பாராளுமன்றத்தை கலைக்கத் திட்டமா?
ஜனாதிபதித் தேர்தல் உத்தியோகபூர்வமாக நடத்தப்பட வேண்டும் என்ற போதிலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்தால், பாராளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத்தேர்தலை நடத்த முடியும் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பல மாதங்களாக வெளிநாட்டில் தங்கியிருந்த பசில் ராஜபக்ஸ, நாடு திரும்பிய பின்னரே இவ்வாறு கூறியுள்ளார்.
பல மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்த பசில் ராஜபக்ஸ, இன்று காலை 8.30 அளவில் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானத்தில் நாடு திரும்பினார்.
அவரை வரவேற்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
விமான நிலைய வளாகத்தில் இருந்து வெளியே வந்த பின்னரும் ஆதரவாளர்கள் பசில் ராஜபக்ஸவிற்கு அமோக வரவேற்பளித்தனர்.
பசில் ராஜபக்ஸ பத்தரமுல்லையில் அமைந்துள்ள இல்லத்திற்கு சென்றதை அடுத்து, பொதுஜன பெரமுன தலைவர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர், பசில் ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடினர்.
எதிர்வரும் நாட்களில் எந்த தேர்தல் வந்தாலும் அதற்கு தயாராகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இதன்போது கூறினார்.
-(3)




