மாண்டஸ் புயல் திருகோணமலைக்கு வடகிழக்கே 240 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது – பலத்த காற்று மழையுடன் உயரமான அலைகள் எழ அதிக சாத்தியம்
மாண்டஸ் புயல் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் திருகோணமலைக்கு வடகிழக்கே 240 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது.இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு கரையோரத்தின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் டிசம்பர் 09 ஆம் தேதியின் போது மிகவும் பலத்த காற்று மற்றும் பலத்த மழையுடன் மிகவும் உயரமான அலைகள் எழ அதிக சாத்தியங்கள் காணப்படுகின்றது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் வட தமிழ்நாடு-நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளுக்கு மீனவ சமூகம் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளுக்கு மீனவ சமூகங்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர் வரை வீசுவதுடன்,அம்பாந்தோட்டை ஊடாக காலி முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (65-75) வரை வீசக்கூடும்.
வட மாகாணத்தில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (60-70) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.(15)




