செய்திகள்

இலங்கை குறித்த இந்திய வெளியறவு கொள்கையில் மாற்றம் வருமா?

–ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவுக்குமான இடைவெளி மேலும் மேலும் அதிகரிக்கும். ஆனால் இதற்குத் தீர்வு 13 அல்ல என்பதை புதுடில்லி புரிந்துகொள்ளாதவரை, இலங்கையின் துணிச்சலும் இந்தியாவைப் புறக்கணித்துச் செயற்படும் தன்மையும் மேலும் கையோங்கும்–

-அ.நிக்ஸன்- 

இலங்கையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகக் காலம் கடந்து இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மத்தியில், பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான சுப்பிரமணியன் சுவாமியின் கொழும்பு வருகை ஆரோக்கியமான உறவை உருவாக்குமெனக் கூறமுடியாது.

ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்ற முறையில் மகிந்த ராஜபக்சவின் பிரதமர் மாளிகையில் இடம்பெற்ற சரஸ்வதி பூஜையில் முக்கிய பிரமுகராகக் கலந்துகொள்ள சுப்பிரமணியன் சுவாமி கொழும்புக்கு வந்திருந்தார். இவருடைய வருகை தனிப்பட்ட முறையில் அமைந்திருந்தாலும் இதன் மூலம் இந்தியாவுடன் ஒத்துச் செல்ல வேண்டுமென்ற நெருக்கத்தை இலங்கைக்கு ஏற்படுத்தாது.

அதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஓன்று- சுப்பிரமணியன் சுவாமி தனிப்பட்ட முறையில் ராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமானவராக இருக்கலாம். ஆனால் இந்தியாவைக் கடந்து தமது அரசியல். பொருளாதார நகர்வுகளை அமெரிக்கா. சீனா போன்ற வல்லாதிக்க நாடுகளுடன் முன்னெடுக்க வேண்டுமென்ற சிந்தனை சிங்கள ஆட்சியாளர்களிடம் 2009 இற்குப் பின்னர் வலுப்பெற்றுள்ளது.

இரண்டாவது- இந்தியாதான் தங்கள் இரத்த உறவு என்று காலம் காலம் காலமாக நம்புகின்ற ஈழத்தமிழ் மக்கள், சுப்பிரமணியன் சுவாமி தொடர்பாக ஆரோக்கியமான கருத்தைக் கொண்டிருப்பதில்லை. இதனால் இந்தியா தற்போது எடுக்கும் குறைந்தபட்ச முயற்சிகூட பயனளிக்காதென்றே அவர்கள் கருதுகின்றனர்.

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை 2009 இல் முற்றாக அழித்தவர் மகிந்த ராஜபக்ச என்ற அடிப்படையிலேயே ராஜபக்ச குடும்பத்தோடு சுப்பிரணியன் சுவாமிக்கு மேலும் நெருக்கம் ஏற்பட்டதாக ஈழத்தமிழர்கள் நம்புகின்றனர்.

ஆகவே இவ்வாறான பின்புலத்தில் சுப்பிரமணியன் சுவாமி இலங்கையோடு உறவைப் பேணும் நிலையில், அவர் அங்கம் வகிக்கும் நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி அரசாங்கம், இலங்கையோடு உறவை அல்லது தமது கட்டுப்பாட்டுக்குள் இலங்கையைக் கொண்டுவர எடுக்கும் முயற்சிகள் எல்லாமே இந்திய நலன் சார்ந்தது என்ற உணர்வே தமிழர்களுக்கு உருவாகும்.

இந்தியா மீதான நம்பிக்கையீனம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்கனவே வேரூன்றியிருக்கும் நிலையில், சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்கள் கொழும்போடு வைத்திருக்கும் உறவு, இந்தியாவுக்கும் தமிழ் மக்களுக்குமிடையேயான உறவை மேலும் தூரத் தள்ளிவைக்கும் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.

அத்துடன் சுப்பிரமணியன் சுவாமி கொழும்போடு குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தோடு நெருக்கமாகவும் நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார் என்பதற்காகச் சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியாவுக்கு இலங்கையில் சிறந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கவும் முடியாது.

எனவே இவற்றை உற்று ஆராய்ந்து தமது நகர்வுகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களைச் செய்யாமல், குறிப்பாக பாராமபரியமான மரபுவழி வெளியுறவுக் கொள்கையை மாத்திரம் வைத்துக் கொண்டு, இலங்கையைத் தமது கட்டுப்பாட்டில் அல்லது புதுடில்லியோடு ஒத்துப்போகக்கூடிய முறைமையை உருவாக்கவே முடியாது என்பது பட்டறிவு.

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த உணர்வுகளுக்கு எதிரான இந்தியப் பிரமுகர்கள் மூலமாக இலங்கையை இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் தமக்குச் சாதமாகக் கொண்டுவரலாம் அல்லது சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தலாமென நம்புவதும் இந்திய நகர்வுக்கு நல்லதல்ல.

இந்தோ- பசுபிக் மற்றும் தென்சீனக் கடல் பிராந்திய விவகாரங்களில்கூட அமெரிக்க போன்ற மேற்குலக நாடுகள் தமது வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றங்களையும் காலத்தின் தேவை கருதிய திருத்தங்களையும் மேற்கொள்ளும்போது, அந்தப் போட்டியின் பங்குதாரராக இருக்க விரும்பும் இந்தியாவும், இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் ஏன் மாற்றங்களைச் செய்ய முடியாதென்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா. பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொண்ட இராணுவப் பாதுகாப்புக்கூட்டணியான அக்கியூஸ் ஒப்பந்தம் ஆசியான் உறுப்பு நாடுகளிடையே பிளவுகளைக் கொண்டு வருமெனவும் தமது ஆயுதபலத்தைக் குறைக்கும் என்றும் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் வெளிப்படையாகவே கூறுகின்றன. பிலிப்பைன்ஸைத் தவிர ஏனைய உறுப்பு நாடுகள் விமர்சிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இதுவரை இந்தியா அக்கியூஸ் ஒப்பந்தம் குறித்து தமது அதிகாரபூர்வமான கருத்தை வெளியிடவில்லை.

ஆனால் இந்தியாவைத் தலைமையாகக் கொண்டு இயங்கி வரும் ஆசியாவின் நேட்டோ இரணுவ அணியென வர்ணிக்கப்படும் குவாட் அமைப்புக்கு ஆசியான் நாடுகளின் ஆதரவு உண்டு. ஏனெனில் பிராந்தியத்தில் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற உணர்வு பல ஆசியான் உறுப்பு நாடுகளிடம் இருக்கின்றன.

ஆகவே இந்தோ- பசுபிக் பிராந்தியத்தை மையமாக் கொண்டு அவ்வப்போது புதிய வியூகங்களை வகுத்து வரும் அமெரிக்கா, தனது வெளியுவுக் கொள்கையிலும் தேவையான அளவு மாற்றங்களை அல்லது விட்டுக் கொடுப்புகளைச் செய்து வருகின்றது என்பது சமீபகால வெளிப்பாடு.

உதாரணமாக அவுஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கி இந்தோ- பசுபிக் மற்றும்  தென் சீனக் கடல் விவகாரங்களில் மாற்ங்களைக் கையாள்கின்றது. (ஆப்கானிஸ்தானில் இருந்து படைவிலகிய பின்னர்)

அது மாத்திரமல்ல அமெரிக்கச் சீனப் பேச்சுக்கள் கூட ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசியல். பொருளாதார வளர்ச்சி மற்றும் இராணுவச் செயற்பாடுகள். பிராந்தியப் பாதுகாப்பு விவகாரங்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் சீனாவுடன் விரிவாக ஆராய அமெரிக்க முற்படுகின்றது. சீனாவுடனான வர்த்தக உறவுக்குச் சாத்தியமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கன் கூறியிருக்கிறார்.

அக்கியூஸ் ஒப்பந்தம் தெற்காசியப் பிராந்தியத்தில் அச்சுறுத்தல்களை உருவாக்கும் என்று பல ஆசியான் உறுப்பு நாடுகள் எச்சரிக்கை செய்து வரும் நிலையில், அமெரிக்கா சீனாவுடனான உறவு குறித்துப் புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளமை. அதன் வெளியுறவுக் கொள்கையின் மாற்றம் என்றே கருத இடமுண்டு.

நீண்டதூர நோக்கில் அமெரிக்கா முன்னெடுக்கும் தற்பாகாப்புச் சமாதான முயற்சி என்று கருதினாலும், பிரந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்கும் செயற்பாடாகவே நோக்கலாம். ஏனெனில் அக்கியூஸ் ஒப்பந்தத்தின் பின்னரான ஆசியான் உறுப்பு நாடுகளின் கருத்து வெளிப்பாடுகள், அமெரிக்காவை சீனாவோடு பேசுவதற்கும் தூண்டியிருக்கலாம்.

ஏனெனில், அடுத்த மாதம் ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்தப் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பில் இந்தியாவும் கலந்துகொள்ளும். ஆகவே அதற்கு முன்னராக ஆசியான் நாடுகளைச் சமாதானப்படுத்தக்கூடிய ஏற்பாட்டுக்கு அமெரிக்கா முற்பட்டதன் விளைவே  அமெரிக்கச் சீனப் பேச்சுவாத்தைக்குக் காரணமெனலாம்.

ஆனாலும் ஆசியான் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு அக்கியூஸ் ஒப்பந்தத்திற்குப்; பின்னரான பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துமென மலேசிய ஊடகமான தி ஸ்டார் தெரிவித்துள்ளது. மலேசியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹசைன், ஆசியானில் உள்ள தனது கூட்டாளிகளுடனான சந்திப்பு அடுத்த மாதம் நடத்தப்படுமெனச் சென்ற செவ்வாய்க்கிழமை மலேசிய நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா சீனாவிற்கு இடையேயான அதிகாரச் சமநிலையைப் பொருட்படுத்தாமல், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதே இச் சந்திப்பின் நோக்கமெனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஆயுதப் போட்டி மற்றும் மின்சார அபிவிருத்தித் திட்டங்களை இந்தோனேசியா விரும்பவில்லை என்று இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடி கூறியுள்ளார்.

ஆகவே அமெரிக்கா தனித்து முடிவெடுக்கும் வல்லாதிக்க நாடாக இருந்தாலும்கூட,  அக்கியூஸ்  ஒப்பந்தத்தின் பின்னரான அரசியல் நிலமைகளை ஆராய்ந்தும் அல்லது அந்த ஒப்பந்தத்தைக் கையில் வைத்துக் கொண்டு எச்சரிக்கை விடுவது போன்றதொரு தொனியிலும் சீனாவோடும் மற்றும் ஆசியான் நாடுகள் சமாதானமடையும்  முறையிலும் தனது அணுகுமுறைகளில் மாற்றங்களைக் கையாள்கிறது.

ஆகவே தனது வெளியுறவுக் கொள்கையில் நெகழ்ச்சித் தன்மையை அமெரிக்கா சமீபகாலமாகக் கையாண்டு வரும்போது, ஏன் இந்தியாவும் இந்தோ- பசுபிக் பாதுகாப்பு மற்றும் பிராந்திய நலன்சாந்து இலங்கை தொடர்பான தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களைச் செய்ய முடியாது என்ற கேள்விகள் எழுகின்றன.

டொனாலட் ட்ரமப் ஜனாதிபதியாக இருந்தபோது அமெரிக்க வெளியுறவுக் கொள்கை அதிரடியாக அவ்வப்போது மாறியது. இஸ்ரேல், ரஷியா போன்ற நாடுகளுடன் உறவைப் பேணியது.

ஜி-7 மற்றும் நேட்டோ அணிகளின் கூட்டுறவுகளை மீறியும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை இயங்கியது. யோ பைடன் ஜனாதிபதியாகப் பதவியேற்றதில் இருந்து இன்றுவரைகூட அமெரிக்க வெளியுவுக் கொள்கைகள் அவசியம் கருதி இறங்கிச் செல்கிறது அல்லது மாற்றமடைகிறது.

குறிப்பாக கொவிட் 19 இன் பின்னரான சூழலில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கான தீர்வு குறித்து, சீனாவின் அணுகுமுறையை அமெரிக்கா ஆராய்ந்ததாக குளோபல் ரைம்ஸ் செய்தித் தளம் கூறுகின்றது. இதனால் வர்த்தக உறவு அதிகரித்தாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாகச் சீன-அமெரிக்க வர்த்தக அளவு கடந்த ஆண்டைவிட ஜனவரி முதல் செப்டம்பர் வரை டொலர் அடிப்படையில் 35.4 சதவீதம் அதிகரித்துள்ளது, சீன சுங்க புள்ளிவிவரங்கள் புதன்கிழமை வெளிப்படுத்தின.

முதல் எட்டு மாதங்களில் 36.6 சதவிகித வளர்ச்சியைவிட வளர்ச்சி விகிதம் சற்று குறைவாக இருந்தாலும், இருதரப்பு வர்த்தக அளவு ஜனவரி முதல் செப்டம்பர் வரை $ 543 பில்லியனை எட்டியது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதால், 2018 ஆம் ஆண்டு சீனா- அமெரிக்க வர்த்தகப் போருக்கு முன் இந்த ஆண்டு இருதரப்பு வர்த்தகம் 700 பில்லியன் டொலர்களை எட்டும் என்று குளோபல் ரைமஸ் கூறுகின்றது.

எனவே இதன் பின்னணியில் இலங்கை சீனாவிடம் இருந்து பெருமளவு கடன்களைக் பெற்றாலும் துறைமுகங்கள். மின்சார அபிவிருத்தித் திட்டங்களைச் சீனாவுக்கு வழங்கினாலும் இந்தோ- பசுபிக் பாதுகாப்பில் இலங்கை தம்மோடு நிற்கும் என்ற நம்பிக்கை அமெரிக்காவுக்கு உண்டு. அத்துடன் இலங்கையில் தமக்குரிய தளங்களையும் அமெரிக்கா அமைத்து வருகின்றது.

அதற்கேற்ப இலங்கையுடனான தனது கொள்கையில் அமெரிக்கா மாற்றங்களைச் செய்தும் வருகின்றது. அதாவது ஈழத்தமிழர் பிரச்சினையை இலங்கையின் உள்ளக விவகாரமாகவே பார்ப்பது என்ற நம்பிக்கை இலங்கைக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஈழத்தமிழர்களின் விவகாரத்தில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா சொல்வதைக் கேட்டு வந்த அமெரிக்கா, தற்போது இலங்கையோடு நேரடியாகவும் இலங்கையின் தேவைக்கு ஏற்றவாறும் செயற்பட்டால். பிராந்தியத்தில் தமது நலன்களைப் பெறலாம் என்பதைப் பட்டறிவாகக் கண்டிருக்கிறது. இதன் விளைவுதான் இலங்கைக்குத் தற்போது ஏற்பட்டுள்ள துணிச்சல்.

இந்த இடத்தில் ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவுக்குமான இடைவெளி மேலும் மேலும் அதிகரிக்கும். ஆனால் இதற்குத் தீர்வு 13 அல்ல என்பதை இந்தியா புரிந்துகொள்ளாதவரை, இலங்கையின் துணிச்சலும் இந்தியாவைப் புறக்கணித்துச் செயற்படும் தன்மையும் மேலும் கையோங்கும்.