13ஆம் திருத்தம் தொடர்பான சஜித்தின் கருத்தால் அவரின் கட்சிக்குள் முறுகல்?
தனது ஆட்சிக் காலத்தில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியிருப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் நிறைவேற்றுக்குழு அல்லது செயற்குழுவில் கலந்துரையாடி ஆராயாமல் கட்சித் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் 13ஆம் திருத்தம் தொடர்பில் கூறியிருப்பதாக கட்சிக்குள் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் கிளிநொச்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் தாம் ஆட்சிக்கு வந்ததும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதனை கூறுவதற்கு தான் தயங்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




