செய்திகள்
உள்ளூராட்சி வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் நண்பகலுடன் நிறைவு!
336 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை நண்பகலுடன் முடிவடையவுள்ளது.
28 மாநாகர சபைகள் , 36 நகர சபைகள் மற்றும் 272 பிரதேச சபைகள் அடங்கலான 336 உள்ளூரட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 17ஆம் திகதி முதல் தேர்தல்கள் செயலகத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதன்படி இன்றைய தினம் நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளது.
இதேவேளை 248 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் கட்டுப்பணத்தை தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் கடந்த 3ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று 19ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்துள்ளது.
இதனையடுத்து வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் இன்றுடன் முடிவடையவுள்ளது.
இன்று நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் பூர்தியான பின்னர் 1.30 மணி வரை ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்காக அரசியல் கட்சிகளுக்கும் சுயேற்சைக் குழுக்களுக்கும் சந்தர்ப்பங்கள் வழங்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான அறிவித்தலை தேர்தல்கள் தெரிவத்தாட்சி அதிகாரிகள் அறிவிக்கவுள்ளனர்.
இதேவேளை இன்றைய தினமே அதிகமான கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதால் நாடு பூராகவும் இன்றைய தினம் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு பொலிஸார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.
அத்துடன் வேட்பாளர்களினாலும் மற்றும் அரசியல் கட்சிகளினாலும் இந்த காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் பேரணிகள் உள்ளிட்ட பிரசார செயற்பாடுகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருப்பதனால் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பாதிப்பில்லாதவாறு அந்த அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சகல அரசியல் கட்சிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை மீறி செயற்படும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு எதிராக பொலிஸாரினூடாக கடும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன.
341 உள்ளூராட்சி சபைகளில் காலி மாவட்ட எல்பிட்டி உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் ஏற்கனேவே நடைபெற்றுள்ள நிலையில், ஏனைய 340 சபைகளில் பூநகரி பிரதேச சபை, மன்னார் பிரதேச சபை மற்றும் தெய்யத்த கண்டிய பிரதேச சபை தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கான வேப்பமனுக்கள் கோரல் இன்று நிறைவாடையவுள்ளது.
-(3)




