குருந்தூர்மலையில் பொங்கல் வழிபாட்டுக்கு பொலிஸார் தடை
இன்றைய தினம் முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டுக்கு பொலிஸார் தடை ஏற்படுத்தினர்.
பக்தர்களோடு சென்றவர்களை பொலிஸாரும் சிங்கள மக்களோடு வந்திருந்த பௌத்த பிக்குகளும் பொங்குவதற்கு தடை ஏற்படுத்தினர்.
முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையினையும் மீறி தொல்லியல் திணைக்களம் விகாரை ஒன்றை அமைத்து நிறைவடையும் தறுவாயில் உள்ளது.
குருந்தூர் மலையில் இரண்டு சமுகத்தினரும் வழிபட முடியுமே தவிர எந்தவித கட்டுமானங்களையும் செய்ய முடியாது என நீதிமன்றக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இன்றைய தினம் 14.07.2023 வெள்ளிக்கிழமை சிவனுக்குரிய பிரதோச நாள் என்கின்றபடியால் பொங்கல் பொங்கி வழிபட பக்தர்கள் குருந்தூர்மலைக்கு சென்றார்கள்.
மலையின் அடிவாரத்தில் சென்றவர்களை பொலிஸார் சோதனையிட்ட பின்னரே மேல் மலைக்கு செல்ல அனுமதித்தனர்.
இங்கு பௌத்தவிகாரை அமைக்க பாடுபட்ட வெலிஓயா பண்சல பிரதம தேரர் தலைமையில் சிங்கள மக்கள் பஸ்களில் அழைத்துவரப்பட்டு பொங்கலை குழப்பும் விதமான செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
தொல்லியல் திணைக்களம் சில நிபந்தனைகளுடன் பொங்கலுக்கான அனுமதியினை வழங்கியபோதும் தேரர்களின் எதிர்ப்பினால் பொஸிஸார் பொங்கல் செய்ய முடியாது என தடை போட்டனர். காரணம் தொல்லியல் திணைக்களத்திற்குரிய இடம் என்பதால் நெருப்பு மூட்ட முடியாது எனத் தெரிவித்தனர்.
பஜனையில் ஈடுபட்ட பக்தர்களை பொலிஸார் வலுக்கட்டாயமாக எழுப்பி கலைத்தனர். இதன்போது சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் பொலிஸாரல் தாக்கப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை பொஸிசார் தரையில் இழுத்தனர்.
இறுதியில் பொங்கலுக்கு எடுத்துச் சென்ற பொருட்களை கட்டாயம் பொங்க வேண்டும் என்ற விடயத்தை பொஸிஸாரிடம் மீண்டும் மீண்டும் முன்வைத்தபோது பொலிஸார் மறுத்துவிட்டனர்.
பொங்கலுக்கு கொண்டு சென்ற பாலினை நிலத்தில் ஊற்றிவிட்டு ஆதிசிவன் ஐயனை வணங்கிவிட்டு பக்தர்கள் திரும்பினர்கள்.
-(3)




