காணாமல் போனோரின் உறவுகள் வடக்கு, கிழக்கில் போராட்டம்!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் வடக்கு, கிழக்கில் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவலுக்காகக் காத்திருக்கும் அவர்களது உறவினர்கள் இது தொடர்பில் பேரணியொன்றை நடத்தினர்.
இலங்கையிலும் இறுதிக்கட்ட போரின் போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வௌிப்படுத்துமாறு வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் சுழற்சி முறையிலான போராட்டம் வவுனியா நகரில் சுமார் 2383 நாட்களை கடந்து இன்றும் நடந்து வருகின்றது.
இவ்வாறான போராட்டங்கள் தொடர்ந்தாலும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் இன்றும் தேடல்கள் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றன.
இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று வடகிழக்கில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வடக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், சட்டத்தரணிகள், அருட்தந்தையர்கள் உட்பட பலர் இணைந்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் , மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் ஆரம்பமான குறித்த போராட்டம் மன்னார் சுற்று வட்டப் பாதை ஊடாக தபாலகம் வைத்தியசாலை ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இறுதி நிகழ்வுடன் நிறைவடைந்தது.
குறித்த போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தியும், காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்களை சுமந்து கொண்டும் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
-(3)




