”ராஜபக்ஷக்கள் மீண்டும் மக்களை ஏமாற்ற ஆரம்பித்துள்ளனர்”: சஜித்!
ராஜபக்ச தலைமையிலான மொட்டுக்கு எதிராக நாட்டு மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டபோது, மொட்டுவினால் அரசியல் டீலொன்று முன்னெடுக்கப்பட்டதாகவும், நாட்டை அழித்த நிதியமைச்சர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் வெளியேறியதன் பின்னர்,அவர்களின் தேவைக்கேற்ப கையாளக்கூடிய வாயில்காப்பாளர் ஒருவர் நாட்டின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நிதியமைச்சர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் கடந்த காலத்தில் மக்களுக்கு பயந்து ஒளிந்து கொண்டிருந்தனர் என்றாலும், தற்போது அச்சமின்றி மக்கள் முன் பிரசன்னமாகி இருப்பதாகவும், 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும், 2020 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலும் செய்த ஏமாற்று வேலைகளை மீண்டும் நிறைவேற்றி அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்க, மீனவர்கள், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க, வேலையில்லாதவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்க, அரச ஊழியர்களுக்கு பக்க பலமாக இருக்க நிதி இல்லாவிட்டாலும்,இராஜாங்க அமைச்சர்கள் 37 பேர்கள் போலவே அமைச்சரவை அமைச்சர்கள் 20 பேர்களை கொண்டு நடத்தவும், மேலும் 12 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க முன்னாயத்தங்கள் நடந்து வருகின்றன எனவும், 69 அமைச்சர்களை நியமித்து அவர்களுக்கு சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் வழங்க நிதியுள்ளதாகவும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தோட்டத்துறை முதல் மீனவர்கள் வரை அனைத்து மக்களுக்கும் மண்ணெண்ணெய் மானியம் வழங்க நிதி இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் கண்முன்னே பெரியதொரு அரசியல் நாடகம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், இது மிகவும் வேடிக்கையானது எனவும், நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற போர்வையில், நாட்டிற்கு மாவீரர்களும் மாமன்னர்களும் தேவை எனக் கூறி இன பேதம், மத பேதங்களை தூண்டி கடந்த இரண்டரை வருடங்களாக நாட்டை அழித்ததாகவும், அந்தப் பொய்மையைச் சுற்றி பெரும் கூட்டம் ஒன்றுதிரண்டதாகவும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவ்வாறு மக்களால் 69 இலட்சம் மக்கள் ஆணை வழங்கப்பட்ட ஜனாதிபதியை அதே மக்களாலையே வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இறுதியில், ஜனாதிபதி பதவியைப் போன்று நாட்டில் இருக்கவே முடியாத நிலை ஏற்பட்டதாகவும், அவரால் மக்களினதும் நாட்டினதும் இயல்பு வாழ்வு அழிக்கப்பட்டதாகவும், இவ்வாறானதொரு யுகம் அண்மைக்கால வரலாற்றில் உருவாகவில்லை எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாடு முழுவதும், மக்கள் அழுத்தம் மற்றும் அசௌகரியத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
பல மாதங்களாக நாடளாவி ரீதியில் இணையவழிக் கல்வி முறைமை முறையாக இடம்பெறவில்லை எனவும், இதனால் பிள்ளைகளின் பரீட்சைகள் கூட முடங்கியதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை,உள்ளடக்கப் பாடத்திட்டத்தை சரியாக பூர்த்தி செய்யாமல் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள் இருந்த போதிலும் அமைச்சர்களை நியமிக்கவும், வரப்பிரசாதங்களை வழங்கவும் போதியளவு பணம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் மக்கள் அடக்கப்படுகின்றனர் எனவும், இவை அனைத்தும் ராஜபக்சர்கள் விரும்பியபடியே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தனக்கு நெருக்கமானவர்களுக்கு மாத்திரம் அமைச்சுப் பதவிகளை வழங்கி மொட்டுவின் 134 பேரால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதியை தமக்குத் தேவையான விதத்தில் கட்டுப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, இந்தப் போலியான நடிப்பை கண்டு ஏமாற வேண்டாம் எனவும், இவ்வாறான போலிக்காக இலட்சக்கணக்கான மக்கள் போராடவில்லை எனவும், தான் உட்பட எதிர்க்கட்சி அத்தகைய திருடர்களுடன் ஒருபோதும் கைகோர்க்க மாட்டாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.
இந்த அரச பயங்கரவாதத்துக்கும், கொலைக் கலாசாரத்திற்கும், பயங்கரவாதத்துக்கும் அடிபணியக் கூடாது எனவும், இந்நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், மக்கள் அழுத்தத்திலிருந்து விடுபட்டு அனைத்துத் துறைகளிலும் அபிவிருத்திப் புரட்சி ஏற்படும் சகாப்தம் விரைவில் உதயமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சிலாபம் தேர்தல் தொகுதிக் கூட்டம் கடந்த 11 ஆம் திகதி இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியின் சிலாபம் தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளர் சாந்த அபேசேகர அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
-(3)




