நெடுந்தீவில் ஐவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது!
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வீடொன்றில் வைத்து மூன்று வயோதிப பெண்கள் உட்பட ஐவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் நேற்று (22) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
சந்தேகநபரான 51 வயதுடைய நபரிடம் இருந்து மூன்று தங்க நெக்லஸ்கள், இரண்டு ஜோடி தங்க வளையல்கள், தனி வளையல் ஒன்று, 8 மோதிரங்கள், இரண்டு காதணிகள் மற்றும் ஒரு பென்டன்ட் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் ஜேர்மனியில் சுமார் 20 வருடங்கள் வாழ்ந்து பின்னர் இந்நாட்டுக்கு வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
புங்குடுதீவு பகுதியிலுள்ள அமைந்துள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் சந்தேக நபரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அத்துடன் கொலையானவர்கள் எவரும் தூக்கித்தில் கொல்லப்படவில்லை. ஏனெனில் அவர்களின் இருவரின் சடலங்கள் வீட்டின் வெளியே காணப்படுகிறது. அதனால் அவர்கள் கொலையாளிகளிடம் இருந்து தப்பியோட முற்பட்டு கொலையாகி இருக்கலாம்.
மற்றுமொரு பெண்மணியின் சடலம் கட்டிலின் கீழே அவரது கால்கள் தொங்கிய நிலையில் காணப்படுவதனால் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டு வெட்டிய போது அவர் கட்டிலின் மேல் சரிந்து விழுந்தமைக்கு ஏது நிலையே காணப்படுகிறது.
அதேபோன்று ஜன்னல் ஓரமாக மீட்கப்பட்டவரின் சடலம் உள்ள ஐன்னல் குந்து மேல், சுவர் மீது இரத்தம் தெறித்து, வழிந்தோடிய அடையாளங்கள் காணப்படுவதனால் , அவர் நிற்கும் நிலையிலையே வெட்டப்பட்டுள்ளமைக்கான ஏது நிலை காணப்படுகிறது.
எனவே எவரும் நித்திரையில் இருக்கும் போது படுகொலை செய்யப்படவில்லை என நெடுந்தீவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை , வெளிநாடொன்றில் இருந்து அந்நாட்டினால் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்ட நபர் ஒருவர் , குறித்த வீட்டில் இவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்ததாக பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில், அவரை நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு முதல் பொலிஸார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-(3)




