வில்பத்து வனப்பகுதிக்கு ஜே.வி.பி. குழு விஜயம்: குடியேற்றம் குறித்து ஆராய்வு
மன்னார் வில்பத்து வனப்பகுதியை அழித்து அங்கு சட்டவிரோத குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களையடுத்து மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பிரதிநிதிகள் குழுவொன்று சனிக்கிழமை அந்தப் பகுதிக்கு விஜயம் மேற் கொண்டிருந்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த, வசந்த சமரசிங்க நாமல் கருணாரத்ன மற்றும் சுனில் வடகல உள்ளிட்ட குழுவினருடன் தெற்கு ஊடகவியலாளர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வாறு குறித்த பிரதேசத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட மக்கள் விடுதலை முன்னணி பிரதிநிதிகள் குழுவினர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், முசலி பிரதேச சபைத் தலைவர், முசலி பிரதேச செயலாளர், மற்றும் முசலிப்பிரதேச மக்களுடனும் கலந்துரையாடியுள்ளனர். இந்த விஜயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதினும் பிரசன்னமாகியிருந்தார்.
இதன்போது, மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் குழுவினருக் கும் ஊடகவியலாளர்களுக்கும் தெளிவுபடுத்தினார். குறித்த குழுவினர் மன்னார் மாவட்ட அரச அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரியவுடன் கலந்துரையாடிய போது, முசலிப் பிரதேசத்தில் எதுவிதமான சட்டவிரோத குடியேற்றங்கள் இடம்பெறவில்லை என்றும் அந்த மக்கள் தமது சொந்த மண்ணில் மீள்குடியேறி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
வில்பத்து வனப்பகுதியை அழித்து அங்கு சட்டவிரோதமாக முஸ்லிம் குடும்பங்களை அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீள்குடியேற்றி வருவதாக அண்மைக்காலமாக ஒருசில சிங்கள ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வந்துள்ள நிலையில், இந்தப் பிரச்சினை தொடர்பில் உண்மை நிலைமையை ஆராயும் நோக்கிலேயே இக்குழுவினரின் விஜயம் அமைந்துள்ள தாகத் தெரிவிக்கப்படுகிறது.






