சீன உளவுக் கப்பல்கள் எதுவும் இலங்கைக்கு வரவில்லை என்கிறார் ஜனாதிபதி ரணில்!
சீன உளவுக் கப்பல்கள் எதுவும் இலங்கைக்கு வரவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வின் பொதுச் சபையின் வருடாந்த அமர்வுகளையொட்டி, சர்வதேச சமாதானத்திற்கான கார்னகி எண்டோவ்மென்ட் மற்றும் சசகாவா அமைதி அறக்கட்டளை நடத்திய கலந்துரையாடலில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“உளவுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதை நிரூபிக்க எவரிடமும் ஆதாரம் இல்லை.
சீன அறிவியல் கழகம் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (நாரா) மற்றும் பல பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாலேயே சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன.
கடந்த 10 வருடங்களாக ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கைக்கு வருகின்றன. இதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த ஆராய்ச்சிக் கப்பல்களை உளவு பார்க்க பயன்படுத்தலாமா என்று ஒரு நாடு கேள்வி எழுப்பியது.
வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதி வழங்குவதற்கு இலங்கை நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) கொண்டுள்ளது. இது இலங்கை கடற்படையினரால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும்.
SOP தொடர்பாக அண்மையில் இந்தியாவுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதுடன், இந்தியா பரிந்துரைத்த திருத்தங்களுக்கு இலங்கை இடமளிக்கப்பட்டுள்ளது.
எனவே, இப்போது வரும் எந்தவொரு கப்பலும் இந்தியாவுடன் கலந்தாலோசித்து நாங்கள் கொண்டு வந்த நடைமுறைக்கு உட்பட்டது.
இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு கப்பலும் இலங்கைக்கு வருவதை என்னால் பார்க்க முடியவில்லை“ என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சீனாவின் உளவு கப்பலான ஷி யான்-6 எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி இலங்கைக்கு வர உள்ளது.
ஷி யான்-6 கப்பல் இலங்கையின் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய துறைமுகங்களில் நிறுத்தப்பட உள்ளது.
இந்த கப்பல் தற்போது தென் சீனக் கடலின் தெற்கு திசையில் பயணித்துக் கொண்டிருப்பதுடன், இந்த உளவுக் கப்பல் மலேசியாவின் மலாக்கா கடல் வழியாக இலங்கையை அடைய உள்ளது.
இலங்கை பொருளாதார மண்டலம் மற்றும் தெற்கு இந்தியப் பெருங்கடலின் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்த கப்பல் வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
-(3)




