ஜனாதிபதியை சந்திக்கும் பசில், மஹிந்த: மீண்டும் ரணில் ராஜபக்சக்கள் ஆட்சியா?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தலைமை வகிக்கும் பசில் ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று வியாழக்கிழமை சந்திக்கவுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் எதிர்கால அரசியல் ஏற்பாடுகள் தொடர்பில் இரு தரப்பிடையே கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தலை கருத்திற் கொண்டு பல்வேறு கட்சிகளுக்கு இடையே தேர்தல் கூட்டணி உருவாகி வரும் வேளையில் இந்த சந்திப்பு நடைபெறுவது, பசில் ராஜபக்ச “ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைய போகின்றாரா?” என்ற கேள்வி எழுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவினால் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே உறுதியளித்துள்ளனர்.
ஜனாதிபதிக்கான மக்கள் ஆதரவைப் பெறுவதற்காக நாடு முழுவதும் அரசியல் பிரச்சாரங்களை இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மறுபுறம், “பசில் ராஜபக்ச ரணிலின் ஆடையை கழுவுவதற்காக நாட்டிற்கு வருகைத்தரவில்லை எனவும் நாட்டை வீணடிக்கும் செயற்பாட்டிற்கு அரசியல் ரீதியாக மஹிந்த ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் உதவி வழங்க மாட்டார்கள் என்பது வெளிப்படையான உண்மை” என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்காகவே பசில் ராஜபக்ஷ நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக உதயங்க வீரதுங்க உறுதியளித்துள்ள நிலையில் முதலில் ஜனாதிபதி தேர்தலா? அல்லது நாடாளுமன்ற தேர்தலா என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் குறித்து இதுவரை எந்தவொரு இறுதி முடிவையும் அறிவிக்கவில்லை.
இவ்வாறானதொரு சூழலில் எந்த தேர்தலை முதலில் நடாத்துவது என்பது குறித்து இரு தரப்பு கலந்துரையாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-(3)




