செய்திகள்

“ரணிலை நம்பாவிட்டால் என்னையாவது நம்புங்கள்”

தற்போதைய காலச்சூழலில் நாட்டை பொருளாதார நிதியில் முன்னேற்றக் கூடிய தலைமைத்துவ ஆளுமையும் ரணில் விக்கிரமசிங்கவிடம் மட்டுமே உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவரை வெற்றியடையச் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் துறைசார் நடைபெற்ற மக்களுடனான கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தார் என்பது முக்கியமல்ல.

ஆனால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான விருப்பம் தற்போது அவரிடம் காணப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட உள்ளார். அவர் மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என்பது எனது நிலைப்பாடு, அதற்கும் பல காரணங்களும் உள்ளன.

அரசியல் ரீதியில் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்கான தீர்வினை முன்வைக்க மாட்டார், அவரை எவ்வாறு நம்புவது? என சிலர் சிந்திக்கின்றனர்.

ரணிலை நம்பாவிட்டால் என்னை நம்புங்கள், நான் செய்விப்பேன் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

இதேவேளை பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக அழிக்கலாம் என பலர் நம்பபியிருக்கவில்லை. ஆனால் நான் நம்பியிருந்தேன். அது நடந்து நாடும் அமைதி நிலைக்கு வந்துவிட்டது.

அதேபோல, 13வது அரசியலமைப்பு திருத்தம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்களின் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியெனவும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்திருந்தேன்.

அதை அன்று பலர் கடுமையாக எதிர்த்தனர். இப்போது எதிர்த்தவர்கேளே 13 கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்துள்ளனர்.

ஆகவேதான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்குகளால் தமிழ் மக்களின் பலத்தை காட்டுங்கள்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை நான் பெற்றுத் தருவேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-(3)