செய்திகள்

ஜனாதிபதி தேர்தலை, தமிழ் மக்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் – ஏன் பயன்படுத்த வேண்டும்?

யதீந்திரா
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இ;டம்பெறவுள்ளது. வரவுசெலவுத்திட்டத்திற்கு பின்னர், இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். யார் பிரதான வேட்பாளர்கள் என்னும் தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை. எனினும் அவற்றை ஊகிப்பது கடினமான காரியமல்ல. ரணில் விக்கிரமசிங்கவே பிரதான வேட்பாளராக இருப்பார். அவரை எதிர்த்து எவர் நிறுத்தப்படுவார் என்பதை இப்போதைக்கு ஊகிப்பது கடினம். ஒன்றில் ரணில் விக்கிரமசிங்கவின் நகர்வுகளை தோற்கடிக்க வேண்டுமென்னும் வியூகமொன்று, உள்ளுக்குள்ளும் வெளியிலும் வகுக்கப்படுமாக இருந்தால் மட்டும்தான், ஒரு பலமான பொது வேட்பாளரை நாம் காண முடியும். இல்லாவிட்டால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முன்னால் ஒரு பலவீனமான வேட்பாளரே இருப்பார்.

ஒரு வேளை, சஜித் பிரேமதாச தேர்தலில் போட்டியிடுவாராயின், தேர்தல் களம் சற்று சூடுபிடிக்கும். ஏனெனில், ஜனாதிபதி தேர்தலில் எவர் வெல்ல வேண்டுமென்றாலும் கூட, அவருக்கு எண்ணிக்கையில் சிறுபாண்மை மக்களின் ஆதரவு கட்டாயம் தேவை. ஏனெனில் தற்போதுள்ள சூழலில்;, தனிச்சிங்கள வாக்குகளில் வெற்றிபெறுவதை ஒருவரால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவ்வாறான அரசியல் சூழலும் இல்லை, அதனை உருவாக்குவதற்கான அரசியல் காரணங்களும் இல்லை. ஈஸ்டர் தாக்குதல் கோட்டபாயவிற்கு அவ்வாறான சூழலை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

எண்ணிக்கையில் சிறுபாண்மை மக்களை பொறுத்தவரையில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முன்னால் ஒரு பலமான பொது வேட்டபாளர் இல்லையென்றால், மலையக மற்றும் முஸ்லிம் மக்களின் தெரிவு ரணிலாக மட்டுமே இருக்கும். இந்த நிலையில் தமிழ் மக்களின் வாக்குகள் மீண்டும் பிரதான இடத்தை பிடிக்கும்.

2005 தேர்தலில், ரணிலை தோற்கடிப்பதில் தமிழ் மக்களின் வாக்குகள் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. 2015இல், மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதில், தமிழ் மக்களின் வாக்குகள் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அவ்வாறானதொரு சந்தர்ப்பம் தமிழ் மக்களை நாடிவருகின்றது. இதனை தமிழ் தேசிய தலைமைகள் என்போர் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப் போகின்றனர்? முன்னைய இரண்டு சந்தர்ப்பங்களிலும், தமிழ் மக்களின் வாக்குகள், ஒரு இலக்கிற்காக கையாளப்பட்டது, அந்த இலக்கு வெற்றியையும் பெற்றது ஆனால் அதன் பயனை தமிழ் மக்களால் அடைய முடிந்ததா? பதில் இல்லை என்பதே! இந்த நிலையில் மீளவும் தமிழ் மக்களின் வாக்குகள், ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கை ஆற்றப் போகின்றது. ஆனால், இதனை தமிழ் மக்களுக்கு நன்மை சேர்பிக்கும் வகையில் எவ்வாறு கையாளுவது?

2005 தேர்தல் பகிஸ்கரிப்பு, ரணில் விக்கிரமசிங்கவை மட்டும் தோற்கடிக்கவில்லை – மாறாக, விடுதலைப் புலிகளையும் அரசியல் அரங்கிலிருந்து அழித்தது. ஏனெனில், ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான தேர்தல் பகிஸ்கரிப்பு, இந்திய மற்றும் மேற்குலக வியூகங்களுக்கு எதிரான ஒன்றாகவே நோக்கப்பட்டது.

இது தொடர்பில் எனது முன்னைய பத்திகளில் சிலவற்றிலும் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடனான இணைப்புக்கான திட்டங்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருந்தார். அதே வேளை, அமெரிக்காவோ, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான, ஜக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்கு கொண்டுவருவதில் ஆர்வம் காட்டியது. இவ்வாறானதொரு நிலையிலேயே, விடுதலைப் புலிகளின் தலைமை, ரணில் விக்கிரமசிங்கவை தேர்தல் பகிஸ்கரிப்பு மூலம், அதிகாரத்திலிருந்து அகற்றும் முடிவை எடுத்தது. விடுதலைப் புலிகளின் தலைமையை பொறுத்தவரையில், சமாதான முன்னெடுப்பு ஒரு அரசியல் பொறி, அதிலிருந்து தப்ப வேண்டுமாயின், ரணிலை அரங்கிலிருந்து, அகற்ற வேண்டும், அதன் மூலம், மீண்டும் யுத்தத்ததை ஆரம்பிப்பதற்கான சூழலை உருவாக்கலாம். ஏனெனில் சமாதானத்தை முன்னெடுக்கும் நோக்கம் இருந்திருந்தால், ரணிலுடன்தான், புலிகள் காலத்தை செலவிட்டிருக்க வேண்டும். அதனை முழுமூச்சுடன் கையாண்டிருக்க வேண்டும். ஆனால் மேற்குலகத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த, மகிந்த ராஜபக்சவை, தென்னிலங்கையின் தலைமைத்துவத்தை கைப்பற்றுவதற்கு ஒத்துழைத்தால், நோர்வே தலைமையிலான மேற்குலகின் சமாதான முன்னெடுப்புக்களை தொடர முடியாத சூழலை ஏற்படுத்தலாமென்றே புலிகள் கணக்குப் போட்டனர். அவர்களது கணக்கு சரி, ஏனெனில், அவர்கள் எதிர்பார்த்தது போன்றே, மகிந்த ராஜபக்ச நோர்வேயின் சமாதான முன்னெடுப்புக்களை தொடர்வதை விரும்பவில்லையென்று அறிவித்தார். நாங்களே பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வோம் என்றார்.

எவ்வாறு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்த பிரேமதாச, இந்திய படைகளை வெளியேற்றுவதற்காக விடுதலைப் புலிகளுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டாரோ, அவ்வாறானதொரு சூழல்தான், மகிந்த ராஜபக்ச விடயத்திலும் ஏற்படுத்தப்பட்டது. பிரேமதாச – புலிகள் உடன்பாட்டின் மூலம், இந்திய படைகளை வெளியேற்றும், அவர்களது எதிர்பார்ப்பு நிறைவேறியது. புலிகள்; தப்பித்துக் கொண்டனர். அதே போன்று, ரணிலை அகற்றும் அவர்களது இலக்கும் நிறைவேறியது. அவர்கள் எதிர்பார்த்தது போன்று, நோர்வேயின் சமாதான முன்னெப்புக்களிலிருந்து வெளியேறுவதற்கான சூழல் உருவாகியது. ஆனால் இம்முறை சத்திரசிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி மரணமுற்றார் – என்னும் நிலைமையே புலிகளுக்கு ஏற்பட்டது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், முழு வேகத்துடன் இராணுவரீதியில் புலிகளுக்கு எதிராக திரும்பிய போது, ஒட்டுமொத்த உலகும் புலிகளுக்கு எதிராக இருந்தது. முன்னர் இந்தியா மட்டுமே இருந்தது. இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமையால், புலிகளால் தப்பித்துக் கொள்ள முடிந்தது ஆனால் இம்முறை ஒட்டுமொத்த மேற்குலகும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இருந்தமையால், புலிகளால், யுத்தப் பொறியிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியவில்லை. சமாதான பொறியிலிருந்து தப்பித்துக் கொள்ளவதற்காக புலிகள் வகுத்த யுத்தப் பொறிக்குள், புலிகளே அகப்பட்டுக் கொண்டனர்.

இந்த பின்புலத்தில் நோக்கினால், ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்கும் தேர்தல் பகிஸ்கரிப்பு தந்திரோபாயம் இறுதியில், தமிழ் மக்களுக்கு மோசமான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தியது. 2015இல் மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் தந்திரோபாய நகர்விலும், தமிழ் மக்களின் வாக்குகள் பிரதான பங்கை வகித்திருந்தது. இந்த இடத்தில், சிலர், ஒரு வாதத்தை முன்வைக்கலாம். அதாவது, மலையக மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளும்தானே அவ்வாறு பயன்படுத்தப்பட்டது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளுக்கு மட்டும் அப்படியென்ன விசேட தகுதியுண்டு?

கேள்வியில் தவறில்லை ஆனால் தர்க்கரீதியில் தமிழ் மக்களின் வாக்குகள் ஆற்றும் பங்கை, ஏனையவர்களது வாக்குகள் வழங்காது. ஏனெனில், ஏனையவர்கள் எந்தவொரு சந்தர்பத்திலும், தேர்தல் பகிஸ்கரிப்பு அல்லது, குறிப்பிட்ட நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, தேர்தலை பயன்படுத்தும் தீர்மானங்களை எடுக்கவே மாட்டார்கள். ஏனெனில் அவர்களிடம் அவ்வாறான அரசியல் நிலைப்பாடு இல்லை. மத்தியிலுள்ள அரசாங்கத்துடன் பேரம்பேசி, அமைச்சுப் பொறுப்புக்களை பெறுவதன் மூலம், அரசியலை முன்னெடுப்பதே அவர்களிடமுள்ள அரசியல் உபாயமாகும். இந்த பின்புலத்தில் நோக்கினால், 2005இல் ரணிலை தோற்கடிப்பதில் ஈழத் தமிழ் வாக்குகளே பயன்பட்டது. அதே போன்று, 2015இல், மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதில் ஈழத் தமிழ் வாக்குகளே பிரதான பங்கை வகித்தது. அதே போன்று, 2024 தேர்தலிலும் ஈழத் தமிழ் வாக்குகளே பிரதான பங்கை வகிக்கப் போகின்றன. இந்த இடத்தை தமிழ் தலைமைகள் என்போர் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப் போகின்றனர்? இதனை அடிப்படையாகக் கொண்டு, எவ்வாறு தமிழ் மக்களை ஒரு அரசியல் சமூகமாக நிறுவப் போகின்றனர்?

தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்கள் முக்கியமாக ரணில் விக்கிரமசிங்க அல்லது சஜித்பிரேமதாச அல்லது பிறிதொருவர், எவராக இருப்பினும், அவர்கள் தமிழ் மக்களை நோக்கித் திரும்பும் சூழலை ஏற்படுத்த வேண்டும். வேறு வழியில்லாமல், தமிழ் மக்கள் தங்களுக்குத்தானே வாக்களிப்பார்களென்னும் எண்ணத்திற்கு வாய்ப்பளிக்கக் கூடாது. ஒரு வேளை ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு எண்ணுவதற்கான வாய்ப்புண்டு. ஏனெனில் இன்றைய நிலையில், ரணில் விக்கிரமசிங்கவிற்கு மாற்றான ஒருவரை முன்னிலைப்படுத்தக் கூடிய நிலையில் தென்னிலங்கையில் எந்தவொரு கட்சியும் இல்லை. இல்லாவிட்டால் அனைவருமாக பொது வேட்பாளர் ஒருரையே நிறுத்த வேண்டும். இந்தச் சூழலை தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாயின், தமிழ் மக்களின் வாக்குகளை ஒரு பலமான ராஜதந்திர ஆயுதமாக பயன்படுத்துவதற்கான தந்திரேபாயம் தொடர்பில் சிந்திக்க வேண்டும். ஒரு தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தி, வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் மக்களும் அவருக்கு வாக்களிக்கும் தீர்மானத்தை எடுக்கலாம். இதன் மூலம் வேறு வழியின்றி, தமிழர் தரப்போடு பேரம் பேச வேண்டிய நிர்பந்தம் தென்னிலங்கைக்கு உருவாகும்.

ஆனால் கடந்த காலத்தில், தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை கோமாளித்தனமாக்கியது போன்று, இம்முறை நடந்துகொள்ளக் கூடாது. இன்றைய நிலையில் தமிழ் பொது வேட்பாளருக்கு மிகவும் பொருத்தமானவர் இரா.சம்பந்தன் மட்டுமே. தேர்தல் பகிஸ்கரிப்பு உசிதமான அணுகுமுறையல்ல. அது ஜனநாயக விரோதமானதாகவே நோக்கப்படும். தேர்தலில் போட்டியிடும் தீர்மானத்தை அறிவித்தாலே, தென்னிலங்கை பதட்டமடையும். முக்கியமாக ரணில் பதட்டமடைவார். இதனை தேர்தலுக்கு முன்பாகவே, ஒரு பேரம் பேசுவதற்கான உக்தியாக கையாளலாம். சில விடயங்களை செய்து காண்பிக்குமாறு கூறலாம் அதே வேளை, 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தை, தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குமாறு நிபந்தனை விதிக்கலாம். காற்றுள்ள போது தூற்றிக்கொள்ளும் உபாயங்கள் தொடர்பில் தமிழ் தேசிய தரப்புக்கள் சிந்திக்க முன்வர வேண்டும்.