செய்திகள்

தமிழ் தேசிய செயற்பாட்டாளர் சண்முகவேல் விக்னேஸ்வரன் காலமானார்

தமிழ் தேசிய செயற்பாட்டாளரும் சமூக சேவையாளருமான லயன் சண்முகவேல் விக்னேஸ்வரன் கொரோனா தொற்று காரணமாக கொழும்பில் நேற்று வியாழக்கிழமை காலமானார். அன்னாரது இறுதி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு பொரல்ல மயானத்தில் நடைபெற்றது. கொழும்பு றோயல் மருத்துவமனையில் கடந்த இரண்டுவரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிற்சை பலனளிக்காமல் காலமானார்.  இறக்கும்போது அவருக்கு வயது 50.

Global Enterprises நிறுவனத்தின் ஸ்தாபகரான விக்னேஸ்வரன் கணனி தொழில்நுட்ப நிபுணராக கொழும்பில் நீண்டகாலம் பணியாற்றி வந்திருந்ததுடன் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் பால் பெரும் பற்று கொண்டிருந்ததுடன் பல்வேறு பங்களிப்புக்களையும் செய்துள்ளார். அத்துடன், வடக்கு கிழக்கில் இருந்து கல்விக்காகவும் தொழிலுக்காகவும் கொழும்புக்கு வரும் இளைஞர் யுவதிகளுக்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை செய்துவந்துள்ளதுடன் வழிகாட்டியாகவும் செயற்பட்டுள்ளார். யாழ் நாச்சிமார் கோயிலடியை பிறப்பிடமாக கொண்ட விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவன் ஆவார்.

சட்டத்தரணி தவராசா மற்றும் மறைந்த அவரது பாரியார் கௌரி சங்கரி தவராசா ஆகியோருடன் மிகவும் நெருக்கமான நட்பை கொண்டிருந்த அவர் அவர்களுடன் இணைந்து பல்வேறு அரசியல், சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.