செய்திகள்

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் இந்த வாரம் சபைக்கு வருமா?

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதலாம் வாசிப்பிற்காக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய 22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் கடந்த 18ஆம் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது. அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையின் (ஆ) பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள “ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட” எனும் சொல்லுக்கு மாற்றாக “ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட” எனும் சொல்லை பதிலீடு செய்து அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்திற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு 7 நாட்களின் பின்னர் பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்பிற்காக முன்வைக்கப்பட வேண்டும். இதன்படி எதிர்வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை அந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்பிற்காக முன்வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பின்னர் 14 நாட்களுக்குள் எந்தவொரு நபருக்கும் உயர்நீதிமன்றத்தில் குறித்த சட்டமூலம் தொடர்பில் ஆட்சேபனைகளை முன்வைத்து மனுவை சமர்ப்பிக்க முடியும். அதிலிருந்து 3 வாரங்களுக்குள் உயர்நீதிமன்றம் தமது வியாக்கியாணத்தை சபாநாயகர் மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதுடன் நீதிமன்ற அறிவிப்பை சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்.

இதன்போது அந்த சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்றால் அந்த திருத்தத்தை மேற்கொண்டு அந்த திருத்தத்தை அமைச்சரவையின் அனுமதியுடன் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனை தொடர்ந்து அந்த சட்டமூலத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதுடன், அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமாயின் ஜனாதிபதி ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டு அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
-(3)