ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பில் தற்போது 77 இலங்கைப் பெண்கள்
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தற்போது தங்கியுள்ள இலங்கைப் பெண்கள் தொடர்பிலான அறிவிப்பை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ளது.அதன்படி, பாதுகாப்பு இல்லத்தில் தற்போது 77 இலங்கைப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.இவர்களில் 12 பேர் மாத்திரமே தம்மிடம் பதிவு செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்புக்காக செல்லும் பெண்களை ஓமானில் விற்பனை செய்யும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.இது தொடர்பில் அரசாங்கம் பல்வேறு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.இந்நிலையில் ஓமன் மற்றும் டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இதுவரையில் 5 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)




