கோலாகலமாக நடைபெற்ற அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா
இந்தியாவின் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா இன்று (ஜன. 22) கோலாகலமாக நடைபெற்றது.
இன்று மதியம் 12.30 மணி அளவில் இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்டு கோவிலில் வைக்கப்பட்டிருந்த ‘ராம் லல்லா’ எனப்படும் பாலராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார். சிறப்பு வழிபாட்டுக்குப் பின்னர் அச்சிலையின் கண்களை மூடியிருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. கடந்த 18-ம் தேதி மதியமே, 1.28 மணியளவில், 51 அங்குல ராமர் சிலை கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டது.
முன்னதாக, அயோத்தி ராமர் கோவிலுக்கு பூஜை பொருட்கள், பட்டு வஸ்திரங்களுடன் வந்த பிரதமர் மோதி, அங்கு சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டார். இந்த வழிபாட்டில் மோதிக்கு அருகே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.
மேலும், இவர்கள் தவிர நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 15 பேரும் கலந்துகொண்டனர்.
பாலராமரின் கண்கள் திறந்து வைக்கப்பட்ட பின்னர் அயோத்தி ராமர் கோவிலை சுற்றி ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்டு, அயோத்திக்கு வரவழைக்கப்பட்டுள்ள இசைக்கலைஞர்கள் இந்நிகழ்வை முன்னிட்டு இசைக்கருவிகளை வாசித்தனர்.
ஜனவரி 23 ஆம் தேதிக்கு பின், அயோத்தியில் உள்ள ராமரை அனைவரும் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
-(3)




