செய்திகள்

கொழும்புத் துறைமுக கிழக்குக் கொள்கலன் முனைய அபிவிருத்தியும் இந்தியாவும்

                                                              ……………………………………………….

இந்தியா அயல்நாடு என்பதால், ஈழத் தமிழர்கள் விடயத்தில் அமெரிக்காவும், இந்தியா சொல்வதைக் கேட்டே அனைத்துச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தமை 1984ஆம் ஆண்டின் பின்னரான வரலாறு

                                                              ………………………………………………

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் குழறுபடிகளுக்கு மத்தியில் எவர் பதவியேற்றாலும் இந்தியாவைப் பொறுத்தவரை பெரியளவில் மாற்றங்கள் இருக்காது. ஏனெனில் இந்தோ- பசுபிக் பிரந்திய அமெரிக்க நலன் சார்ந்த விடயங்களைச் சாதமாகப் பயன்படுத்தியே பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தையும் நிலை நிறுத்த வேண்டிய சூழல் இந்தியாவுக்கு உண்டு. அத்துடன் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் இந்தோ- பசுபிக் பிராந்தியச் செயற்பாடுகள் என்பது அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள், தீர்மானம் எடுப்பவர்களின் கைகளிலேயே உண்டு. ஆகவே யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆசியப் பிராந்தியச் செயற்பாடுகளில் மாற்றங்கள் இருக்கதென்றே கூறலாம்.

ஆனாலும் நரேந்தரமோடி அரசாங்கத்தைப் பொறுத்தவரை டொனால்ட் ட்ரம் மிண்டும் பதவிக்கு வரவேண்டுமென எதிர்ப்பார்க்கிறது. ஏனெனில் சீனா பாக்கிஸ்தான் போன்ற நாடுகளோடு ட்ரம் மல்லுக்கட்டும் அரசியலால்இ மோடிக்குக் கொஞ்சம் லாபம் உண்டெனலாம். அதனால் ட்ரம்பை விருப்பக் கூடும்.

டொனால்ட் ட்ரம் மீண்டும் பதவிக்கு வரவேண்டுமென புதுடில்லியில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதன் பின்னணியில் மோடியின் ஆதரவாளர்கள் உள்ளனர் என்பது வெளிப்படை. ஆனால் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள்இ தீர்மானம் எடுக்கும் இராஜதந்திரிகள். அமெரிக்காவின் ஆசியக் கொள்கைகளை உள்வாங்கியே செயற்பட விரும்புவர்.

இந்த நிலையிலேயே அமெரிக்காவில் யார் ஆட்சி அமைத்தாலும் அமெரிக்க இந்திய வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றங்கள் இருக்காதென ஹர்ஷ் சிரிங்லா  புதுடில்லியில் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார். நீண்டகாலமாக இந்து சமூகத்திரப் பிராந்திய நலனின் அமெரிக்காவுக்கு இருக்கும் அக்கறை இந்திய நலனுக்கும் உகந்ததாகவே அமைந்திருக்கிறது. நீண்டகாலமாக அமெரிக்கா போன்ற மேற்குலநாடுகளின் ஒத்துழைப்பை இந்தியா எப்போதுமே உரிய முறையில் பயன்படுத்தியிருக்கிறது என்ற தொனியிலேயே ஹர்ஷ் சிரிங்லா வெளியிட்ட கருத்தும் உள்ளது.

மலாபார் கடற்பரப்பில் இந்திய அவுஸ்திரேலிய கடற்படையினர் கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்  நிர்வாகம் இருந்தாலென்ன வேறு எவராவருடைய நிர்வாகம் இருந்தாலென்ன அந்த நிர்வாகம் எல்லாமே தம்முடன் ஒத்துழைத்துச் செயற்படும் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு உண்டு. இரண்டு வேட்பாளர்களில் யார் வெற்றிபெற்றாலும் இந்தியா அதனை வரவேற்கும். வரலாறுகளும் அப்படித்தான் உள்ளன.

ஏனெனில்இ அமெரிக்க இந்திய வெளியுறவுக் கொள்கைகள் எழுதப்பட்டவை. ஆட்சியாளர்களின் தன்மைக்கு ஏற்ப அந்தக் கொள்கைகள் மாறக் கூடியவையும் அல்ல. அதற்குக் கிட்டிய உதாரணமாக கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனைய அபிவிருத்தித் திட்டத்தை இந்தியா ஜப்பானுடன் சேர்ந்து செய்ய எடுத்த முயற்சிக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கியுள்ளதைக் கூறலாம்.

அத்துடன் இந்தியா ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் அமெரிக்காவைத் தங்கள் பக்கம் வைத்திருக்கும் நோக்கிலும் அவ்வாறான வெளியுறவுக் கொள்கைகளை வகுத்துள்ளதென்ற கருத்துக்களும் இல்லாமில்லை. இந்தியா அயல்நாடு என்பதால்இ ஈழத் தமிழர்கள் விடயத்தில் அமெரிக்காவும் இந்தியா சொல்வதைக் கேட்டே அனைத்துச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தமை 1984ஆம் ஆண்டின் பின்னரான வரலாறு.

2012ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக ஜெனீவா மனித உரிமைச் சபையில் பராக் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் சமர்ப்பித்திருந்த பிரேரணைகூட இந்தியாவின் ஆலோசனைகளுடனேயே அமைந்திருந்தன. 2002ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்த சமாதானப் பேச்சுக்கள்கூட அவ்வப்போது இந்தியாவுக்கு தெளிவுபடுத்தப்பட்டிருந்தன. அதாவது நேர்வே சமாதானத் தூதுவர் கொழும்புக்கும் வன்னிக்கும் வந்து திரும்பும்போது புதுடில்லிக்கும் செல்வது வழமை.

ஆகவே இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா, இந்தியா சொல்வதைக் கேட்டே செயற்பட்டதுடன், இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்சார் விடயங்களில் அமெரிக்க விரும்பத்துக்கு ஏற்பவே இந்தியாவும் செயற்பட்டு வருகிறது. இதன் பின்னணியிலேயே இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்கள் தொடர்பாக அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ ஆசிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த நாட்களில், இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் விடயத்தில் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இலங்கை அரசாங்கத்துக்குக் கடும் அழுத்தம் கொடுத்துள்ளார்.

இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்றில் இந்தியாவும் ஜப்பானும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் கைச்சாத்திட்டிருந்தபோதும், அந்தத் திட்டம் இதுவரை செயற்படுத்தப்படவில்லை.

2015ஆம் ஆண்டு 500மில்லியன் டொலர்களில் இத் திட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதும், 2016ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கதில் உருவான குழப்பங்களினால் கைவிடப்பட்டிருந்தது. ஆனாலும் 2019ஆம் ஆண்டு மே மாதம் இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. ஆனால் அதே ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான சூழலில், அந்த ஒப்பந்தம் பற்றி எதுவுமே பேசப்படவில்லை.

இந்தவொரு நிலையிலேயே இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே கோட்டாபய ராஜபக்சவுக்குக் கடும் அழுத்தம் கொடுத்திருக்கிறார். அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இந்தியாவில் உயர்மட்டச் சந்திப்புகளில் ஈடுபட்டிருந்தபோதும், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனைய விவகாரம் கலந்துரையாடப்பட்டிருந்ததாக டில்லி உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

பொம்பியோ ஆசிய நாடுகளுக்கான விஜயத்தின்போது. அதாவது சென்ற 29ஆம் திகதி வியாழக்கிழமை இது தொடர்பான இணையவழிக் கருத்தரங்கு ஒன்றில் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்திருந்தார்.

ஏசியன் இந்திய நிலையம், உலக விவகாரங்களுக்கான இந்தியக் கவுன்சில், பாத்ஃபைண்டர் உட்பட பல ஆய்வு நிறுவனங்கள் கூட்டாகச் சென்ற வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்த இணையவழி கருத்தரங்கில் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனைய அபிவிருத்தித் திட்டத்தின் அவசியம் தொடர்பாக இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே விரிவாக எடுத்து விளக்கியிருந்தார்.

அந்தத் திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது. சீனாவின் மண்டலமும் பாதையும் என்ற செயற்திட்டத்தின் வரைபடத்தில் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையம் இடம்பெற்றுள்ளது. இதனாலேயே கிழக்குக் கொள்கலன் முனையத்தின் அபிவிருத்தி வேலைகளை 2019ஆம் ஆண்டு மே மாதம் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் செய்து முடிக்க வேண்டுமென இந்தியா அழுத்தும் கொடுத்துள்ளது.

ஆனால் இதற்கு பௌத்த குருமாரின் எதிர்ப்புகள் இருந்தால் இந்தத் திட்டம் கைவிட்டிருந்தது. எனினும் தற்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ளதால் கோட்டாபய அரசாங்கத்தினால் இந்தத் திட்டத்தைச் செய்து முடிக்க முடியுமென இந்தியா நம்புகின்றது. ஆனால் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையம் நூறு வீதமும் இலங்கையின் திட்டமாகவே இருக்க வேண்டுமென துறைமுக ஊழியர்கள் கோரிக்கையுள்ளனர். எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். தொடர்ந்து போரடியும் வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் தேசிய பாதுகாப்பு மற்றும் உபாய மார்க்க ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்குத் தாரைவார்த்துக்கொடுக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு சிங்களே என்ற அமைப்பின் பொதுச்செயலாளர் மடில்லே பன்னலோக தேரர் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவிடம் கோரியுள்ளார்.

சிங்களே என்ற அமைப்பால் நேற்று 5ஆம் திகதி வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே தேரர் இவ்வாறு கோரியதோடு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இதனால் ஊழியர்கள், பௌத்த குருமாரின் கோரிக்கையை மீறிச்செயற்பட முடியாதவொரு நிலைமை இருப்பதாவே இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்குச் சொல்லியிருக்கிறது. ஆனால் அதனை ஏற்கும் நிலையில் இந்தியா இல்லை என்பதையே கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரின் அழுத்தம் எடுத்துக் காட்டுகின்றது. அமெரிக்க ஆதரவோடுதான் இத் திட்டத்திற்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தூதுவரின் அழுத்தம் காண்பிக்கிறது.

ஆகவே அமெரிக்காவில் ஆட்சி மாறினாலும் இத் திட்டத்திற்கு அமெரிக்க நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கும். ஏனெனில் சீனாவின் மண்டலமும் பாதையும் என்ற திட்டத்தின் மூலமாக இலங்கைக்குள் அதிகரித்து வரும் சீன ஊடுருவல்களைத் தடுப்பதற்கான எதிர்ச் செயற்பாடாகவே கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வது என்ற போர்வையில் அதற்குள் கால்பதிக்க வேண்டிய அவசியத் தேவை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உண்டு. அதற்கு ஆதரவாகவே ஜப்பானையும் இந்தியா கூட்டுச் சேர்த்துள்ளது.

இந்த இடத்திலேதான் ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் அமெரிக்கா மீண்டும் மீண்டும் இந்தியா சொல்வதைக் கேட்டே செயற்படும் என்பதில் சந்தேகமேயில்லை. ஏனெனில் மேற்படி சுட்டிக்காட்டப்பட்ட இந்தோ- பசுபிக் பிரந்திய நலன் என்பது அமெரிக்க இந்திய அரசுகளுக்கு முக்கியமானது என்ற அடிப்படையில், இந்தியாவைக் கடந்து ஈழத்தமிழர் விவகாரத்தில் அமொக்கா கால் பதிக்காது என்பது வரலாற்றுத் தெளிவு.

நன்றி கூர்மை செய்தித் தளம்