”ஜனாதிபதியின் கருத்துகள் சட்ட ஆட்சியை அச்சுறுத்துகின்றன”
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாலின சமத்துவ சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிகும் வகையில் இந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
அத்துடன், பொதுமக்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கின்ற போதிலும், நீதிமன்றத்தின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவதற்கு சட்டமன்றம் அல்லது நிர்வாகத்தின் முயற்சிகளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விமர்சித்துள்ளது.
மேலும், நீதித்துறை சுதந்திரமானதாக இருப்பதுடன், அனைத்துவிதமான அழுத்தங்களிலிருந்தும் விடுபட அனுமதிக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதற்கு ஒரு குழுவை அமைப்பது பற்றி குறிப்பிடும் சமீபத்திய நாடாளுமன்ற விவாதங்கள் நீதித்துறை சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளாக கருதுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு முரணானதாகக் கருதப்படும் ஒரு சட்டமூலத்தை கட்டாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதியின் அறிக்கை நீதிமன்றத்திற்கும், ஒட்டுமொத்த நீதித்துறை அமைப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீளாய்வு செய்வதற்கான குழுவை அமைப்பது ஆபத்தான முன்னுதாரணமாக பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், எந்தவொரு தலையீடும் இலங்கை சட்ட ஆட்சிக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-(3)




