வடக்கு ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டம்
காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கத்தினர் வடக்கு ஆளுநர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
வழித்தட அனுமதிகள் விற்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த போராட்டம் தொடர்பில் போராட்டக்காரர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
“கடந்த 40 வருடங்களாக காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கத்தில், பேருந்து உரிம மாற்றம் மேற்கொள்ளும் பொழுது சங்க உறுப்பினர்களுக்கிடையில் அறியப்படுத்தி வழித்தடத்தில் இருப்பவர்களுக்கிடையில் வழித்தட அனுமதி விற்கப்படுவது சங்கத்தின் யாப்புசார் வழமையாக இருந்து வருகின்றது.
எனினும் குறித்த சங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவர், வழித்தடத்தில் அல்லாத அராலி பகுதியினை சேர்ந்த ஒருவருக்கு வழித்தட அனுமதி பத்திரத்தினை விற்பனை செய்துள்ளார்.
இதுதொடர்பில் விற்பனை செய்வதற்கு முன்னரே வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆளுநருக்கும் அறியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்தே ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நீதிகோரி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது ஆளுநர் சார்பில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆளுநர் அலுவலக அதிகாரியிடம் பேருந்து சங்க பிரதிநிதிகள் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-(3)




