காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் 1,390 நாட்களாக சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று காலை கந்தசுவாமி ஆலயம் முன்பு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமையின் பிரதிபலிப்பு மரணங்கள், பாலியல் வன்முறைகள், நிலங்கள் மற்றும் உரிமைகள் பறிப்பு என இங்கு வாழும் தமிர்கள் கொன்று குவிக்கப்பட்ட இடமாக இலங்கை நாடு விளங்குகிறது.போரில் இறந்தவர்களுக்கு விளக்கேற்றக்கூட அனுமதி இல்லை என்றால் இங்கு எவ்வாறான மனித உரிமை மீறல் நடந்திருக்கும் என்பதை இலகுவாக கண்டறியலாம் என தெரிவித்தனர்.
(1) இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் ஈழத்தமிழ் அகதிகள் புலம் பெயர் தமிழர்கள் ஆகியோர் வாக்கெடுப்பில் அனுமதிக்கப்பட வேண்டும்.
(2) இலங்கையில் நடந்த தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகள் குறித்த சுயேச்சையான அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும்
(3) இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலத்திலிருந்து இலங்கை இராணுவப் படைகள், சிங்கள நில ஆக்கிரமிப்பாளர்களை இலங்கை அரசு உடனடியாக மீட்டுக்கொள்ள வேண்டும்.
(4) தீவிரவாத நடப்பு சட்டம், பல்வேறு பாதுகாப்பு சட்டங்கள் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக நிபந்தனைகள் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.
(5) இலங்கையில் நடந்தது தமிழர்களுக்கெதிரான இனவழிப்பு நடவடிக்கைதான்
(6) இலங்கைக்கான விசேட ஐ.நா அறிக்கையாளரை நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையையும், வடக்கு-கிழக்கு நிலவரத்தைக் கண்காணிக்கவும் மேன்படுத்தவும், உறுதுணையாகவும் இருக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கள அலுவலகம் ஒன்றை வடக்கு- கிழக்கில் நிறுவ வேண்டும் என தெரிவித்தனர்.
இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள், வலிந்து காணாமலாக்கப்படுதல், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபட்டவர்களை சர்வதேச நியாயாதிக்க கொள்கைகளை பயன்படுத்தி விசாரணை செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பரிந்துரை செய்யவேண்டும் ,
நீர் இல்லாமல் மீன்கள் இறந்துவிடுவது போல, சட்டமும் ஒழுங்கும் இல்லாத சமூகத்தில் உரிமைகள் இல்லாமல் மனிதன் இறந்து விடுகின்றான். எனவே “சமாதானத்தை விட உரிமைகளே பெறுமதியானவை” என்று அமெரிக்க ஜனாதிபதியான வூற்றோ வில்சன் சொன்னதை இன்று மீண்டும் நினைவூட்டி இலங்கையின் மனித உரிமை மீறலுக்கு நீதி காணப்படவேண்டும்“ எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.(15)





