செய்திகள்

தமிழ் முற்போக்கு கூட்டணி – ஐக்கிய மக்கள் சக்தி இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை! 

தேர்தலில் தமது கூட்டணியின் ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கே என்பதை தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று (14) உறுதிப்படுத்தியுள்ளது.

‘ஐக்கிய மக்கள் கூட்டணி” யில் பிரதான பங்காளிக்கட்சியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையில் இது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மலையகத் தமிழர்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலையை இலக்காகக்கொண்டே குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி உரிமை மற்றும் அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குதல் போன்ற விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதேபோல மலையக தமிழர்களின் அபிலாஷைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

மலையகத் தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்கான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளதுடன், பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19 ஆம் திகதி 10 ஆயிரம் வீட்டு திட்டமும் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மலையக தமிழர்கள் தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியும் உறுதிப்படுத்தலொன்றை வழங்கியுள்ளது.

அதேவேளை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவு யாருக்கு? இறுதி நேரத்தில் ரணிலிடம் கூட்டணி சரணடையுமா என்றெல்லாம்கூட ஊகங்கள் வெளியிடப்பட்டுவந்தன. இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சஜித்துக்கான ஆதரவை கூட்டணி இன்று அதுவும் காதலர் தினத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

-(3)