செய்திகள்

வட்டுக்கோட்டை இளைஞர் கொலை தொடர்பில் விரிவான விசாரணை!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படைச் சோதனை சாவடிக்கு அருகில் வைத்து தம்பதிகள் கடத்தப்பட்ட போது கடற்படையினர் நடந்து கொண்ட விதம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள கடற்படை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள கடற்படை ஊடகப் பேச்சாளர், சம்பந்தப்பட்ட கடற்படை வீரர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

வட்டுக்கோட்டை பொன்னாலைச் சந்தியில் கடற்படைச் சாவடிக்கு அருகில் தம்பதிகள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கடத்திச் செல்லப்பட்டதாக கடந்த 11 ஆம் திகதி தெரிவிக்கப்பட்டது. கடத்தப்பட்ட பிறகு குறித்த நபர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்நிலையிலேயே, கடற்படைச் சோதனை சாவடிக்கு அருகில் கடத்தல் சம்பவம் இடம்பெற்ற விதம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வௌியாகியுள்ளன.
தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு, தனது வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த இளைஞனையும் அவரது மனைவியையும் பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு அருகில் வைத்து, வன்முறை கும்பல் ஒன்றினால் வாகனத்தில் கடத்தி செல்லப்பட்டு, இளைஞன் மிக மோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்.

கடத்தி சென்ற இளைஞனின் மனைவியை சித்தன்கேணி பகுதியில் இறக்கி விட்டு வன்முறை கும்பல் தப்பி சென்று இருந்தது.

இந்நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், கடற்படை முகாமில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெரா காணொளிகளை புலனாய்வாளர்கள் பெற்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

-(3)