”தற்போதைய தலைமைத்துவத்தில் நம்பிக்கை கொள்ள முடியாது”
நாட்டின் தற்போதைய தலைமைத்துவத்தில் நம்பிக்கை கொள்ள முடியாது என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஆராதனையின் பின்னர், கொழும்பு பேராயர் இதனை தெரிவித்தார்.
தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களமும் பொலிஸாரும் தயக்கம் காட்டி, பகிரங்கமாக முதலைக் கண்ணீர் சிந்துவதாகவும் நேர்மையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்குவது வேதனையளிப்பதாகவும் கொழும்பு பேராயர் குறிப்பிட்டார்.
அரச தரப்பின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இடையிலான இடைவெளி தெளிவாக புலப்படுவதாகவும் கத்தோலிக்க திருச்சபையுடன் நேர்மையான பேச்சுவார்த்தைக்கு தயார் என அண்மையில் அறிவித்த தற்போதைய ஜனாதிபதியும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் இரட்டைக் கொள்கையை கடைப்பிடிக்கின்றார்களா என்ற கேள்வி தமக்குள்ளதாகவும் அவர் கூறினார்.
மக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மனித மேன்மையையும் அழித்து, ஏகாதிபத்தியத்துடன் மக்களின் இறையாண்மையை எட்டி உதைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாட்டின் தலைமையின் மீது இன்று நம்பிக்கை கொள்ள முடியாதுள்ளதாக பேராயர் மேலும் குறிப்பிட்டார்.
-(3)




