”மூழ்கவிருந்த கப்பலை கரை சேர்த்துவிட்டேன்”
நாட்டை நேசிக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து கடந்த இரண்டு வருடங்களில் நாட்டிற்காக மௌனமாக பாரிய பணிகளை செய்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த புதிய அரசியல் பயணத்தை பாதுகாத்து அதனை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டம் மற்றும் முன்நோக்கி செல்லும் வழிகள் குறித்து மக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் மாத்தறை கோட்டை விளையாட்டரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
“ஒன்றாக வெல்வோம் – நாம் மாத்தறை ” என்ற தொனிப்பொருளில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பொதுக் கூட்டத்தில் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது,
மூழ்கவிருந்த கப்பலை என்னிடம் ஒப்படைத்ததாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கூறினார். ஆனால், என்னிடம் டைட்டானிக் கப்பல் ஒன்றே ஒப்படைக்கப்பட்டது. அதனை நான் தற்போது துறைமுகத்திற்குக் கொண்டுவந்திருக்கிறேன். இருந்த மாலுமிகள் அனைவரும் தப்பியோடிவிட்டனர்.பனிப் பாறைக்குப் பயந்து அதனைப் பொறுப்பேற்க யாரும் இருக்கவில்லை. கப்பல் மூழ்கி நாம் பலியாவதா? அல்லது கரையொதுங்குவதா என்ற கேள்வியே இருந்தது.
நாம் தற்போது துறைமுகத்தை வந்தடைந்துள்ளோம். இந்தக் கப்பலுடன் நாம் என்ன செய்யப் போகிறோம். இந்தக் கப்பலைத் திருத்திக் கொண்டு இன்னும் 50 – 100 வருடங்களுக்குப் பாதுகாப்பாக பயணிக்கப் போகிறோமா? அல்லது தப்பியோடி மாலுமி ஒருவரிடம் கப்பலை ஒப்படைப்பதா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
அரசியலமைப்பின் படி பிரதமர் பதவி விலகினால், ஆளும் கட்சிக்கு அதிகாரத்தைப் பொறுப்பேற்க முடியாவிட்டால், எதிர்க்கட்சி அதனைப் பொறுப்பேற்க வேண்டும். விசேடமாக ஆளும் கட்சியின் ஆதரவு இருந்தது. ஆனால் அனைவரும் தப்பியோடினர். பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை அதனால் பதவியை பொறுப்பேற்க முடியுமா என்று என்னிடம் கேட்டனர். அவ்வாறான நிலையே அன்று இருந்தது. எங்களின் பொருளாதார முறைமை மட்டும் அன்று உடைந்துவிழவில்லை. எமது அரசியல் முறைமையும் உடைந்துவிட்டது.
எவ்வாறாயினும், நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டேன். இது வெற்றியடையாது என்று அனைவரும் கூறினார்கள். ஆனால் இந்த நாட்டு மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததுடன், என் மீதும் எனக்கு நம்பிக்கை இருந்தது.
ஐ.எம்.எப் உடன் பேச்சு நடத்தினேன். இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் நிதியுதவி வழங்கியிருந்தன. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதாக ஐ.எம்.எப். உள்ளிட்ட ஏனைய தரப்பினருக்கு வாக்குறுதியளித்துள்ளோம். அதாவது எமக்கு பணத்தை அச்சிட முடியாது, வங்கிகளிடமிருந்து கடன் பெற முடியாது. எனவே, எமக்கு வேறு வருமானம் தேவைப்பட்டது.
வற் வரியை அதிகரித்தோம். இது மிகக் கடினமான தீர்மானமாக இருந்தாலும் நாம் அந்தத் தீர்மானத்தை எடுத்தோம். இன்று நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தையும் நாம் முன்னேற்ற வேண்டியுள்ளது. வற் வரியை இனியும் அதிகரிக்கப் போவதில்லை. ஆனால் செல்வந்தர்களிடம் விசேட வரியொன்றை அறவிட நேரிடும்.
புதிய அரசியல் முறைமையொன்றை நாம் ஆரம்பித்துள்ளோம். நாட்டிற்கு முதலிடம். அதன்பின்னரே கட்சி. மொட்டுக் கட்சியினர் உள்ளிட்ட பல தரப்பினரும் எதிர்கட்சியிலும் இருக்கின்றனர்.
ஆனால் நாட்டிற்காக சிந்தித்து பணியாற்றும் பலரே தற்போது அரசாங்கத்தில் இருக்கின்றனர். நாம் முன்நோக்கிப் பயணிக்க வேண்டும். இந்தப் பணத்தில் நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
எம்முடன் இணைந்துகொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த பாராளுமன்றத்தில் ஒரு அரசாங்கத்தை அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் நாம் இந்தப் புதிய பாதையில் பயணிக்க வேண்டும்.
எதிர்க்காலத்தில் தலைமைத்துவத்தை எவ்வாறு பெறுவது? எவ்வாறு இந்தப் பணிகளை முன்னெடுப்பது என்று என்னிடம் கற்றுக்கொள்ளவும் முடியும். அனைவரும் ஒன்றிணைந்து இந்த அரசியல் முறையை மாற்றுவோம். தினமும் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதில் பலனில்லை.
நான் அவ்வாறு செய்யவில்லை. நாம் புதிய பாதையில் பயணிக்கிறோம். இதற்காக அர்ப்பணிக்க வேண்டும். நான் அதற்காக அர்ப்பணித்துள்ளேன்.
அடுத்த தேர்தலில் என்ன செய்யப் போகிறோம் என்பதை அனைவரும் பேசித் தீர்மானிக்கலாம். ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்பதைத் தீர்மானிக்கலாம். அதன்பின்னர் பாராளுமன்றத் தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்பதைத் தீர்மானிக்கலாம்.
அந்தத் தீர்மானங்களுக்கு இணங்க செயற்பட நானும் தயார். எங்களுக்கு இன்று தனிநபர், கட்சி சார்ப்பு அரசியல் இல்லை. நாம் நாடு குறித்து சிந்திக்க வேண்டும். நாட்டை முன்னிலைப்படுத்து முன்நோக்கிப் பயணிப்போம் என்று கூறவிரும்புகிறேன்.
இந்த வருடமும், அடுத்த வருடமும் தேர்தல்கள் வருகின்றன. ஜனாதிபதித் தேர்தல் வருகிறது. பாராளுமன்றத் தேர்தல் வருகிறது.
அதன்பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெற இருகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த பணம் இல்லை.
அதனால் அதனை இறுதியாக நடத்துமாறு கோரினார்கள். அதுகுறித்து கூச்சலிடத் தேவையில்லை. ஊர்வலம் வர முன்னர் மேளதாளங்கள் அவசியமில்லை.
இதுகுறித்தும் நாம் தீர்மானிக்க வேண்டும். எவ்வாறாயினும், நாம் எதிர்காலம் குறித்து சிந்தித்து பணியாற்றுவோம். அண்மைக்காலமாக நீங்கள் பட்ட துன்பம் குறித்து கவலையடைகிறேன். இந்த அரசாங்கம் அது தொடர்பில் கவலைகொள்கிறது.
அடுத்ததாக நாம் எடுத்த தீர்மானங்களை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனைப் பாதுகாத்துக் கொள்ள ஒன்றிணையுமாறு நாம் அனைவரையும் அழைக்கிறேன். எதிர்காலத்தில் புதிய பாதையில் பயணிக்க வருமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
-(3)




