செய்திகள்

7 பேரை பலியெடுத்த நுவரெலியா விபத்து: பஸ் சாரதி கைது!

நுவரெலியா – ரதெல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலாவிற்கு சென்ற பஸ், நேற்றிரவு வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்திற்குள்ளானது.

விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 13 வயது சிறுவனும், 8 மற்றும் 12 வயதான சிறுமிகளும் உயிரிழந்தவர்களில் அடங்குகின்றனர்.

உயிரிழந்த ஏனையோர் 26, 27, 43 வயதானவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் ஹட்டன் மற்றும் நானுஓயாவை சேர்ந்தவர்களாவர்.

இதேவேளை, பஸ் விபத்தையடுத்து நானுஓய – ரதெல்ல குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபை குழுவினருடன் இணைந்து, தான் குறித்த வீதியை இன்று பிற்பகல் கண்காணிக்கவுள்ளதாக நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரவித்தார்.

இதன்போது கனரக வாகனங்கள் குறித்த வீதியில் பயணிப்பது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என  அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த 53 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பில் பஸ் சாரதி இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

-(3)