காங்கேசன்துறை தல்செவன ஹோட்டலில் சமூக விரோதச் செயற்பாடுகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு
வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள காங்கேசன் துறைப் பகுதியில் இராணுவத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தல்செவனக் ஹோட்டலில் தாராளமான சமூக விரோதச் செயல்கள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான சமூக விரோதச் செயல்களை மூடி மறைக்கும் முயற்சியில் இராணுவத்தினர் முனைப்புக் காட்டி வருவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற மனித உரிமைகள் பாதுகாப்பாளர்களைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டி தயாரிப்பதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்ட சிவில் சமூகத்தினராலேயே குறித்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வலி.வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள காங்கேசன்துறைப் பகுதி இன்னமும் விடுவித்து மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.ஆனாலும் இராணுவத்தினர் அங்கு தல்செவன எனும் ஹோட்டலொன்றினை நிறுவி நிர்வகித்து வருகின்றனர்.இக் ஹோட்டலுக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலைப்பாடும் காணப்படுகின்றது.எனினும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள்,தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் அங்கு இலகுவாகச் சென்று வருகிறார்கள்.ஆனால் வடபகுதி மக்கள் அங்கு செல்வதானால் இராணுவத்தினருடைய மேலதிகமான அனுமதி தேவை.
இந் நிலையில் குறைந்த பணத்திலிருந்து அதி கூடிய பணம் வரையான அறைகள் அங்கு வாடகைக்குக் கொடுக்கப்படுகின்றது.எந்தவிதமான கட்டுப்பாடுகளுமில்லாத வகையில் இளைஞர்கள்,மாணவ பருவத்தினருக்கும் அவ்வறைகள் வாடகைக்கு விடப்படுகின்றது.இதனால் எமது இளம் சமூகத்தினர் தவறான வழிக்குக் கொண்டு செல்லப்படுகின்றார்கள்.இது மட்டுமல்லாமல் குறித்த ஹோட்டல் அமைந்த பகுதி உயர் பாதுகாப்பு வலயம் என்பதால் பெரும்பாலானவர்கள் அங்கு செல்வதில்லை.இவ்வாறான தனிமைகளைப் பயன்படுத்தியும் சமூகத்திற்கு ஒவ்வாத பல செயற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகின்றன.குறிப்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினை அங்கு நடைபெறுகிறது.
ஆனால்,அவற்றை இராணுவத்திலுள்ள சிலர் மூடி மறைத்து வருகின்றனர் என்றும் மேற்படி கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட சிவில் சமூகத்தினர் தெரிவித்தனர்.
யாழ்.நகர் நிருபர்-




