ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் – அரை இறுதியில் இலங்கை தொடரும் தர்சினியின் கோல் மழை
சிங்கப்பூர் ஓ சி பி சி உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் 11 நாடுகளுக்கு இடையிலான ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக அரை இறுதியில் விளையாடுவதற்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.ஹொங்கொங் அணிக்கு எதிராக வியாழக்கிழமை (08) நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில் 62 – 51 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது.
போட்டியின் முதலிரண்டு ஆட்டநேர பகுதிகளில் மிகத் திறமையாகவும் வேகமாகவும் விளையாடி கோல்களை இலகுவாக குவித்த இலங்கை, கடைசி இரண்டு ஆட்ட நேர பகுதிகளில் ஹொங்கொங்கின் கடும் சவாலை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் முதலாவது பகுதியில் ஹொங்கொங்கை விட 11 கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை அடைந்து வெற்றிக்கான அத்திவாரத்தை இட்டுக் கொண்டது. அப் பகுதியில் மிகவும் திறமையாக விளையாடிய இலங்கை 20 – 9 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை அடைந்தது.
தர்ஜினி சிவலிங்கம் தனது உயரத்தை சாதகமாக்கிக்கொண்டு மிக இலாவகமாக கோல்களைப் போட்டு இலங்கைக்கு உற்சாகத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார்.2ஆவது கால் மணி ஆட்டநேர பகுதியில் சிறப்பாக விளையாடிய இலங்கை அப்பகுதியை 17 – 13 என தனதாக்கி இடைவேளையின்போது 37 – 22 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
எனினும் அடுத்த கால் மணி ஆட்ட நேரத்தில் எதிர்நீச்சல் போட்டு விளையாடிய ஹொங்கொங், அப் பகுதியை 16 – 11 என தனதாக்கி இலங்கைக்கு சவால் விடுத்தது. ஆனால், ஒட்டுமொத்த கோல்கள் நிலையில் இலங்கை தொடர்ந்தும் 10 கோல்கள் வித்தியாசத்தில் (48 – 38) முன்னிலையில் இருந்தது.
கடைசி கால் மணி ஆட்டநேர பகுதியில் இரண்டு அணியினரும் சரிசமமாக விளையாடி விறுவிறுப்பை ஏற்படுத்தினர். எனினும் அந்த ஆட்டநேர பகுதியை 14 – 13 என தனதாக்கிக்கொண்ட இலங்கை, 62 – 51 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று தோல்வி அடையாத அணியாக அரை இறுதிக்கு முன்னேறியது.
முதல் சுற்றில் இந்தியா, பிலிப்பைன்ஸ் ஆகிய அணிகளையும் கிண்ணத்துக்கான பிரதான சுற்றான இரண்டாவது சுற்றில் மலேசியா, சிங்கப்பூர், ஹொங்கொங் ஆகிய அணிகளையும் வெற்றிகொண்டு அரை இறுதியில் விளையாடுவதற்கு இலங்கை தகுதிபெற்றது.(15)




