தில் பொருளாதார முன்னேற்றத்தைத்தரும். இவற்றில் முன்னணியில் உள்ள நாடுகள் உலக வல்லரசாகும். உதாரணமாக சமூகவாழ்வுத் தொழிற்துறையில் விண்வெளி சுற்றுலாப் பயணங்கள், இன்றைய சுற்றுலாவிகளை மாற்றம்காண வைக்கும்.
இவ்வைந்து துறையில் பின்தங்கிய இனம் அல்லது சமூகம் சமூகத்தில் தாழ்ந்த நிலையினை அடையும். எனவே இவை தொடர்பான அடிப்படை சிந்தனைகளையும், ஆற்றல்களையும் எமது இளம் சமூகத்திற்கு விதைக்க வேண்டிய பொறுப்பு எமது ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உள்ளது.




