ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் அனுபவத்தினூடு செல்லும் மானிடம்
மருத்துவர் சி.யமுனாநந்தா
இன்றைய உலகில் மதிநுட்பவெடிப்பு, மதிநுட்பவிரிவு, தொழில்நுட்ப ஒன்றிப்பு என்பன பாரிய அனுபவ மாற்றத்தினை ஏற்படுத்துகின்றன. தொழில்நுட்பவிருத்தியும் கணணித் தொழில்நுட்பமும், மனித சமுதாயத்தில் பிரமிக்கத்தக்க மாற்றங்களை உருவாக்கி உள்ளது. கணணியியல், செயற்கை மதிநுட்பம், உயிரியல் தொழில்நுட்பம் என்பன இயந்திரமனிதன் மீநுண்தொழில்நுட்பம் (நனோதொழில்நுட்பம்) என்பன மதிநுட்ப விரிவினை அடைவதற்கு ஏதுவாக அமைகின்றது. அதாவது மானிடத்தின் விஸ்வரூபத்தினை இவற்றினூடு தரிசிக்கலாம்.
மீதிறன் மிகுகணணிகள், தகவல் தொடர்பாடல் வலையமைப்பு, மின்னணு மனிதம் (ihuman) வழிப்படுத்தப்பட்ட உயிரியல் கூர்ப்பு என்பன மதிநுட்ப விஸ்வரூபமாக உருவெடுக்கும். இது தற்போதைய மதிநுட்பத்தைவிட பல மடங்கு பெரிது.
ஆர்முடுகும் ஆர்முடுகலான தொழில்நுட்பங்களாக கணணியியல், பிறப்புரிமையியல், தொழில்நுட்பம் மீநுண் தொழில்நுட்பம் அல்லது நனோதொழில்நுட்பம், செயற்கைநுண்ணறிவு என்பன விளங்குகின்றன. இவை மீமதிநுட்பத்தின் புதிய சகாப்தத்தினை உயிரியலிலும் மின்னணுமனிதத்திலும் ஏற்படுத்தும். மானிடத்தின் வெளிப்பாடுகளில் முதன்மையானதுதகவல் தொடர்பாடல் ஆகும்.
தகவல் தொடர்பாடலின் அடிப்படை அலகுகள் தொடர்பாடலிற்கான வேலையினதும் நேரத்தினது, அறிவினதும் பயன்பாட்டினது கணியமாக அதாவது பணமாகக் கருத மின்னணு நாணயங்கள் (Bitcoin) அமையும். உலகின் அனைத்துச் செயற்பாடுகளின் அளவு அல்லது அதற்கான பண்டமாற்றாக மீநுட்பநினைவுப் பெறுமதி அமையும். இது இலத்திரனியல் நாணயவடிவம் உறும் வேகமாக மாற்றமடையும் மானிடத்தின் சமூகப்பெறுமானம் தகவல் தொழில்நுட்ப தரவுசேமிப்பு மீள்பிரயோகம் என்பனவற்றின் ஒன்றியஏகப்படும் தன்மையில் (Singularity) தீர்மானிக்கப்படும் .

உலகில் தகவல் திரட்டுகளின் பரிணாமத்தையும் பரிமாணத்தையும் அணுகும்போது இற்றைக்கு 40,000 வருடங்களுக்கு முன் மனிதனால் ஓவியங்கள் தகவல் தொடர்பாடலாக பயன்படுத்தப்பட்டன. கி.மு.9000 வருடங்களில் குறியீடுகளும் கிமு. 3000 வருடங்களுக்குமுன் எழுத்துக்களும் கி.பி.300 வருடங்களில் அச்சுப்பிரதியாகமரக்குற்றியில் வடிவமைக்கப்பட்டதகவல்களும் அமைந்தன. கி.பி 11ம் நூற்றாண்டில் அசையும் அச்சு கண்டறியப்பட்டது.
கி.பி. 15ம் நூற்றாண்டில் அச்சகமும் தகவல் தொடர்பாடலில் மானிடத்தில் செல்வாக்குச் செலுத்தியது. இவையே பின்னாளில் கைத்தொழில் புரட்சி, சோசலியப்புரட்சி, கம்மியூனிசம் என்பனவற்றிற்கு அடிப்படையாக அமைந்தன. 1792இல் தொலைப்பிரதியும் 1876 இல் தொலைபேசியும் கண்டறியப்பட்டன. 19ம் நூற்றாண்டில் வானொலித் தொடர்பாலும் 1920இல் அசையும் படத் தொடர்பாடல், தொலைக்காட்சி என்பன மானிடத்தில் செல்வாக்குச் செலுத்தின. மிகவும் கடின கட்டமைப்புடைய கணனிமாதிரி 1931இல் உருவாக்கப்பட்டது. மின்காந்தபுலக்கணணிமாதிரி 1939இலும் மின் சுற்றுக்கணணி 1940 இலும் கண்டறியப்பட்டன. மேசைக்கணிகள் 1960இலும் நகர்த்தப்படக்கூடியகணணி 1971இலும் மடிக்கணணி 1980இலும் உருவாக்கப்பட்டன. மிடுக்குமிகு அலைபேசி (Smart phone) 2000ம் ஆண்டில் கண்டறியப்பட்டன.
1969-1972ம் ஆண்டுகளில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (நாசா) சந்திரனுக்கு விண்கலத்தையும் மனிதனையும் செலுத்தியபோது பயன்படுத்திய கணணிகளின் நினைவுக்கொள்ளளவு 74KB ஆக இருந்தது. ஆனால் தற்போது ஒரு அலைபேசியின் நினைவுக்கொள்ளளவு 32GB. அதாவது 1969 நாசா விஞ்ஞானிகள் பயன்படுத்திய கணனி நினைவுக் கொள்ளளவை விட தற்போது சாதாரண பாமரர் கூட 43×104 மடங்கு நினைவுக் கொள்ளளவுடன் அலைபேசியினைப் பயன்படுத்தலாம். இது மானிடத்தின் தொழில்நுட்ப விஸ்வரூபத்தின் சிறுபகுதியாகும்.
மனித நாகரிகத்தின் பாதையினை நாம் பின்நோக்கிப் பார்த்தால் அரம்பத்தில் மனிதன் பயன்படுத்திய பதார்த்தமாக கல், பின் வெண்கலம் அதன்பின் இரும்பு காணப்படுகின்றது. இவ்வாறே விரிவடைந்து சென்று இன்று பலபார உலோகங்களையும் நுண்மூலங்களையும் பூமியில் மட்டுமல்லசந்திரன் உட்பட ஏனைய கோள்களிலும் தேடுகின்றான். அவ்வாறே மானிட நாகரிகத்தில் மனிதன் பயன்படுத்தும் சக்திகளாக ஆரம்பத்தில் நீர்வலுவும் பின் நீராவியின் சக்தியும் பின் மின்சக்தியும் காணப்பட்டன. இன்று அணுக்கருப்பிளவு அணுக்கரு ஒன்றிப்பு என்பன மூலம் சக்திகள் உருவாக்கப்படுகின்றன. தற்போது மானிட நாகரிகத்துடன் தகவல் தொடர்பாடலானது மாற்றமடைந்து வருகின்றது. இவை தொடர்பாடலும் தகவல் சேகரிப்பும்,தகவல்களைக் கணிப்பிடல் என அமைகின்றன. இதில் அறிவுப்பெருக்கமும் நுண்மதித்திறன் பாய்ச்சலும் அபரிமிதமாக உள்ளன. தகவல் தொழில்நுட்பமும் தகவல் உருவாக்கமும் வேகமாக அதிகரித்து ஒன்றிய ஏகப்படும் தன்மை (Singularity) காணப்படுகின்றது.

வேகமாக அதிகரிக்கும் கணணிக் கணிப்பீடுகள், துரித தொடர்பாடல் வலையமைப்புக்கள் மின்காந்த அலைதகவல் தொழில்நுட்பம் என்பனவற்றின் மூலம் குறித்த கணத்தில் கணக்கற்றதொகையில் மக்கள் தொடர்பாடலை மேற்கொள்ளக கூடியதாக உள்ளது. தகவல் தொழில்நுட்பதரவுகளின் அளவு 2010ம் ஆண்டளவில் சீட்டாபைட் (Zetta byte) இணைத் தாண்டிவிட்டது. இது 2025ம் ஆண்டில் 181 ZBs ஆக அதிகரிக்கும் இவ்வாறே 2050ம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத்தரவுக் கொள்ளளவு Yotta byte (1024 byte) இனை அடையும்.
செயற்கை நுண்மதியில் முதலாவதாக கணணிவலையமைப்பு 1957 இல் உருவாக்கப்பட்டது. 1980 இல் கணணிகள் மூலம் நிகழ்வுகள் பரிமாறப்பட்டன. 1996 இல் செயற்கைநுண்மதி சதுரங்கநகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 2014ம் ஆண்டு Google ஆழ்மனம் உருவாக்கப்பட்டது.
நவீனகணணிகள், கணணிக் கணிப்பீடுகளிலும் தகவல்களை உருவாக்கலில் உதவுகின்றன. செய்கைமீநுண்மதிநுட்பம் கணணிக்கணிப்பிடல் தகவல் உருவாக்குல் என்பனவற்றுடன் மீநுண் தொழில்நுட்பம் (நனோதொழில்நுட்பம்) மருத்துவ மூலக்கூற்றுத் தொழில்நுட்பம் என்பனவும் இணைந்து ஒன்றிய ஏகத்துவம் மிக்க (singularity) மானிடம் எமது அண்மைய காலத்தில் உருவாக உள்ளமை தெளிவாகின்றது. இவ்வாறு ஒன்றிய ஏகத்துவமானிடத்தை உலகில் வாழும் மனிதர்கள் யாவரும் பயனுள்ளவகையில் அனுபவிப்பதற்காக சிறந்தபண்பாடு, கலாசாரம், வாழ்வியல், மனிதநேயம், மனித உரிமைகள். சூழல்நேயம், நீதி என்பனவற்றினை உள்ளடக்கிய தகவல் தொழில்நுட்ப நுண்மதிநுட்ப நினைவுக்கொள்ளளவும் உருவாக்கப்படல் வேண்டும். இதன்மூலம் சமூகவிரோத, சமூகஅழிப்பு, வன்செயல்கள் என்பனவற்றை இல்லாது ஒழிக்கலாம்.


