செய்திகள்

தீ நுண்மிச்சுரம் பிணிப்பேரிடர் காவு கொண்ட சமூக உளமும் அதனை எதிர்கொள்ளும் முறைமைகளும்

மருத்துவர். சி. யமுனாநந்தா

‘உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கன் கலைவதாம் நட்பு’ – திருக்குறள் –

ஒருவருக்குத் துன்பம் வரும்போது அவருக்கு உதவுவதே சிறந்த நட்பாகும். இதனை திருவள்ளுவப் பெருமான் ஒருவன் அணிந்திருக்கும் ஆடை கழறும்போது கை எவ்வாறு மானத்தைக் காப்பாற்றுகின்றதோ அவ்வாறே இயல்பாக துன்பத்தில் நாம் மற்றவர்களுக்கு உதவுதல் வேண்டும். ஒருவர் துன்பப்படும்போதும், ஒரு குடும்பம் துன்பப்படும்போதும் அவர்களுக்கு பிறரது ஆதரவு தேவைப்படும். துன்பத்தில் அளிக்கப்படும் உடனுதவிகளும் ஆதரவுமே அவர்களை துன்பத்தில் இருந்து மீளலை இலகுவாக்குகின்றது.

ஒரு சமூகம் பாரிய நெருக்கீடுகளை எதிர்கொள்ளும்போது அதில் இருந்து மீள்வதற்கு அச்சமூகத்திற்கு வெளி ஆதரவு தேவைப்படுகின்றது. எமது பிரதேசத்தில் யுத்தத்தினால் ஏற்பட்ட சமூக உளத் தாக்கங்கள், 2004 கடல்கோளினால் ஏற்பட்ட சமூக உளத் தாக்கங்கள் என்பவற்றில் இருந்து மீள்வதற்கு பாரிய சமூக உளவழங்கல் சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போதைய தீ நுண்மிச்சுரம் உருவாக்கி உள்ள சமூக உளத்தாக்கத்தின் பாதிப்பானது எமது சமூகத்தில் யுத்தத்தினால் ஏற்பட்ட சமூக உளத்தாக்கப் பாதிப்பைவிட அதிகமானது. கடல்கோளினால் ஏற்பட்ட சமூக உளத்தாக்கத்தைவிடப் பாரியது.

தற்போது உலகம் முழுவதும் பாரிய தொற்றுநோயாக தீ நுண்மிச்சுரம் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏற்பட்ட இறப்புக்கள், உடல்நோய்நிலை என்பவற்றுக்கு அப்பால் மனிதனைக் கண்டால் மனிதன் பயப்படும் நிலை உருவாகியமை மிகவும் அவலமான தன்மையாகும். இதனால் இன்று உலகில் ஒருவருக்கொருவர் உதவும் தன்மை தொற்றுநோய் காரணமாக அருகிவிட்டது. அடுத்து கடந்த ஒரு வருடமாக ஏற்பட்ட சமூக முடக்கம் பொருளாதார முன்னேற்றத்தில் உலகில் அனைத்து நாடுகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எமக்கு தற்போதைய பிணிப்பேரிடர் உருவாக்கிய சமூக உளத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சர்வதேசரீதியில் உதவிகளைப் பெறுவதில் பாரிய தடங்கல்கள் உள்ளன. ஆயினும் தீ நுண்மிச்சுரப் பிணிப்பேரிடர் உருவாக்கிய சமூக உளத்தாக்கங்கள் மிகவும் ஆழமானவை. அதனை நாம் திட்டமிட்ட முறையில் எதிர்கொள்ளல் அவசியம். இதில் முதன்மையானது மாணவ சமூகத்தில் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்தல் ஆகும். ஏனெனில் இவர்களே எமது எதிர்காலச் சிற்பிகள் ஆகும். பாடசாலைக்கல்வி மீளவும் ஆரம்பிக்கப்படும்பொழுது மாணவர்களின் பாடப்பரப்பில் கவனம் செலுத்தும் அதே வேளையில் மாணவர்களின் சமூக உளத்தேவைகளையும் பூர்த்தி செய்தல் அவசியம்.

மாணவர்கள் குழுவாகச் செயற்படும் நிகழ்வுகளை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்கள் விளையாட்டுக்குச் செலவிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்;.

தீ நுண்மிச்சுரப் பிணிப்பேரிடர் சமூக உளத்தாக்கம் கிராமமட்டங்களில், மக்களின் இயல்பான சமூகச் செயற்பாடுகளை நிறுத்தி உள்ளது. இவற்றினை நாம் வழமைக்கு மீளவைத்தல் அவசியம். கிராமமட்டத் தலைமைத்துவம், சனசமூக மன்றங்கள், கலாசார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள், மத நிகழ்வுகள் என்பவற்றை மீள் இயக்கத்திற்கு கொண்டு செல்லல் வேண்டும். பிணிப்பேரிடர் சமூக முடக்கம் எமது சமூகத்தை மீள முடியாத நிலைக்கு இட்டுச் செல்வதனை நாம் அனுமதிக்க முடியாது.

தற்போது அதிகரிக்கும் குற்றச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல், போதைப் பாவனை என்பனவும் பிணிப்பேரிடர் சமூக உளத்தாக்கத்தின் வெளிப்பாடுகளாகத் தீவிரமடையும். இதனை வெறும் சட்டத்தினால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. மாறாக சமூக கலாச்சார செயற்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். அடுத்து பாடசாலை மாணவர்கள் அதிக அளவில் இடைவிலகும் நிலையும் பாடசாலை மாணவர்களுக்கு இடையே போதைப்பொருள் பாவனையை விஸ்தரிக்கும் முயற்சிகளும் அதிகரிக்கலாம்.

பாடசாலை மாணவர்களின் சமூக உளத்தாக்கம் க. பொ. த சாதாரணதர மாணவர்களில் அதிகம் ஏற்படும். எனவே இம் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியில் விசேட கவனம் தேவை. அடுத்து தற்போது நடைபெறும் க. பொ. த சாதாரணதர பரீட்சையில் பலர் பாடசாலைக்குச் செல்லாதும், பரீட்சையில் சித்தி அடையாதும் கல்வியை நிறுத்தும்நிலை ஏற்படலாம். எனவே இத்தகைய மாணவர்களுக்கு விசேட மீள்பரீட்சை நடத்த கல்வியியலாளர்கள் சிந்திக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் கல்வியைக் கைவிடும் பட்சத்தில் நீண்டகால சமூக உளப்பிரச்சினைகள் ஏற்படும்.

அடுத்து சமூகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்கள், தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் என்பனவும் பல இளைஞர்களுக்கு தொழில்வழிக் கல்வியை அளிக்க வேண்டும்.இவை முழுமையபாக இயங்க வேண்டும். இவையே நாம் எதிர்கொள்ளும் சமூக உளப் பிரச்சினைகளை சுமூகமாக எதிர்கொள்ள உதவும்.