கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் 166 பேர் உயிரிழப்பு
கேரளா – வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கி இரண்டு இலங்கை தமிழர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளதுடன், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், சுமார் 180 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலச்சரிவால் வயநாடு பகுதியில் உள்ள இரண்டு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த நிலச்சரிவு குறித்து ஜூலை 23ஆம் திகதி முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களில் இரண்டு இலங்கை தமிழர்களும் அடங்குவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
-(3)




