செய்திகள்

நீதியும் காலநீட்சியில் காணாமலாக்கப்படும் !

கொற்றவை

சரணடைந்தனர் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்
வதைப்பட்டனர், வேதனைப்பட்டனர், அங்கவீனர் ஆக்கப்பட்டனர்
கொத்துக் குண்டடிபட்டு செத்து மடிந்தனர்; குற்றுயிராய் குலையுயிராய் -கொடும்
எறிகணைகள் அவர்களின் உடல்பிளக்க அவலஓலத்துடன் உயிர்விட்டனர் !

பாதுகாப்பு வலயங்கள் அவர்க்கு அங்கு கொலை வளையங்கள்
தவித்த வாய்களுக்கு தண்ணியில்லை ஒருநேர வயிற்றுக்கே கஞ்சியில்லை
அவயவங்கள் இழந்தோருக்கு சிகிச்சை செய்ய மருந்தில்லை -இற்றைக்கு
பன்னீராண்டுகளுக்கு முன் முள்ளிவாய்காலில் ஈழத்தமிழின பேரழிவு !

சான்றுகளுடன் ஆவணப்படுத்தப்பட்டு அறிக்கையிடப்பட்டுள்ளன
மன்றுகள் கூடி விவாதிக்கப்பட்டு பிரதிவாதிகள் இனம் காணப்பட்டும்
இன்னமும் ஈழத்தமிழினம் உலகின் மனச்சாட்சியை தட்டுகின்றது -ஓர்மத்துடன்
தட்டிக் கொண்டிருக்கின்றது நீதி கிடைக்குமென்ற எதிர்பார்ப்புடன் !

கொலைஞர்கள் குருதியில் கைநனைத்தோர் எல்லோரும் இப்பொழுது
மீட்பர்களாகவும் புனிதர்களாவும் காட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு
ஆட்சிப்பீடத்தில் கோலோட்சும் போது சான்றுகள் மறைக்கப்படும் -பொய்
சாட்சிகள் புனையப்படும் நீதியும் காலநீட்சியில் காணாமலாக்கப்படும் !