இலங்கை வந்துள்ள இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தமிழ்க் கட்சிகளுக்கு கூறிய ஆலோசனை!
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்தது என இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம், தேர்தல் புறக்கணிப்பு கோஷம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது கருத்து வெளியிட்ட இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல்,
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து தான் எதனையும் கூறப்போவதில்லை எனவும், இருப்பினும் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்று தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் கலந்துகொள்வதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும், ரெலோவின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனுக்கும், புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி சந்திப்பில் சிறீதரன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்த போதிலும், வெளிநாட்டுப் பயணமொன்றுக்குச் செல்ல வேண்டியிருந்ததன் காரணமாக சந்திப்பின் தொடக்கத்திலேயே சிறீதரன் வெளியேறியிருந்தார்.
அதற்கமைய இந்த சந்திப்பில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் ஜனாதிபதித் தேர்தல் நிலவரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
-(3)




