ஏன் மீண்டும் 13வது திருத்தச்சட்டம் பேசுபொருளானது?
யதீந்திரா
13வது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசுவது தொடர்பில் பலவாறான அபிப்பிராயங்கள் கூறப்படுகின்றது. இன்றைய அரசியல் நிலைமைகளை புரிந்துகொண்டவர்கள் இதனை சரியென்று கூறுகின்றனர். தொடர்ந்தும் இப்படியே சென்றால் நிலைமைகள் மோசமடைந்துவிடும் – எனவே ஏதாவதொரு புள்ளியில் நாம் சந்திக்க வேண்டும். ஆனால், நிலைமைகளை புரிந்துகொள்ள மறுப்பவர்களோ அல்லது, புரிந்து கொள்ள விரும்பாதவர்களோ வேறு விதமாக பேசுகின்றனர். இவர்கள் இந்தியாவின் நிகழ்சிநிரலை முன்னெடுக்க விரும்புகின்றனர் – இது ஒரு சாராரின் கருத்து. இவர்கள் தமிழ் மக்களின் சமஸ்டிக் கோரிக்கையை திட்டமிட்டு பலவீனப்படுத்துகின்றனர் – இது இன்னொரு சாராரின் கருத்து. 13வது திருத்தம் என்றவுடன், இந்தியாவை தொடர்புபடுத்தி சிந்திக்கும் போக்கொன்றே மேலோங்கியிருக்கின்றது. இவ்வாறான அப்பிராயத்தை பரப்புவதையே சிலர் தங்களின் பணியாகவும் கொண்டிருக்கின்றனர்.
ஏன் 13வது திருத்தச்சட்டம் மீளவும் பேசுபொருளானது? 13வது திருத்தச்சட்டம் என்றவுடன் முட்டி மோதுவதற்கு காத்திருக்கும் எவரிடமும் இந்தக் கேள்விக்கு பதிலில்லை. ஆகக் குறைந்தது, இந்தக் கேள்வியின் அடிப்படையில், சிந்திப்பதற்குக் கூட, அவர்கள் தங்களை தயார்படுத்துவதில்லை. 13வது திருத்தச்சட்டத்தை ஒரு ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக்கொள்வதை முட்டாள்தனமென்று வாதிட முற்படுவர்களோ – தாங்கள் எவ்வாறானதொரு முட்டாள்தனத்துக்குள் சிக்குப்பட்டிருக்கின்றனர் என்பதை புரிந்துகொள்வதில்லை.
யுத்தம் முடிவுற்று 14 வருடங்களாகின்றன. இந்த காலத்தில் நடைபெற்றவைகள் ஏராளம். ஆனால் அதன் பின்னரும் 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசப்படுகின்றதென்றால், அதன் பொருள் என்ன? இந்தக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் தமிழர் அரசியல் செயற்பாடுகள் வெற்றியளிக்கவில்லை என்பதுதானே! கடந்த 14 வருடகால தமிழ் செயற்பாடுகள் தாக்கம் மிக்கதாக இருந்திருந்தால், 13வது திருத்தச்சட்டத்தை கையாள வேண்டிய நிலைமை ஏற்;பட்டிருக்காதல்லவா? இப்போது 13வது திருத்தச்சட்டம் பேசப்படுதவதற்கு உண்மையிலேயே யார் காரணம்? வெறுமனே சமஸ்டி பற்றி உளறிக் கொண்டு, தங்களின் குடும்ப அலுவல்களை பார்த்துக் கொண்டிருக்கும், தமிழ் தேசிய அரசியல்வாதிகள் (எல்லோரும் அல்ல) சிவில் சமூக பிரதிநிதிகள் என்போரா அல்லது, இருப்பதையாவது காப்பாற்றுவோம் என்று சிந்திப்பவர்களா? யார் இதற்கு காரணம்?
யுத்தம் முடிவுற்றதற்கு பின்னரான, கடந்த 14 வருடங்களில், 13வது திருத்தச்சட்டத்தை தாண்டிச் செல்வதற்கான அர்ப்பணிப்பை எவருமே காண்பிக்கவில்லை. உதாரணமாக, விடுதலைப் புலிகள் அரசியலை தீர்மானித்த காலத்தில், 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் மட்டுமல்ல – சமஸ்டி பற்றியோ, அல்லது, ஒரு நாடு இரண்டு தேசம் பற்றியும் பேசியதில்லை. ஏன்? – ஏனெனில், விடுதலைப் புலிகளின் வெற்றிவாதம் அனைத்தையும் செல்லாக் காசாக்கியது. ஏதோ பெரிதாக கிடைக்கப் போவதான ஒரு நிழல் அனைவரையும் ஆக்கிரமித்திருந்தது. அது உண்மையா அல்லது மாயையா என்பது பற்றிய சிந்திப்பதற்கும் எவருமே தயாராக இருக்கவில்லை. ஏனெனில், விடுதலைப் புலிகள் என்னும் பிரமாண்டத்திற்கு முன்னால் ஏனைய விடயங்கள் அனைத்தும் பெறுமதியற்றுப் போனது. அப்போதும் யதார்த்தமாக பேசியவர்கள் இருந்தனர் – ஆனால் அவர்களை பொருட்படுத்துவதற்கு எவரும் தயாராக இருக்கவில்லை. நான் உட்பட.

விடுதலைப் புலிகள் என்னும் பிரமாண்டம் மறைந்த போதுதான், அடுத்தது என்ன – என்னும் கேள்வி மேலெழுந்தது. இந்தக் கேள்விக்கான பதிலை தரக் கூடியவர்களாக சிலர் தமிழ் சமூகத்தின் முன்னால் காட்சியளித்தனர். முதலில் இரா.சம்பந்தன் என்னும் பார்வை மேலோங்கியது. பின்னர் சம்பந்தன் பொருத்தமானவர் அல்ல – அதற்கு மாற்றானவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – என்றும் சிலர் வாதிட்டனர். இப்போதும் அவ்வாறான குரல்கள் உண்டு. இற்கிடையில், அரசியலுக்கு புதிதாக வந்த சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பிலும் சிறிது காலம் அரசியல் காற்று வீசியது. அதுவும் அதிக காலம் நீடிக்கவில்லை. யுத்தத்திற்கு பின்னரான கடந்த 14 வருடகாலத்தை திரும்பிப் பார்த்தால், எவரிடமும் அர்பணிப்பு மிக்க அரசியல் செயற்பாடுகளை காண முடியவில்லை. இலங்கையின் ஆட்சியளார்கள் மீது நிர்பந்தங்களை ஏற்படுத்த எவராலும் முடியவில்லை. சர்வதேசம் என்னும் சொல்லும் எதிர்பார்த்த நன்மையை தரவில்லை. அவர்களை தமிழர் பக்கமாக திருப்பும் வல்லமையையும் எவரும் ஜனநயாக தளத்தில் நிரூபிக்கவில்லை. இந்த அடிப்படையில் 14 வருட கால தமிழர் அரசியல் செற்பாடுகள் படுதோல்வியையே அடையாளப்படுத்தியிருக்கின்றது.
இந்த நிலையில் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி சிந்திப்பவர்கள் என்னதான், செய்வதென்னும் கேள்வி மேலெழுந்தது. இதில் இன்னொரு விடயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். யுத்தம் முடிவுற்றதும் இந்தியா தொடர்பான கரிசனை எவரிடமும் இருந்திருக்கவில்லை. இந்தியா வழமைபோல் இலங்கை தொடர்பில் பேசுகின்ற போது, 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான தீர்வை உச்சரித்துக் கொண்டிருந்தது. ஆனால் சம்பந்தன் தரப்போ, 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் உச்சரிக்கக் கூட இல்லை. மாறாக, மகிந்த ராஜபக்ச 13 பிளஸ் என்னும் ஒன்றை உச்சரித்துக் கொண்டிருந்தார். ஆனால் அதிலும் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை.
2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, சம்பந்தனும் சுமந்திரனும் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசினர். அப்போதும் கூட நிலைமைகளை புரிந்துகொண்டவர்கள் 13வது திருத்தச்சட்டத்தை உச்சபட்சமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தினர். ஆனால் சம்பந்தனோ, 13வது திருத்தச்சட்டத்தை தாண்டி தாங்கள் அதிக தூரம் சென்றுவிட்டதாகவும், அது பற்றிப் பேசவேண்டியதில்லை – என்று கூறி, அனைவரதும் வாயை அடைத்தார். புதிய அரசியல் யாப்பு மூலம் பிரச்சினைக்கான தீர்வை நெருங்கிவிட்டதாக கூறினார். இறுதியில் என்ன நடந்தது?
இந்தக் காலத்தில், சம்பந்தன் தரப்பின் தவறுகளை சுட்டிக்காட்டும் அரசியலை செய்ய வேண்டிய கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ – அதற்கு, முற்றிலும் எதிர்மாறான, யதார்த்த விரோத அரசியலையே முன்னெடுத்தார். வர முடியாத அரசியல் யாப்பு தொடர்பில் கொள்கை விளக்கமளிக்கும் வேலையில் தனது நேரத்தை செலிவிட்டார். இதன் மூலம் சம்பந்தன் சுமந்திரனை விடவும் தாங்களே, தமிழ்த் தேசிய புனிதர்கள் என்னும் அரசியல் மாயையொன்றை ஏற்படுத்துவது ஒன்றே, அவர்களின் ஒரேயொரு இலக்காக இருந்தது. மொத்தத்தில் இரண்டு தரப்புக்களுமே மக்கள் விரோத அரசியலையே முன்னெடுத்தன. உண்மையில் சமபந்தன் தரப்பை குற்றம்சாட்டுபவர்கள், சம்பந்தனின் யதார்த்த விரோத செயற்பாடுகளை முன்வைத்தே, தங்களின் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களோ, சாதாரண மக்களின் நலன்களை முன்னிறுத்தியும் சிந்திக்கவுமில்லை, அதே வேளை தாங்கள் கூறியவற்றுக்கான உச்சபட்சமான அர்ப்பணிப்பையும் நிரூபிக்கவில்லை. வெறும் தேர்தல் மைய அரசியலை, முன்னெடுப்பதற்கான போட்டியிலேயே கவனம் செலுத்தினர்.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் தொடர்ந்தும் சமஸ்டியென்றும், சர்வதேச விசாரணையென்றும் தமிழ் மக்களை இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் ஏமாற்றிக் கொண்டிருப்பது? இப்படியொரு கேள்வி சற்று வெளியில் முகம் காட்ட ஆரம்பித்தது. யதார்த்தமாக சிந்திக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் பலரும் சிந்திக்கத் தலைப்பட்டனர். இந்த பின்புலத்தில்தான், மீண்டும் இந்தியாவை நோக்கி செல்ல வேண்டுமென்னும் கரிசனை முன்னாள் ஆயுத இயக்கங்களின் மத்தியில் பேசுபொருளானது. இந்த பின்புலத்தில்தான், டெலோ 13வது திருத்தச்சட்டத்தை ஆரப்பப் புள்ளியாக ஏற்றுக் கொள்ளும் விவாதத்திற்கு பிள்ளையார் சுழியிட்டது. பின்னர் ஏனைய கட்சிகளும் இந்த முயற்சியில் சங்கமித்தது. இந்த சந்தர்ப்பத்திலும் கூட, இரா.சம்பந்தன் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை. மீண்டும் வேதாளம் என்பது போல், இந்திய பிரதமருக்கான கடிதத்தில், தமிழ் கட்சிகள் மூன்றாக பிரிந்தன.
இதில் ஒரு அணியினரது, 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும் நிலைப்பாட்டை மலினப்படுத்தும் நோக்கிலேயே, ஏனைய தரப்புக்கள் கடிதங்களை அனுப்பியிருந்தன. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியின் சமஸ்டிக் கதைகள், தங்களின் தேர்தல் அரசியலை பலவீனப்படுத்தி விடுமோ என்னும் அடிப்படையில்தான், தமிரசு கட்சி சிந்திக்கின்றது. ஆனால் இது அடிப்படையிலேயே தவறானது. மக்களுக்கு எது நன்மையோ, அது பற்றி மட்டும்தான், மக்கள் தொடர்பில் சிந்திப்பவர்கள் கருத்தில்கொள்ள வேண்டும். மக்களை வாழ வைக்கும் முயற்சியில் தமிழ் தேசிய தரப்புக்கள் என்போரால் இதுவரையில் ஆக்கபூர்வமாக எதனையும் நிரூபிக்க முடியவில்லை.
இதற்கு அடிப்படையான காரணம், எதனை எக்காலத்தில் கையிலெடுக்க வேண்டுமோ, அதனை கையிலெடுக்க தமிழ் கட்சிகள் தவறுகின்றன. 2015 ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அனைத்து தரப்புகளும் ஓரணியாக 13வது திருத்தச்சட்டத்தை கையிலெடுத்திருந்தால், நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். அரசாங்கமும் வேறு வழியின்றி சில விடயங்களை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்குள் தள்ளப்பட்டிருக்கும். ஆனால் அந்த வாய்ப்பை தவறவிட்டதால், இன்று நிலைமை மேலும் சிக்கலடைந்திருக்கின்றது. 13வது திருத்தச்சட்;டத்தை அமுல்படுத்தும் விடயத்திற்கே கடுமையான நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன.
13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பேசுபவர்களை முட்டாள்களென்று கூறுபவர்களோ, மறுபுறம், சமஸ்டியை அடையும் வழியைச் சொல்லத் தெரியாத முட்டாள்களாக இருக்கின்றனர். தாங்கள் முட்டாள்களாக இருப்பதை மறைப்பதற்காகவே, அவர்களுக்கு சதிக் கோட்பாடுகள் தேவைப்படுகின்றன. 13வது திருத்தச்சட்டத்தை பற்றி எவரேனும் பேசினால் அவர்கள் இந்தியாவின் சம்பளப் பட்டியலில் இருப்பதான கதைகளை மக்கள் மத்தியில் பரப்ப முற்படுகின்றனர்.
13வது திருத்தச்சட்டம் தொடர்பில் சாதகமாக நோக்க வேண்டுமென்று கூறும், தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு, இந்;தியா நிதி வழங்குவதான கதைகளை கூறி, அவர்களின் ஈடுபாட்டை சீர்குலைக்க முற்படுகின்றனர். உண்மையில் இவ்வாறானவர்கள் யார், இவர்களது மக்கள் விரோத பின்னணி என்ன? இதற்கு பின்னால் சீனாவின் திரைமறைவு நகர்வுகள் இருக்கின்றதா? ஏன் அவ்வாறு நாம் சந்தேகிக்கக் கூடாது?
13வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக இந்தியா நிதிவழங்குவது உண்மையானால், 13வது திருத்தத்தை எதிர்ப்பவர்களுக்கு ஏன் சீனா நிதியளிக்க முடியாது? இதன் மூலம் இந்திய எதிர்ப்பு மனோபாவத்தை, வடக்கு கிழக்கு, தமிழ் மக்கள் மத்தியில் கூர்மைப்படுத்துவதற்கு சீனா முயற்சிக்கலாம்தானே! இதற்கு சில சீன முகவர்கள் துணை போகலாமல்லவா! இந்திய எதிர்ப்பு கருத்துக்களை, வடக்கு கிழக்கில் பரப்புவதை ஊக்குவிப்பதற்கான முகவர்கள் கிடைத்தால், சீனா நிச்சயம் அவர்களை பயன்படுத்திக்கொள்ளும். நான் தர்க்கரீதியில்தான், இந்தக் கேள்விகளை முன்வைக்கின்றேன் – அதாவது, 13வது ஆதரவுக்கு பின்னால் இந்தியா இருப்பது உண்மையாயின், 13 எதிர்ப்புக்கு பின்னால் சீனா இருப்பதற்கான காரணத்தை எவ்வாறு நாம் நிராகரிக்க முடியும்?
13எதிர்ப்பை முன்வைப்பவர்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம். ஒன்று, ஏழை தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பில் துளியளவும் அக்கறையில்லாதவர்கள். இரண்டு, இந்தியா தொடர்பான சதிக் கோட்பாடுகளை பரப்புவர்கள். மூன்று, சிங்கள தேசியவாத தரப்புக்களின் 13 எதிர்ப்பிற்கு துணைபோபவர்கள். நான்கு, அரசியல் தீர்விற்கான முயற்சிகளுக்கு, தமிழ் மக்கள் பக்கத்தில் ஆதரவில்லையென்னும், அரசாங்கத்தின் கருத்துக்கு வலுச் சேர்ப்பவர்கள். இப்போது ரணில் இவ்வாறானதொரு வாதத்தைத்தான் முன்வைக்கின்றார்.
இவர்களின் இலக்கு வெற்றிபெற்றால் நடக்கப் போவது ஒன்று மட்டுமே. அதாவது, வசதியுள்ள மத்தியதரவர்க்கம் நாட்டைவிட்டு வெளியேறிவிடும். வசதியில்லாத மக்களே மிஞ்சுவர். அவர்கள் அரசாங்கத்தின் பக்கமே இறுதியில் சாய்வர். ஏனெனில் – சோறே, அவர்களது பிரதான பிரச்சினையாக இருக்கும். ஆகக் குறைந்தது, 13வது திருத்தச்சட்டத்திலுள்ள சில விடயங்கள் அமுல்படுத்தப்பட்டால், ஓரளவு முன்னேறுவதற்கான அடித்தளம் உருவாகும். முற்றிலும் சாதகமாக அமையுமென்றோ, 13 ஒரு சர்வலோக நிவாரணியென்றோ நாங்கள் வாதிடவில்லை. இருப்பதை உச்சபட்டசமாக பயன்படுத்திக் கொண்டு இல்லாதவற்றுக்காக முற்சிப்பது பற்றியே நாம் வாதிடுகின்றோம். அது ஒன்றுதான் இன்றைய சூழலில் தக்கன பிழைப்பதற்கான ஒரே வழியாகும். தக்கன பிழைத்தல் என்பது, ஆற்றலோ அல்லது அறிவோ அல்ல – மாறாக, சூழ்நிலையை புரிந்து கொண்டு, அந்தச் சூழ்நிலைக்குள் தப்பிப்பிழைப்பதற்கான ஆற்றல் பற்றியது. அதற்கான உக்திகள் பறறியது. இன்றைய சூழலில் தக்கன பிழைத்தல் என்பது, இருப்பதை பாதுகாத்துக் கொண்டு, முன்னேறுவதற்காக காத்திருப்பதாகும்.

எனவே – அடிப்படையில் இன்றைய சூழலில், எவரெல்லாம், இருப்பதை பாதுகாத்துக் கொண்டு, முன்னேறலாம் – என்று, கூறுபவர்களை தோற்கடிக்க முயற்சிக்கின்றார்களோ, அவர்களைப் பற்றி, அவதூறுகளை பரப்புகின்றார்களோ, அவர்கள் அனைவருமே தமிழ் இன அடையாளத்தை, சிதைத்து, உருத்தெரியாமல் ஆக்கும் நீண்டகால இலக்கின் முகவர்களாவர்.


