செய்திகள்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் மீண்டும் திருத்தம்!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொண்டு அந்த சட்டமூலத்தை மீண்டும் தயாரிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்காக கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதன்படி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருசில பிரிவுகள் தொடர்பாக ஆர்வம் காட்டுகின்ற பல தரப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களைக் கருத்தில் கொண்டு அச்சட்டமூலத்திற்குத் தேவையான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தற்போது வரைவாக்கம் செய்யப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திருத்தங்களை உள்வாங்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை மீண்டும் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
-(3)