சமூகத்திற்கான கூட்டான மதிநுட்பம்
மருத்துவர். சி.யமுனாநந்தா
ஒரு சமூகம் மேன்மையடைய அச் சமூகத்தின் கூட்டான மதிநுட்பம் உன்னத நிலையில் இருத்தல் அவசியம். சமூகத்தின் கூட்டான மதிநுட்பம் நான்கு வகைகளாக அமையும். அவையாவன:
1. கூட்டான பொது மதிநுட்பம் (Collective General Intelligence)
2. கூட்டான உணர்வு எழுச்சி மதிநுட்பம் (Collective emotional intelligence)
3. கூட்டான சமூகத் தொடர்பாடல் மதிநுட்பம் (Collective Social Intelligence)
4. கூட்டான ஆன்மீக மதிநுட்பம் (Collective Spiritual Intelligence)
ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை கூட்டான பொதுமதிநுட்பம் உயர்வு நிலையிலேயே உள்ளது. ஆனால் கூட்டான உணர்வு எழுச்சி மதிநுட்பம், கூட்டான சமூகத் தொடர்பாடல் மதிநுட்பம், கூட்டான ஆன்மீக மதிநுட்பம் என்பன சிறப்பு நிலை அடையவில்லை.
குறிப்பாக அரசியல்வாதிகள் மதவாதிகள் சமூகத்தின் கூட்டான உணர்வு எழுச்சி மதிநுட்பத்தினையும், சமூகத்தின் சமூகத் தொடர்பாடல் மதிநுட்பத்தினையும், கூட்டான ஆன்மீக மதிநுட்பத்தினையும் தாழ்நிலைக்கு இட்டுச்செல்கின்றனர்.
குறிப்பாக இன்றைய புதிய உலக ஒழுங்கில் மனித உரிமைகளுக்கு மேற்கத்தைய நாடுகளாயினும் சரி, கீழத்தேய நாடுகளாயினும் சரி முன்னுரிமை கொடுப்பதில்லை. பொருளாதார உரிமைகளையே முதன்மைப்படுத்துகின்றனர். இச்சந்தர்பத்தில் ஈழத்தமிழர்களின் கூட்டான மதிநுட்பம், அச்சமூகத்தை பாதுகாப்பதில் உறுதுணையாக அமைய வேண்டும். இதனை உணராது மேற்கொள்ளப்படும் அரசியல் உணர்வெழுச்சித் தூண்டல்கள் தமிழினத்தை மேலும் பின்னிலைக்கு கொண்டு சேர்க்கும். குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் கூட்டான மதிநுட்பம், கூட்டான உணர்வு எழுச்சி மதிநுட்பம், கூட்டான சமூகத் தொடர்பாடல் மதிநுட்பம், கூட்டான ஆன்மீக மதிநுட்பம் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு உறுதியடைதல் அவசியம்.


