மீண்டும் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோன்?
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோனுக்கு வழங்கப்பட்ட நியமனம் சட்ட ரீதியானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தால் 2031ஆம் ஆண்டு வரை அவர் அந்த பதவியில் நீடிப்பார். எனவே தான் அவரை கைது செய்வதில் பொலிஸார் பின்வாங்கினர் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அது தவறான தகவலாகும். அவ்வாறு தேசபந்து தென்னகோனை தற்போது பொலிஸ்மா அதிபர் பதிவியிலிருந்து நீக்க முடியாது.
தற்போது நாட்டில் நீதிமன்ற தடையுத்தரவுக்கு உள்ளாகியுள்ள பொலிஸ்மா அதிபருடன், பதில் பொலிஸ்மா அதிபரொருவரும் இருக்கின்றார். வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபருக்குரிய பணிகளை செய்வதற்கு நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறெனில் தற்போதும் தேசபந்துவே பொலிஸ்மா அதிபராவார்.
நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறையிலிருக்கும் நிலையிலும், நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் அது குறித்து நாடாளுமன்றத்தால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாது.
அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது நேரடியாக நீதித்துறையில் நாடாளுமன்றம் ஆதிக்கம் செலுத்துவதாகவே அமையும். எனவே நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை தேசபந்து குறித்த எந்தவொரு தீர்மானத்தையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவோ, நிறைவேற்றவோ முடியாது என்றார்.
-(3)




