வடக்கின் கரையோர பிரதேசங்களில் சீனாவினுடைய ஆதிக்கம் அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது – செல்வம் அடைக்கலநாதன்
வடக்கில் சீனாவினுடைய ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.அட்டைப்பண்ணை, இறால் பண்ணை இவ்வாறு அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களை அதற்குள்ளே சிக்க வைத்து இந்தியாவிற்கு எதிரானவர்களாக கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை சீனா செய்கின்றது.
அயல் நாடான இந்தியாவின் பாதுகாப்பினை தமிழர்கள் பாதுகாக்க வேண்டும் என்பது எங்களுடைய கடமையாக இருக்கின்றது.சீனாவினுடைய ஆதிக்கம் வடக்கில் குறிப்பாக கரையோர பிரதேசங்களில் அதிகரிப்பதை நாம் அனுமதிக்க முடியாது.
அண்மைக்காலமாக சீனாவினுடைய கப்பல் ஒரு சர்ச்சையாக இலங்கையிலே பேசப்பட்டது.இந்தியாவிற்கு பாதுகாப்பு விளைவிக்கின்ற எச்சரிக்கையை மீறி அரசாங்கம் சீனா கப்பலை உள்ளே அனுமதித்தது. தற்போது மீண்டும் சீனாவினுடைய ஆதிக்கம் தொடர்வதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.அந்தவகையிலே வடக்கில் சீனாவினுடைய பிரதிநிதிகள், அவர்களுடைய முகவர்கள் வடக்கிலே கூடுதலாக களம் இறக்கப்பட்டிருக்கிறார்கள் என வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)




