மூன்றாம் ஆண்டு படிக்கும் தனது குழந்தை தொல்லை கொடுப்பதாக 119க்கு அழைத்த தாய்
மூன்றாம் ஆண்டு படிக்கும் தனது குழந்தை தனக்கும் தனது குடும்பத்துக்கும் தொல்லை கொடுப்பதாக தாய் ஒருவர் பொலிஸ் அவசர பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக தம்புள்ளை பிரதேசத்தில் இருந்து செய்தியொன்று பதிவாகியுள்ளது.
தம்புள்ளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இருவர், முறைப்பாடு கிடைக்கப்பெற்ற பதினைந்து கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தில் அமைந்துள்ள வீட்டிற்கு நள்ளிரவில் சென்றுள்ளனர்.
பொலிஸார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஹோர்ன் அடித்ததையடுத்து, சில நிமிடங்களுக்கு யாரும் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில், ஒரு பெண் கதவை திறந்து வெளியே வந்துள்ளார்.
வீட்டில் இருந்து வெளியே வந்த பெண்ணிடம், குழந்தையால் பெற்றோருக்கு தொந்தரவு கொடுத்த சம்பவம் குறித்து முறைப்பாடு அளிக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்போது ரொம்ப லேட் ஆகுது, குழந்தை உறங்குகிறது என அப்பெண் பதில் அளித்துள்ளார் ,இந்த விசித்திரமான முறைப்பாடு குறித்து தாயாரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரித்தனர்.
தனது குழந்தை மூன்றாம் ஆண்டு படித்து வருவதாகவும், இரவு சீக்கிரம் தூங்கச் செல்லுமாறு கூறியும், தூங்காமல் பல்வேறு செயல்களில் ஈடுபடுவதாகவும், மற்ற குழந்தைகளை தூங்க விடாமல் குழப்படி செய்வதாகவும், குழந்தையை பயமுறுத்துவதற்காக பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் அப்பெண் பதிலளித்துள்ளார்.
குழந்தைக்கு இரவு எத்தனை மணிக்கு தூங்க வேண்டும் என்று பொலிஸார் கேட்டபோது, மாலை சுமார் 6:30 மணிக்கு குழந்தைகள் தூங்க வேண்டும் என தாய் கூறியுள்ளார்.
இவ்வாறான சிறு சிறு சம்பவங்கலால் பொலிஸாரின் நேரமும் பொதுமக்களின் பணமும் வீண் விரயமாகிறது என தாயாரை கடுமையாக எச்சரித்த பொலிஸார், இனிமேல் இவ்வாறான செயல்களைச் செய்ய வேண்டாம் என எச்சரித்து விட்டுச் சென்றுள்ளனர்.(15)




