செய்திகள்

நெதர்லாந்தை வென்ற இலங்கை – சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதி

நெதர்லாந்துக்கு எதிராக மெல்பர்ன், ஜீலோங் கார்டினியா பார்க் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஏ குழுவுக்கான தனது கடைசி ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண முதல் சுற்று கிரிக்கெட் போட்டியில் 16 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.

மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ், சரித் அசலன்க ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.குசல் மெண்டிஸ் 44 பந்துகளில் 5 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 79 ஓட்டங்களையும் சரித் அசலன்க 31 ஓட்டங்களையும் பெற்றனர்.அவர்களைவிட பானுக்க ராஜபக்ஷ 19 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

நெதர்லாந்து பந்துவீச்சில் போல் வென் மிக்கெரென் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாஸ் டி லீட்ஸ் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.இந்நிலையில் பதிலுக்கு துடுக்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று 16 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

நெதர்லாந்து சார்பாக ஆரம்ப வீரர் மெக்ஸ் ஓ’டவ்ட் தனி ஒருவராக போராடி 53 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 71 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தபோதிலும் இலங்கையின் வெற்றியை அவரால் தடுக்க முடியாமல் போனது.ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் முதல் சுற்று போட்டியில் இன்று இடம்பெறும் ஏ குழுவுக்கான போட்டி இலங்கை அணிக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டி இலங்கை அணிக்கு முக்கிய போட்டியாக அமைந்திருந்தது. இப்போட்டியில் இலங்கை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.(குசல் மெண்டிஸ் குவித்த அபார அரைச் சதம் மற்றும் துல்லியமான பந்துவீச்சு என்பன இலங்கையின் வெற்றியையும் சுப்பர் 12 க்கு தகுதிபெறுவதையும் உறுதிசெய்தன.15)